பெண்ணே பெண்ணே - யாழ்மொழி

நேர்வழிப் பாதையில்
தடைகளுண்டு - பெண்ணே
நேர்மையெனும் ஆயுதமும்
துணைக்கு உண்டு

சேவைகள் செய்திட
நீ நினைத்தால் - பெண்ணே
சோதனைகள் பலவும்
முளைப்பதுண்டு

சமுதாயம் சமுதாயமென்று - நீ
சோர்ந்துவிட லாகாது பெண்ணே
சமுதாயம் என்பது யார்...? - அதை
சல்லடை கண்கொண்டு பார்

உதவுதல்
உத்தமமென் றுரைக்கும்
பெண்ணே
உதவிய கரங்களையே உடைக்கும்

நீதியென்றும்
நியாயமென்றும் பேசும் - அதை
நீ தட்டிக்கேட்டாலோ ஏசும்

துணிவது சிறப்பென்று போற்றும் - நீ
துணிந்து நின்றால் உனை தூற்றும்
நல்லவர் வழிவாழ சொன்னால் - உன்
நடத்தையிலே குறை சொல்லும்

பெண்ணென்றால்
முடக்குவது சுலபமென்று
கடைசி ஆயுதமாய்
கற்புதனை விமர்சிக்கும்

அஞ்சாதே அழுதிடாதே
அவச்சொல்லை யெண்ணி வருந்திடாதே
அறைக்குள்ளே அடைபட்டு - நீ
அவமானத்தால் வேகாதே

வாழ்வின் பாதைவழி
வருவோரெல்லாம் - பெண்ணே
வாழ்க்கை முடியும்வரை இருப்பதில்லை

விளங்கிவிட்ட உறவுகளுக்கு
விளக்கம் வீணே - பெண்ணே
விளங்கிடாத பிறவிகளுக்கு
விளக்குதல் வீணே

எண்ணங்கள் உயர தியானித்திடு - அதை
எவருக்கும் அஞ்சாமல் நிறைவேற்றிடு
பெண்ணுக்குள்ளும் ஓர் ஆண்மையுண்டு - என்ற
உண்மையினை உலகிற்கு உணர்த்திவிடு..

எழுதியவர் : (6-Dec-14, 11:29 am)
பார்வை : 148

மேலே