நிரந்தரம்
புழக்கத்தில் இல்லையென்றாலும்
பாழடைந்து போயிருந்தாலும்
உயர்ந்து ..நிமிர்ந்து..
ஆனால்..
அமைதியாக தவத்தில் இருப்பது
போல் மோன நிலையில்..
நிற்கிறது ..
கோட்டை..!
அதன் உள்ளே..
..
அதிர வைக்கும்
அரசர்களின் சிம்மக் குரல்களும்..
வாரியிறைத்த முத்துக் குவியல்களும்
போரில் வெற்றி கொண்டு
கொண்டு வந்த பொன்னும் பொருளும்
கொட்டப்பட்டு எழுந்த ஓசைகளும்..
அகம்பாவ அதிகாரிகளின்
அதிர்வேட்டு சப்தங்களும்..
கர்வத்தால் தலைகனத்த
பண்டிதர்கள் கலைஞர்கள் பாடல்களும்
அரண்மனை காவலரின் எச்சரிக்கை குரலும்..
அந்தப்புரத்தில் ஆசை நாயகிகள் அரசிகள்
அத்தனை பேரது நகைப்பொலியும்
காமக் கொடுமைகளால் விளைந்த
கதறல் ஒலிகளும்
...
எல்லாம் ..எல்லாம்..அமிழ்ந்து போய்
ஆரவாரமின்றி ..
நிற்கிறது கோட்டை..
வீரத்தின் விளக்கமாக..
இறுமாப்பின் சின்னமாக..
எச்சரிக்கை வடிவமாக!
அன்றும் ..
இன்றும்..என்றும்..
அதைச் சுற்றி வீசும்
தென்றல் மட்டும்
நிரந்தரமாக!