பண்டிதனும் பரிசல்காரனும்

ஓர் ஊரில் நீலகண்ட சாஸ்திரி என்ற சாஸ்த்திர சம்பிரதாயங்களையும் இதிகாசங்களையும் கற்றுத்தேர்ந்த மேதை ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் தான் வேத இதிகாசங்களைக் கற்றுத் தேர்ந்தவன் என்ற மமதையில் வாழ்ந்து வந்தார்.
ஒரு நாள் அருகேயிருந்த ஊருக்குச் செல்ல அவர் ஆற்றினைக் கடக்க வேண்டி இருந்தது. ஒரு பரிசலை அமர்த்தி ஆற்றைக் கடக்கத் தொடங்கினார். அந்தப் பரிசலை ஓட்டியவன் படிக்காத பாமரன். அவனிடம் தற்பெருமை பேசி வந்த சாஸ்திரி, அவனை ஏளனம் செய்ய விரும்பி சில கேள்விகளைக் கேட்கத் தொடங்கினார். ஏ அப்பனே! நீ கம்ப இராமயணத்தைப் படித்திருக்கிறாயா? என்று கேட்டார். உடனே பரிசல்காரன்,’’ இல்லை ஐயா’’ என்று கூறினான். உடனே சாஸ்திரி, ‘’அடப்பாவி! உன் வாழ்க்கையின் கால் பங்கை வீணாக்கிவிட்டாய். சரிவிடு, மகாபாரதமாவது தெரியுமா? என்று கேட்டார். அதற்கும் அவன் ‘’தெரியாது சாமி’’ என்று மறுமொழி கூறினான். அதைக்கேட்டு பெரிதும் நகைத்த சாஸ்திரி,’’அடே முட்டாள்! உன் வாழ்வில் பாதியை வீணாக்கிவிட்டாய்’’ என்று ஏளனம் செய்தார்.
சாஸ்திரியின் பரிகாசத்தால் தலைகுனிந்த பரிசல்காரன், ’’ஐயா! தங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா? என்று பணிவுடன் கேட்டான். இதைக்கேட்டு திடுக்கிட்ட சாஸ்திரி,’’ அடே பாமரா! உனக்கு கேள்வி கேட்கும் ஞானம் கூட உண்டா? எல்லாம் கற்ற என்னிடம் என்ன கேட்கப் போகிறாய்? எந்தக் கேள்வியானாலும் என்னிடம் விளக்கமான பதிலுண்டு’’ என்று கர்வத்துடன் கூறினார்.
உடனே அந்த பரிசல்காரன்,’’ஐயா! தங்களுக்கு நீந்தத் தெரியுமா? என்று கேட்டான். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சாஸ்திரி, எனக்கு நீந்த மட்டும் தெரியாது.ஏன் கேட்கிறாய்’’ என்று வினவினார். அதற்கு அந்த பரிசல்காரன்,’’ஐயா, எதை எதையோ கற்றுத்தேர்ந்து பண்டிதனான நீங்கள் நீந்தக் கற்காமல், இப்படி வாழ்வு முழுவதையும் வீணாக்கப் போகிறீரே’’ என்றான். அதிர்ச்சியடைந்த சாஸ்திரி ஏனென்று கேட்டார். உடனே பரிசல்காரன்,’’பரிசலில் ஓட்டை விழுந்துவிட்டது. நடு ஆறு என்பதால் நீந்தினால்தான் தப்பிக்க முடியும். உங்களைக் காப்பாற்ற இயலாததற்கு மன்னிக்கவும்’’ என்று கூறிவிட்டு ஆற்றில் குதித்து நீந்தத் துவங்கினான்.
நீதி: எனக்கு அது தெரியும் இது தெரியும் என்று பீற்றிக் கொள்வதை விட்டுவிட்டு வாழ்க்கையில் அத்தியாவசிமானதை முதலில் கற்றுக் கொள். பட்டங்களாய் வாங்கிப் பயனில்லை.

எழுதியவர் : படித்தது (26-Nov-14, 6:16 pm)
பார்வை : 131

மேலே