பெண்ணென்றால் பேயும் இறங்கும்
இந்த கட்டுரை பெண்களைப் பற்றியது என்பதால், முதலில் என்னை ஈன்ற என் தாய்க்கு வணக்கங்களை செலுத்திவிட்டே தொடங்குகிறேன். பெண்களைப் பற்றி அவ்வளவாக அறிந்திடாத இந்த சிறுவன் பெண்கள் மனதை புண்படுத்தும் நோக்கத்தோடு இதை எழுதவில்லை, அப்படி ஏதாவது மனம் வருந்தும்படி இருக்குமேயானால் சகோதரனை மன்னிக்க வேண்டுகிறேன்.
பெண்களில் பல ரகங்களும், பல வகைகளும் உண்டுதான், ஆனால் அவர்களைப் பற்றி அறியமுடியாதவைகள் எவ்வளவோ உண்டு. இல்லையென்றால் ஒருவனிடம் பேசிக்கொண்டு, மற்றொருவனைப் பார்த்துகொண்டு, மூன்றாவதாக இன்னொருவனை ஒரே நேரத்தில் காதலிக்கும் வித்தையை செய்ய பெண்களால் மட்டுமே முடியுமென்று அர்த்த சாஸ்திரத்தை எழுதிய அந்த சாணக்கியனே ஒப்புகொண்டு இருக்கமாட்டான்.
ஒவ்வொரு பெண்ணும் தான் ஒரு தாய் என்று உணருவதற்கு முன் ஒரு வாழ்க்கையும், தாய்மையை உணர்ந்த பிறகு முற்றிலும் மாறுபட்ட ஒரு வாழ்க்கையும் வாழ்வதாக தோன்றுகிறது. என்னைப்பொருத்தவரை தாய்மையை உணர்ந்த பிறகே ஒரு பெண் முழுமை அடைகிறாள் என்றே சொல்லத்தோன்றுகிறது. தாய்மையின் தத்துவம் உணர்ந்த எந்த பெண்ணும் பெண்மைக்குரிய இயல்புகளில் இருந்து எப்பொழுதும் விலகுவதில்லை. பெண்ம்மைக்குரிய இயற்கையான இயல்புகள் மாறிப்போன இன்றைய பெண்களுக்கு நான் கூறும் கருத்துக்கள் வருத்தத்தை ஏற்படுத்தினாலும் ஆச்சிரியபடுவதர்கில்லை.
பெண்கள் ஒரு காலத்தில் அடிமைபடுத்தபட்டு இருந்தார்கள் என்பதை எவரும் மறுத்துவிட முடியாது. ஆனால் இன்றைய பெண்கள் அடிமைபடுத்தபட்டு இருக்கிறார்கள் என்று கூற முடியுமா? கூற முடியுமா முடியாதா என்று தெரியவில்லையென்றால், உங்கள பாட்டியிடமோ உங்கள் அம்மாவிடமோ கேளுங்களேன், பாட்டி நீங்க ஆண்கள்கிட்ட அடிமைப்பட்டு கிடக்குரிங்களா? தாத்தா உங்கள அடிமையா வச்சி இருக்காரா? என்று கேட்டுப் பாருங்களேன், உங்க அப்பா உங்க அம்மாவை எப்படி வச்சி இருக்காருன்னு உங்களுக்கே தெரியும்தானே.
ஆனா பாருங்க இன்றைய கட்டத்தில் பெண்கள் பெரும்பாலும் அடிமைத் தனத்தில் இருந்தும், அடக்குமுறைகளில் இருந்தும் வெளிப்பட்டு, ஆண்களுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் காலூன்றிவிட்டார்கள். இது வரவேற்கத்தக்க விடயமே, இந்த வளர்ச்சி இன்னும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த வளர்ச்சி ஒருபுறமிருக்க, இந்த விடுதலையையே தவறாக பயன்படுத்துகிற, அதாவது முறையற்ற முறையில், இன்னும் சொல்லப்போனால் ஒரு தீர்க்கமான தெளிவான ஒழுக்க நெறிமுறையில் இல்லாமல் இருப்பதையே நான் குறிப்பிடுகிறேன். இப்படிப்பட்ட பெண்களைச் சுற்றி ஆபத்துக்கள் இருந்துகொண்டே இருக்கின்றன, அல்லது இவர்களே ஆபத்துகளாக இருந்துகொண்டு இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. நாகரீகம் என்ற பெயரில் பெண்மையை கலங்கப்படுத்துவதோடு, கலங்கத்தை விலைகொடுத்து வாங்குவதைபோல் தானே வரவழைத்தும் கொள்கிறார்கள்.
