விவசா’ஈ’

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நவீன வாழ்க்கையில் முறையான - சரியான தகவல் பரிமாற்ற முறையும், ஞாபகசக்தியும் (சொந்த வீடு எங்கிருக்கிறது என்பது கூட மறக்கும் அளவுக்கு ஞாபகமறதி) நம்மிடம் இல்லையென்றால் நம் வாழ்க்கை எப்படி இருக்கும்? யோசித்துப் பாருங்கள்… அதே போன்ற வாழ்க்கையை தான் நாம் இப்போது தேனீக்களுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

வணிக லாபத்துக்காக செயற்கை உரத்தையும், பூச்சிக்கொல்லியையும், பயன்படுத்தி பயிர்களை வளர்க்கிறோம். அதுமட்டுமல்ல, மரபணு மாற்றப்பட்ட பயிர்களை விளைவிக்கிறோம். இதெல்லாம் தேனீக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கிறது. எப்படியென்றால்,. செயற்கை உரத்தில் உள்ள நியோ நிக்டினாய்ட்ஸ் எனப்படும் வேதிப்பொருள், தேனீக்களின் நரம்பு மண்டலத்தைப் பாதித்து அவற்றின் நினைவுத்திறனை மழுங்கடித்துவிடும். இதனால் கூட்டுக்குத் திரும்பும் வழி மறந்துபோய் பறந்துபோய் அலைந்து திரிந்து இறந்துவிடும். மரபணு மாற்றப்பட்ட உணவுப் பயிர்களின் விதைகளை 'டெர்மினேட்டர் சீட்ஸ்’ என்பார்கள். அதாவது, அந்தப் பயிர்கள் 'விதை தானியத்தை’ உருவாக்காது. மலட்டு விதைகளைத்தான் உருவாக்கும். அப்படியான மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் மகரந்தத்தில் உள்ள புரோட்டீன் தேனீக்களிடம் செரிமானக் கோளாறுகளை உண்டாக்கி, ஒரு கட்டத்தில் தேனீக்களைக் கொன்றேவிடும்
தேனி இனம் அழிவதால் நமக்கு என்ன வந்தது… தம்மாத்துண்டு ஈ தானே என்று குறைவாக எண்ணி விடாதீர்கள் நண்பரே. மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது! தேன் சேகரிக்கும்போது தேனீக்களின் காலில் ஒட்டிக்கொள்ளும் பூக்களின் மகரந்தம், அடுத்தடுத்து பூக்களின் மேல் உட்காரும்போது, விதவிதமான கூட்டணியுடன் பரவும். இதுதான் காடுகளின், சோலைகளின் பரவலுக்குக் காரணம். தேனீக்களை அதிகம் காடுகளுக்குள்தான் பார்க்க முடியும். காரணம், தேனீக்கள் இருக்கிற இடத்திலேயே இயற்கையாகவே அடர்ந்த காடுகள் உருவாகிவிடும்
இதிலிருந்து என்ன தெரிகிறது… தேனீக்களின் கையில் தான் நம்முடைய உணவுத் தேவைக்கான வாழ்வாதாரமே இருக்கிறது.

'தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம் இருக்காது!’ என்று சொல்லியிருக்கிறார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். அவர் கூறியது கோடியில் ஒரு வார்த்தை.
.
ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஐந்து வருடங்களாக விவசாய உற்பத்தி பெருமளவு குறைந்துவருவதற்குக் காரணம் தேனீக்களின் இறப்பு எனத் தெரியவந்தது. அதனால், அங்கு செயற்கை உரம், மரபணு மாற்றப்பட்ட விதைகள் போன்றவற்றைத் தடை செய்துவிட்டனர். வளர்ப்புத் தேனீக்களைப் பிடித்து வந்து தங்கள் வயல்களில் பறக்கவிட்டு மகரந்தச்சேர்க்கை உண்டாக்க முயற்சிக்கிறார்கள். பல லட்சம் தேனீக்களை அழித்த சுயநல மனிதனால், ஒரே ஒரு தேனீயைக்கூட உருவாக்க முடியாது. உண்மை தானே?

ஒரு இணைய தளத்தில் இருந்து செய்திகளை எடுத்துக் கொண்டு என்னுடைய கருத்துக்களையும் இணைத்துள்ளேன்.

எழுதியவர் : ஏ ஆர் முருகேசன் (13-Nov-14, 8:34 pm)
சேர்த்தது : murugesanar
பார்வை : 404

மேலே