அன்னையை அரவணைத்து தூங்கும் வரை
வருடம் இரு முறை இட்லி
தொட்டுக்க ஒரு சட்னியுடன்
வாரம் நான்கு முறை கம்மங்கூழ்
தொட்டுக்க சர்க்கரை வெல்லம்
மூக்கில் சீல் ஒழுகும் - முக திருஷ்டி
முந்தானையில் இருக்கும் நாணயம் - ஆசை காட்டி
கிழிந்த ட்ராயர் காட்டும் பின்னழகு
பொத்தானுக்கும் ஊக்குக்கும் இடையில்
காட்டும் தொப்புள் முன்னழகு
சேற்றுப்புண்கள் சொல்லும் செருப்பில்லா பாதங்கள்
வாய்ப்புண்கள் சொல்லும் சுகாதாரமில்லா தின்பண்டங்கள்
மின்விளக்கொளி இல்லா படித்தல்
மின்விசிறி இல்லா படுத்தல்
தலையணை இல்லா தரைகள்
தண்ணீர் சொட்டும் கூரைகள்
கஷ்டமாகதானிருந்தது
இரவினில் அன்னையை
அரவணைத்து தூங்கும் வரை...