தனது அம்மா அப்பா அங்கே செல்லாதே, அதை செய்யாதே, வீட்டிலே பத்திரமாக இரு என்று சொல்வதும். தனது அண்ணன், அந்த பெண்ணோடு சேராதே, பள்ளிக்கு செல்லும்போது ஒழுங்காக செல். பசங்களோடு பழகாதே என்று சொல்வதும். தனது கணவன். பக்கத்து வீட்டு பெண்ணோடு பேசாதே, தண்ணீருக்கு செல்லும்போது தேவை இல்லாமல் பேசாதே, தெருவில் நிற்காதே என்று சொல்வதும் இன்றைய நவீனப் பெண்களுக்கு அடிமைபடுத்துவதாகவும், அடக்குமுறையாகவும்தான் தெரிகிறது.அது அடக்குமுறையா, எதுவும் பிரச்சனை வரகூடாது என்ற முன்னெச்சரிக்கையா? அல்லது தனது பாதுகாப்பிற்காகவா? தன்மேல் உள்ள அன்பான அக்கறையினாலே என்று எத்தனை பெண்கள் சிந்திக்கிறார்கள் என்று சத்தியமாக எனக்கு தெரியாது.
ஆனால் அன்று அடக்குமறை நடந்த காலங்களில்கூட நடக்காத பாலியல் வன்முறைகள் இன்று சாதரணமாக நடப்பதின் காரணம் என்ன என்று பார்த்தால், துர்புத்தி கொண்ட ஆண் மிருகங்கள் மட்டுமே அதற்கு காரணமாக இருந்தாலும்கூட, முழு காரணமும் அவர்கள் மட்டும்தான் என்று கூறிவிட இயலாத நிலையில் இருக்கிறோம், அதற்கு முக்கால்வாசி காரணம் பெண்கள்தான் என்று கூறத்தோன்றுகிறது. ஆம்,, பெண்கள் நாகரீகம் என்ற பெயரில் தனக்குதானே சூனியம் வைத்துக் கொள்கிறார்கள். இங்கே நான் எல்லா பெண்களுமே அப்படிதான் என்று கூறவில்லை. அன்று பெண்கள் அடங்கி கிடந்த காலங்களில் இத்தனை கீழ்த்தரமான சம்பவங்கள் நடந்தனவா என்று நீங்களே யோசித்து பாருங்களேன்.
அன்று பெண்களோடு மட்டும் பழகிய பெண்கள் இன்று ஆண்களையும் நண்பர்கள் என்று பழகுகிறார்கள், அவர்களோடு சினிமாவிற்கு செல்வதும், இருசக்கரவாகனங்களில் செல்வதும், நான்குசக்கர வாகனங்களில் செல்வதும். பேருந்து பயணங்களில் சிரித்து கூத்தடிப்பதும். தனிமைகளில் பயணங்கள் செய்வதும். அலுவலகங்களில் ஆண்களோடு சேர்ந்து சாப்பிடுவதும், அவர்களோடு பார்டிக்கு செல்வதும். ஆன் நண்பர்களின் பிறந்த நாளிற்காக விலை உயர்ந்த பரிசுகள் வாங்கி தருவதும், வாங்கி கொள்வதும், நினைத்த நேரங்கால் அலைபேசிகளில் உரையாடிகொள்வதும் - இவைகள் தான் தங்கள் சுதந்திரம் என்று பலரும் நினைக்க தொடங்கி இருக்கிறார்கள். இவைகள் எல்லாம் முற்றிலும் தவறு என்று நான் அடித்துகூற விரும்பவில்லை, ஆனால் இதானால் ஆபத்துகள் எளிதாக முளைத்துவிடுவதை மறுப்பதற்கில்லை. பெண்கள் சுதந்திரமாக இருக்கும் அதே நேரத்தில் தங்களுக்கு தாங்களே ஒரு பாதுகாப்பு வட்டத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும், இதைதான் செய்ய வேண்டும், இவ்வளவுதான் செய்ய வேண்டும் என்ற ஒரு சுயகட்டுப்பாட்டை அவர்கள் வகுத்துக்கொள்ள வேண்டும். யார் கட்டாயபடுத்தினாலும் அதற்குமேல் அந்த வட்டத்தை அவர்கள் தாண்டாமல் இருப்பது அவர்களுக்கு நல்லது என்றே நான் கருதுகிறேன்.
இப்படி சொல்வதால் உண்மையான நட்பினை இவன் கேபலபடுத்துகிறான் என்று நீங்கள் குமுறினால், அதற்காக முதலில் என் மன்னிப்பையும் முன் வைத்துவிடுகிறேன். ஆனால் நல்ல நட்பை முற்றிலும் இனம் கண்டுகொள்வதற்கு முன்பே சில பெண்கள் அவசரபட்டுவிடுகிரார்கள், அதன் விளைவையும் அனுபவிக்கிறார்கள். தங்களை திருத்திகொள்ளாமல் குற்றத்தை மட்டும் தயங்காமல் ஆண்கள்மீது சுமத்துவதில் அர்த்தமில்லை. அதற்காக ஆண்கள் அனைவரும் நல்லவர்கள், பெண்கள் அனைவரும் கெட்டவர்கள் என்று சித்தரிப்பதற்காக இதை நான் எழுதுகிறேன் என்று நீங்கள் நினைத்தால் அது உங்களுடைய தவறுதான்.
