சந்திரகாந்தம்--------அஹமது அலி
அர்த்தம் புரியா வார்த்தைகளுக்கு
அகராதியில் கிட்டா அர்த்தங்களை
அபிநயப் பார்வையில் சொல்லி
அபிநவம் புரிகிறாய்..!
@@@@@@@@@@@@@@@@@
அரும் சொற்களை
அருஞ்சொற்களாக்கி
அறிஞனென்ற மமதை உடைத்து
பொருள் தேட வைக்கிறாய்..!
@@@@@@@@@@@@@@@@@
உன் சொல்லின் வரியும்
உன் செயலின் நெறியும்
விளங்காமலே விடையளித்து
வியப்புக் குறிக்குள் அடைக்கிறாய்..!
@@@@@@@@@@@@@@@@@@@
மெளனப் புயலாய்
யவனத் துறைமுகம் கடந்து
தடங்கள் பதித்து தகர்த்து
எக்குறிப்பை உணர்த்துகிறாய்...!
@@@@@@@@@@@@@@@@@@@
நடை உடை பாவணைகளில்
படை கொண்டு வந்து
அளபெடையில்
அலற வைக்கிறாய்..!
@@@@@@@@@@@@@@@@@@@
பிடிக்குமென்றும் சொல்லாமல்
பிடிக்காதென்றும் சொல்லாமல்
வஞ்சப் புகழ்ச்சியில்
நெஞ்சு குடைகிறாய்..!
@@@@@@@@@@@@@@@@@@@
சந்திரனொளியில் நீராடும் நிலவு
நீருக்குச் சொந்தமில்லையென
என்னுள் உறவாடும் நீயும்
இல்பொருள் உவமையணியாகிறாய்..!
@@@@@@@@@@@@@@@@@@@@@
சமர்களில் சந்தித்தும்
சமாதானங்களில் சிந்தித்தும்
சம்மதம் எய்தா நிலையில்
சந்திப் பிழையாகவே நீடிக்கிறாய்..!
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மோனையாக முன் சென்றால்
எதுகையாக பின் தொடர்கிறேன்
சந்தமாய் சாந்தமாய் சம்மதம் கொடு
கவிதையாகட்டும் நம் உறவு..!
@@@@@@@@@@@@@@@@@@@@@@@2