கவியாளனின் கற்பனை உலகம்- சந்தோஷ்

கவியாளனின் கற்பனை உலகம்..! - 1

தென்றல் வருடும்
புதுசுகமாய்..!
அன்னப்பறவையின்
பாத மென்மையாய்
புது கவிதையொன்று
வேண்டுமாம்...
என் தேவதையவளுக்கு..!


ஆகட்டும்..! எழுதுகிறேன்.
தமிழுக்கு வந்த சோதனை...!

என் கற்பனைவானின்
மெய்நிலவே.!என்
கனவுகளின் உறவே..!

இதோ நீ கேட்ட
தென்றல் சுகக்கவிதை
படித்துக்கொள்......!
-----------------------------------
செம்பொன் சமைத்த தேரில்
செங்கதிரோன் உருவான
கவியாளன் வருகிறான்....!

கவியாளன் வருகிறான் .
கவிதை உனையாள வருகிறான்..
காதலோடு வருகிறான்.
காதலியுனை மணக்க வருகிறான்.


காரிகை உன்னிடம் காதல்
கோரிக்கையிட வருகிறான்.
பொன்னோவியம் உனையெழுத
தூரிகையோடு வருகிறான்.

கவியாளன் வருகிறான்..!

வெண்ணிறப்புரவி ஐந்தோடு
பொன்னிற வாகனத்தில் உன்
பொன்மேனியாளன் குளிர் மார்கழியின்
வெண்ணிலவு நாழிகையில் வருகிறான்.

காதல் மன்னவனின் நினைவோடு.
சுத்த காமத்தின் விரதத்தோடு...
சொப்பனம்காணும் அற்புதத்தலைவியே..!

செந்தமிழ் மையெடுத்து..
புதுவித கோலெடுத்து
புதுநாயகன் வருகிறான்- உன்
விழிவேந்தன் வருகிறான்...!

விழியதிகாரம் படைத்திட்டவன்
புதுகாவியம் எழுதிட
கவியாளனாக வருகிறான்..!


என் இலக்கிய தேவதையே..!
காத்திரு.... காதலோடு.....!!

(தொடரும் )

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (9-Dec-14, 12:51 pm)
பார்வை : 321

மேலே