ஒரேயொரு கதை சொல்லு

அம்மா
குட்டை பாவாடை அணிந்த
சுட்டிப் பெண் இல்லை
நான் இப்போது !
முடி நரைத்து உடல் பருத்து
கன்னத்து சதை வழிய
கரு வளையம் விழி தாங்க
களைத்து கிடக்கிறேன்
ஒரே ஒரு கதை சொல்லு !
மொட்டை மாடியில்
விண்மீன் விளக்கொளியில்
பனி பெய்யும் முன் இரவில்
எனைக் கட்டியணைத்த படி
வானில் நீ உலவ விட்ட
வந்தியத் தேவனும்
உன் முந்தானை பிடித்து
முகம் துடைத்து நடந்த போது
உருண்டை சோற்றுக்குள் நீ
ஒளித்து வைத்த கதை நாயகரும்
இரை தேடும் இம்சையில்
பொய்க் கதையாகிப்
போய் மறைந்தார் !
அம்மா
ஒளியிழந்து கிடக்கிறது
உன் கண்கள் !
ஓசையற்று கிடக்கிறது
உன் குரல் !
உனை கட்டியணைத்து
ஒரு கதை கேட்க ஆசை !
என்றாலும்
வான் நோக்கி வளரத் துடிக்கும்
விதையின் வேர் நோக்கி
நீர் பாய்ச்சும் வேள்வியில்
உழல்கிறேன் !
நேரமில்லை எனக்கு !
காலத்தின் பிடரியில் கை வைத்து
பின் நோக்கி செலுத்தும்
வித்தையும் அறியா காரணத்தால்
மறு ஜன்மம் பிறந்து வந்து உன்
மடி மீது தலை சாய்ப்பேன்
உறக்கம் தொலைத்த இரவுகளின்
உண்மை கதை சொல்லு !

எழுதியவர் : thilakavathy (20-Nov-14, 12:32 pm)
பார்வை : 106

மேலே