எழுந்து நில்

சோர்வில் ஓய்ந்து உட்கார்ந்திருக்கும்
எனது அன்பு மகனே ..!
எழுந்திரு..! எழுந்தே இரு!
வாழ்க்கையின் வறண்ட பிரதேசங்களுக்கு
அவ்வப்போது சென்று வா..
உன் பசுமைகள் முதன் முதலில் உன் கண்களுக்கு புலப்படும்!
தோல்விகளை வரவேற்று இன்முகத்தோடு விருந்து கொடு..
அவை உன்னை வலுவிழக்க செய்யும் அம்புகள் அல்ல..
உன் வெற்றிகளுக்கு வழி சொல்லி தரும் போதகர்கள் !
வேற்று மொழியில் பேசுபவனோடு கொஞ்சம் அமர்ந்து பார்..
அவன் கண்களில் தெரியும் மனித நேயத்தை கண்டுபிடிக்கலாம்
மொழி தெரியாத போதிலும்..!
புதிய பாதைகள் ..தூரங்கள் கடந்து பார்..இது வரை நீ பார்க்காத
புல் எது.. முள் எது.. சுனை எது ..மலை எது..மடு எது ..என
புரிந்து கொள்ள வாய்ப்பு வரலாம்!
நேர் எதிர் எண்ணம் கொண்டவரோடும் பேசிப்பார்..சில சமயம்
உன் எண்ணங்களையே கூட மறு பரிசீலனைக்கு
உட்படுத்த வேண்டிய நிலை வரலாம்..!
சிகரங்களை அண்ணாந்து பார்..என்றாவது ஒரு நாள்
அதை தொடும் சக்தியை நீ பெறலாம் ..
ஓநாய்களின் ஓலம் கண்டு பயந்து நிற்காதே !
தொட்டு விட்டாலும் கர்வப் படாதே ..
அப்பொழுதும் சிகரம் உன்னை விட உயர்ந்ததே..!
ஆனாலும் நீ தாழ்வதில்லை.. சிகரங்களை தொடுபவன் என்பதால்!
ஓடி கொண்டேயிரு..ஏனென்றால் ... உப்பரிகையிலேயே
நீ எப்பொழுதும் இருந்து விடக் கூடாது என்பதற்காக!
ஓடு..ஓடி கொண்டேயிரு..உலகம் சுற்றுவதை நிறுத்துவதில்லை !