மொட்டாய் கருகினேன்

மொட்டாய் காத்திருந்தேன்
மலரும் தினம் பார்த்து....
சிட்டாய் பறந்து வந்து
சிறகொன்றை ஏந்தி கொண்டு
யோனி வழி வெளி வந்து
பூவுலகம் கண்டிடவே
புதையலாய் காத்திருந்தேன்
இருண்ட கருவரையில்
ஈரொன்பது வாரமாய்
இரவு பகல் பார்த்தறியேன்...
செல்ல மகள் உள்ளிருந்து
சில்மிஷங்கள் செய்து வந்தேன்
ஓடி ஓடி வேலை செய்து
உண்ண நேரமின்றி
உட்கார மனமின்றி
நின்றபடி விழுங்கி விட்டு
நித்தமும் பள்ளிசென்று
ஆசிரியப் பணியை
அறப்பணியாய் எண்ணிக்கொண்டு
அதற்கே தனை அற்பணித்து
மடியில் எனை சுமந்து
மனதில் மாணவர்களை சுமந்து
அவள் நேசிக்கும் கவிதை மறந்து எழுத்திணைய சொந்தம் மறந்து
உழன்று சுழன்று
செக்கு மாடாய் உழைத்த
என் அன்புத் தாயை விட்டு
இறைவனடிசென்று விட்டேன்
மொட்டிலே கருகி விட்டேன்...
அவள் முகம் காண மறந்து விட்டேன்
அகவை ஏதும் காணாமல்
அவள் அகப்"பை"யிலே பிணமானேன்
கனவுகள் கோடி சுமந்தவள்
கருவறையிலே
கல்லறை அமைத்தேன்...
மாதாவை விட்டொழிந்து
மரணத்தை முத்தமிட்டேன்
இறைவன் அழைத்தான்
மறுப்பின்றி சென்று விட்டேன்
பொக்கிஷமாய் எனை சுமந்த
புன்னியவதி கதறலும்
கேட்கவில்லை
புலம்பி அழும் கண்ணிரும்
கரைக்கவில்லை....
மீண்டும் அவள் கருவறை தேடி
ஜனனம் செய்ய
இறைவனிடம் இறைஞ்சுகிறேன்... நடை பிணமாய் வாழும் அவள்
நகை முகம் கொள்ள வேண்டும்
நான் மீண்டும் மகளாய் பிறக்க வேண்டும்....!

எழுதியவர் : சித்ரா ராஜ் (20-Nov-14, 3:19 pm)
பார்வை : 140

மேலே