முத்தம் எத்தனை

முத்தம் எத்தனை?

முத்தம் ஒன்றும் செய்யும் போதும்
சத்தம் அங்கும் கேட்கும் போதும்
முத்தம் என்றும் சத்தம் செய்யும்.
சித்தம் பொங்க வித்தை செய்யும்..

அன்பில் மலரும் ஆன்ம உறவுகள்
அங்கீ கரிக்கும் தேன்ம வரவுகள்
பண்பில் சிறந்து விளையும் முத்தமதோ!
நெஞ்சில் நனைத்து பதியும் முத்திரையோ!.

உயிரில் ஊறி உணர்வில் விரிந்திடும்.
உறவில் தேறி அறிவில் தெளிந்திடும்.
நினைவில் மீறி அணைவில் சித்தம்
இணைவில் மாறி இறுகுவதும் முத்தம்.

முத்தம் என்பது மோகம் முந்தலோ!
பித்தம் ஏறிய சித்தம் சிந்தலோ!
ஒத்தும் அன்பின் முத்திரை உந்தலோ
முத்தும் காதலின் சத்தியம் தந்தலோ!

முத்தம் என்றால் எத்தனை விதமோ
அத்தனை அன்பால் ஆவதும் பதமோ!
பெற்றவர் பிறந்தவர் மற்றவர் நட்பும்
நற்றவர் மதிப்பும் உச்சமும் முத்தம்.

உச்சி முகர்ந்து உள்ளன்பு கொண்டு
எச்சம் படாது நெற்றிப் பொட்டு
முத்திடும் முத்தம் முன்மொழி வாழ்த்தது
மற்றிட மெல்லாம் மண்முறை வார்த்தது.

காதல் என்பது காமம் தவிர்த்தது
காதல் அன்பில் கண்களில் கனிந்தது.
கண்கள் அறிய கன்னம் முத்தும்
எண்ணம் விரிய இச்சிடும் முத்தம்.

பச்சிளம் குழந்தை பரவசம் இன்பம்
மெச்சிட அருமை மகிழ்ந்திடும் முத்தம்
வச்சிடும் இடமெல்லாம் வாயுள் இனிக்கும்
இச்சுகம் பெறுவதும் வேறெங்கு கிடைக்கும்.?

ஒருபால் முத்தம் ஊக்கம் முடுக்கும்.
இருபால் முத்தம் தேக்கம் விடுக்கும்.
அன்பால் விளையும் அத்தனை முத்தமும்
தெம்பால் படைக்கும் ஒத்தணை சித்தமும்.

கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (27-Nov-14, 3:00 pm)
சேர்த்தது : கொ.பெ.பி.அய்யா.
Tanglish : mutham ethtnai
பார்வை : 138

மேலே