என் கவிதைப் புத்தகத்தைப் புரட்டிப் பார்க்கிறேன் 23
ஒரு ஹை ஒரு கை அசைவு 1
உன்னையும்
காணவில்லை
உன் கடிதத்தையும்
காணவில்லை
ஏன்
வரவில்லை
கானலும்
வேனலும்
மௌனமும்
சிநேகிதத்தில்
கொடுமை
ஒரு
ஹாய்
ஒரு
கை அசைவு
போதும்
அந்த நினைவுகளுடன்
நான்
கனவில் நடப்பேன்
=====================================================================
நிலவு பாதி கனவு பாதி 2
காதல்
நிலவு பாதி
கனவு பாதி
இரண்டும்
பகலுக்குச்
சொந்தமில்லை
========================================================================
மல்லிகை மல்லிகையே 3
உள்ளங்களின்
உணர்வுகளில்
பூக்கும்
உண்மை மலர்
கவிதை
அழகாக
அடுக்கினால் என்ன
தொடுத்தால் என்ன
அள்ளிக் கொடுத்தால் என்ன
மல்லிகை
மல்லிகையே
கவிதை கவிதையே !
=======================================================================
மலர் விழிக் கவிதை நீ 4
இசைக்கும்
புல்லாங்குழல் நீ
இனிய விழிகளின் தீபம் நீ
இளவேனிற் தென்றல் நீ
பொழியும் நிலவு நீ
பூக்கும் புது மலர் நீ
புன்னகையின் ராகம் நீ
அந்தி வேளை நீ
அழகிய சோலை நீ
மாலையின் மயக்கமும் நீ
நான் இன்னும்
எழுதாத வரிகள் நீ
எழுத வேண்டிய புத்தகம் நீ
எழுதி விட்டால்
மலர் விழிக் கவிதை நீ
=======================================================================
முத்து நாடு சொத்து நாடு 5
முத்துக் குளித்து
முத்துக் குவித்த
முத்து நாடு
பழமை
பாண்டிய நாடு
நிலா சித்தர்கள்
நித்தம் தவம்
இயற்றும் நாடு
காதல் திருநாடு
முத்தமிழ் கொண்டு
முத்துச் சொற்கொண்டு
வித்தைகள் பல புரியும் நாடு
புதுக் கவிதை
இலக்கிய நாடு
சத்திய வேடமிட்டு
உத்தமன்போல்
நடித்து பொய் பேசி
சொத்துக்கள் கோடி
குவிக்கும் நாடு
அரசியல் நாடு
ஏமாற்று வித்தைகளில்
மதி மயங்கி
இளிச்ச வாய் சுப்பர்கள்
கோடியாய் குவிந்திருக்கும் நாடு
இந்த நாடு
பரந்த மனம் கொண்ட
பாரத மணித் திருநாடு
=======================================================================
வசந்தம் வரவேற்க வேண்டும் 6
விரல் மீட்டும் போது
வீணை
ஆனந்த இசை பாடவேண்டும்
விழி பார்க்கும் போது
காதல்
மொழி பேச வேண்டும்
முகில் பார்க்கும் போது
மழை பொழிய வேண்டும்
பூமி வளமாக வேண்டும்
தமிழ் பார்க்கும் போது
கவிதை
நெஞ்சில் நடம் ஆடவேண்டும்
நீயும் நானும் கைகோர்த்து வருகையில்
வசந்த மாலை நம்மை
வரவேற்க வேண்டும்
========================================================================
பேசுவதெல்லாம் கவிதை 7
சேர்த்து வைத்த
வார்த்தை எல்லாம்
கவிதை இல்லை
சேர்ந்து இருவர்
பேசும் வார்த்தை எல்லாம்
காதலில்
கவிதை
=======================================================================
நனையலாம் 8
சாரலில்
குற்றாலத்தில்
நனையலாம்
காதலில்
உன்
விழியோரப்
பார்வையில்
=======================================================================
சந்த்ரோதயம் 9
சாயந்திர வேளையில்
ஒரு
சந்த்ரோதயம்
அவள்
சன்னனலைத்
திறந்த போது
========================================================================
ஓம் சக்தி என்று போற்று 10
ஆறில் ஆழ்ந்து
அதி காலையில்
நாளும் நீராட
மண்ணில்
வாழ்வு நூறாகும்
நூறில் எட்டுடன்
உதடும் உள்ளமும்
நித்தம்
அவள் பெயர் போற்றிட
விண்ணில் சொர்க்கம்
உனக்காகும்
விண்ணும் மண்ணும்
வீணில் சுழலவில்லை
இங்கே
எழு ஞாயிறுடன் எழுந்து
இயற்கையை நாளும்
வணங்கிடு
உலகில் உன் ஆன்மா
உய்வு பெறும்
போற்று போற்று
ஞாயிறு போற்று
போற்று போற்று
இயற்கை போற்று
போற்று போற்று
ஓம் சக்தி ஓம் சக்தி
என்று போற்று
=======================================================================
------கவின் சாரலன்