கண்ணைத் திறந்தது

கண்ணைத் திறந்தது..!
10 / 01 / 2025

மரணமே...
நீ என்னைத் தழுவுமுன்
என்னைவிட்டு
என் நினைவு நழுவுமுன்
நான் எழுதத் துடிக்கும்
சில எண்ணத் துளிகள்..
அப்பா...
நாளை முதல் வேலைக்குப் போகவேண்டாம்.
கடன்காரன் முகத்தில் இனிமுழிக்க வேண்டாம்.
உடன்பிறந்தவர்கள் வாயில் விழவேண்டாம்.
சொந்தபந்தங்களின் வீண் அலப்பறைகள் தாங்க வேண்டாம்.
பொண்டாட்டி புள்ளைகளின் அதிகாரங்களை வாங்க வேண்டாம்.
உலகில் நடக்கும் அக்கிரம அவலங்களை காணவேண்டாம்.
விடுதலை..விடுதலை..விடுதலை ..
எல்லாவற்றிலும் இருந்து விடுதலை
யாரையும் பார்க்கவும் வேண்டாம்.
யாருக்கும் பதில் சொல்லவும் வேண்டாம்.
அப்பா..
நிரந்தர நிம்மதி.
சிம்ம கர்ஜனை என் காதில் கேட்டது.
மரண தேவனின் தரிசனம்
பேச்சைத் தொடங்கினான்.
மகனே..
தப்பித்து விட்டாய் என நினைத்தாயோ
மடையனே..
இறந்துவிட்டால் எல்லாம் முடிந்தது
என்று மகிழ்ந்தாயோ
நீ செய்த பாவங்கள்
நீ செய்த துரோகங்கள்
நீ செய்த அவலங்கள் - இனி
ஒன்றும் செய்யாது என்று
துள்ளி குதித்தாயோ...?
உன் சிலுவையை நீ சுமக்காமல்
உன் சந்ததியின் தோளில்
சுமத்தி விட்டாயே
உன் கடனை
அவர் அடைப்பது நியாயமோ?
பாவம் ஓரிடம்..பழி ஓரிடமா?
நீ இறந்தாலும் அந்த சாபம்
உன்னை விடாது.
உயிரோடு இருக்கும் போதே
உன் கணக்கை சரி செய்துவிடு.
உன் சிலுவையை நீயே சுமந்துவிடு
என்று ஆணையிட்டான்.
சட்டென விழிப்பு வந்தது.
ஓ..எல்லாம் கனவா?
கனவிலும் உண்மை
என்னை உலுக்கியது. - என்
ஊனக் கண்ணைத் திறந்தது.

எழுதியவர் : ஜீவன் ( மகேந்திரன் ) (10-Jan-25, 7:37 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 4

மேலே