திரைப் பறவை
வருடம்: 1985
நாள்: மே மாதத்தில் ஒரு நாள்
நேரம்: இரவு 9 மணிக்கு மேல்.
ஊரே விரிந்த கண்களில்......
ப்ரொஜெக்டர் ஓடும் சத்தம் மட்டும், ரயிலோசையைத் திருப்பி போட்டது போல.....
"அயோ பாட்டி.... குத்திட்டான்..... மூக்குல குத்திட்டான்....."
நான் திடீரென என் மூக்கைப் பொத்திக் கொண்டு அழவே, உடன் இருந்தவர்கள் மற்றும் மடியின் என்னை அமர்த்தியிருந்த என் பாட்டி, கண நேரக் குழப்பத்திற்குப் பின் காட்சியின் வீரியம் புரிந்து சிரித்தார்கள்.....
ஆம், கதாநாயகன் திரைக்குள் கொடுத்த குத்து, அரைத் தூக்கத்தில் படம் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு விழுந்தததாக உணர வைத்த சினிமா அற்புதங்களின் உச்ச கட்ட அதிசயங்களின் ஒட்டு மொத்தம்.....
வருடம் :1990
அதே மே மாதத்தில் ஒரு நாள்.
நேரம்: பகல் 2 மணிக்கு மேல்....
ஊரே விரிந்த கண்களில் திரைக்குள் சுழல, நான் திரும்பி ப்ரொஜெக்டரைப் பார்த்துக் கொண்டிருந்தேன். தலை கீழாய் ஓடிக் கொண்டிருந்தது சினிமா...
தலைக்குள் நேராய் விழுந்து கொண்டிருந்தது கேள்விகளும் தேடல்களும்.....
சினிமா.....?..........................எப்படி?.......................
உள்ளூர் சினிமாவுக்குள் நுழைந்த கேள்வி, மெல்ல மெல்லத் தன்னை வீரியமாக்கிக் கொண்டு கற்பனைகளின் சிறகை விரித்துப் பறக்க...... அது உலக சினிமாவைக் கண்டு பிடித்து ரசித்தது....உலக சினிமாவை ரசிக்க வைக்க உரமாகியிருந்த உள்ளூர் சினிமா ஒன்றிலிருந்தே துவங்கியிருக்க வேண்டும் எனது உலக சினிமாவின் பார்வை.....
சினிமாவை அனைவரும் திரையில் பார்க்க, திரைக்கு எப்படி இந்த ஒளி வருகிறது என்று ப்ரொஜெக்டரை நோக்கித் திரும்பிய யோசனையே என்னை சினிமாவைத் தேடி ஓட வைத்தது.....சினிமா அழகியலின் மாயம்.. அது இனம் புரியாத இன்பத்தை வாரி வாரி வழங்குகிறது..... சினிமாவைக் காண்பதே சுகம் என்றால், அந்த சினிமாவைக் காட்டும் ப்ரொஜெக்டரை இயக்குவது என்பது.......!
நினைக்க நினைக்கத் ததும்பும் சந்தோசத்தில்.... நினைக்காத காட்சிகளின் கூட்டு சிறகை...கூடு விட்டு வானம் சமைக்க வைத்த என் தேடல், அது தேடல் என்று புரியாமலே.... புரிந்து கொண்டது ஒரு தேடலை....தெவிட்டாத சக்கர வாகப் பறவையாகிய கணப் பொழுது அது.... வானம் கொத்த துவங்கிய துருவ நட்சிதிரமாய்.. என் விழியெங்கும்..சிதறிக் கிடந்த கற்பனைகளின் நீட்சியின் முதல் துளி அது.....எடுக்க எடுக்க தீராத அமுத சுரபியாய்.... எனக்குள் அமிழப் போகும் சினிமாவை....கொத்தித் தின்னும்.. கூர் அலகின் அழகியலோடு..... ஆனந்த பரவச முக்தி நிலையின் ஒரு படிக்கு தலை வணங்கி நின்ற தருணம் அது.....
சுகமான கவிதைப் படிப்பது போலொரு அந்த தருணம் எனக்கு கிடைத்த என் 18வது வயதில்....... நான் சராசரியான சம்பவம் என்று கருதிய அந்த நிகழ்வு பின்னொரு நாளில் நான் கண்ட..........
திரை விரியும்....
கவிஜி