அறுபதாம் கல்யாணம்

யார் விதித்தார் அறியோம்
என்று விதைத்தார் என்றும் தெரியோம்
பார் அறிய பத்திரிகை பரப்பி
கணவன் மனைவி என்று ஆனோம்

தொட்டு தொடரும் சொந்தமோ
எண்கணித பஞ்சாங்கத்தின் திண்ணமோ
உற்றோர் பெற்றோர் நடுவினில்
நம்மாலான கோலம் வரைய போனோம்

சில நேரம் நாம் தேடிக்கொள்கிறோம்
பல நேரம் சார்ந்தோர் தேடிட இணைகிறோம்
மூச்சடக்கி ஒற்றுமை வேற்றுமைகளின்
நீரோட்டத்தில் மூழ்கி முத்துக்குளிக்க வாரோம்

நான்பாதி நீபாதி என்று ஆரம்பித்து
நான் பெரியவனா நீ பெரியவளா என குழம்பி
பிரம்மச்சரியம் வானப்ரஸ்தம் இடையே
சம்சாரத்தின் சாராம்சத்தில் சஞ்சரிக்கிறோம்

ஊசிமுனையின் நுனியில் தூசி எப்படி
காசு பணத்தில் வரவு செலவு கணக்கு இப்படி என்று
அனுசரித்து போகும் தத்துவம் மறந்து
அடுத்த வேலை சண்டைக்கு காரணம் தேடுகிறோம்

எல்லாம் சரிதான் என்ன பிரயோஜனம்
என்று அங்கலாய்த்து கதைக்க பழகிக்கொண்டு
அன்பும் அறனும் உடைத்து அழகிய
மக்கட்பேரு பெற்று வளர்க்கும் கட்டம் அடைகிறோம்

வானவில் மேலுள்ள வண்ணங்களும்
வரலாறு பூகோள கல்வியின் சந்தங்களும்
அவருக்கு சொல்லி கொடுக்கும் சாக்கில்
நாம் மீண்டும் ஒரு முறை கற்றுக்கொள்கிறோம்

வாய்ப்பாட்டு இசைக்கருவி விளையாட்டு
என அவருடன் ஆட்டம்பாட்டம் கொண்டாட்டமாய்
நல்லது கெட்டது எது என்று கால ஓட்டத்தின்
திருத்திய பட்டியலை பார்த்து தானே திருந்துகிறோம்

பட்டு பட்டு புத்தி நிறைய பயின்று
பரிட்சயம் நன்கு ஆகி பட்டயம் பெறுகிறோம்
நமது மகன் மகளுக்கு காலாகால
நிகழ்வுகளின் சுழற்சியில் சுற்றி அலைகிறோம்

நரைகூடி கிழப்பருவம் எய்தி தொய்வில்
சோர்வுற்று என்னென்னவோ நினைக்கும் நேரம்
சஷ்டியப்த பூர்த்தி என விழா எடுக்க
மைந்தர் பத்திரிகை அடிக்க பிழை பார்க்கிறோம்

எழுதியவர் : கார்முகில் (30-Nov-14, 7:53 pm)
சேர்த்தது : karmugil
Tanglish : kalyaanam
பார்வை : 2885

மேலே