அண்மையில்கூட தளத்தில் தோழர் சுசீந்திரன் ஒரு கருத்து போட்டு இருந்தார், அதை பார்த்தபோதே இப்படி ஒரு கருத்துரை எழுத வேண்டும் என்று எனக்கும் தோன்றியது, ஆனால் இன்றுதான் எழுத முடிந்தது. ஆண்கள் சிலர் பெண்களை தேடி தேடி சென்று கருத்துக்கள் போடுகிறார்கள் இந்த தளத்தில். கருத்துக்கள் போட்டத்தும் அவர்களின்மீது பெண்களுக்கு உடனே நட்பு வந்துவிடுகிறது. பின்பு இவர்கள் கவிதைக்கு அவர்களும், அவர்கள் கவிதைக்கு இவர்களும், மாத்தி மாத்தி கருத்தும், மதிப்பெண்ணும் போட்டுக்கொள்கிறார்கள். பிறகு தனிவிடுகையில் உங்க படைப்பு நல்ல இருக்கு, உங்க படைப்பு நல்லா இருக்குனு பேச தொடங்குகிறார்கள். இது வழக்கமாகநடக்கும், இன்னும் மேலே போய் ஈமெயில் லிலும் பேசுவார்கள், அதற்கு மேலேவும் போய் அலைபேசிகளிலும் பேசலாம். இவ்வளவு தூரம் வந்த பிறகு அந்த நாய்த்தோல் போர்த்திய நரி, தன்னோட சுயரூபத்தை காட்டும்போது உடனே இவர்கள் பதறுவார்கள். இதை தைரியமாக தளத்தில் இறங்கி கண்டிக்கமுடியாமல் தெரிந்தவர்களிடும் கூறுவார்கள், அவர்கள் இவர்களுக்காக அவனிடம் வக்காலத்து வாங்குவார்கள். இப்படியும் எத்தனையோ தளத்தில் பார்த்து இருக்கிறேன். அதனால்தான் சொல்கிறேன் அவரவர்களின் பாதுகாப்பு என்பது அவர்கள் கையில்தான் இருக்கிறது. புரட்சிகரமாக பேசினால் மட்டும்போதாது, செயல்களிலும் புரட்சிகரமாக இருக்க வேண்டும். வீட்டிற்குள் நீராக இருக்கும் பெண்கள் வெளியிலே நெருப்பாக இருக்க வேண்டும்.
கண்ணகியோ, சீதையோ, காரைக்கால் அம்மையாரோ, வேலுநாச்சியாரோ ஆண்கள் தங்களை அடிமைபடுதுகிரார்கள் என்று எங்கேயும் கூறவில்லை, ஆனாலும் அவர்கள் விரும்பியே வாழ்ந்தார்கள், சுயகட்டுப்பாட்டை கடைபிடித்தார்கள். அன்பில்லாதவர்களிடம்கூட அன்புகாட்டத் தெரிந்த இவர்கள். அன்பானவர்களின்மீது மறந்தும்கூட அம்பு வீச முயற்சித்தது இல்லை. இன்றைக்கு பெரும்பான்மையான பெண்கள் சுதந்திரம் என்று கூறி முதலில் தனுக்கு பாதுகாப்பு வேலியாக இருக்கும் குடும்பத்தை தாண்டுகிறார்கள். வேலியே பயிரை மேய்ந்தாற்போல் என்று பழமொழி கேள்விட்டு இருப்பீர்கள், பயிரே வேலியை தாண்டி வெளியே சென்றால் ஆடு மாடுகளுக்கா குறைச்சல்?
அன்பு, காதல், காமம், வீரம், துணிச்சல், கோபம், குரோதம், வெறுப்பு, கண்ணீர், பிடிவாதம் இவைகள் எல்லாம் ஆண்களைவிடே பெண்களுக்கு மிக அதிகமாக இருக்கிறது. ஒரு பெண்ணிடம் மோதி வெல்வதென்பது அத்தனை எளிதான காரியமல்ல. ஒரு பெண் மனசு வைத்தால்மட்டுமெ எந்த ஒரு குடும்பமும் வாழும். ஆனாலும் பெண்கள் தியாகிகள், ஆண்களைவிட அதிகமான சக்திகள் இருந்தும்கூட அவர்கள் அதை எல்லாம் பொருட்படுத்தாது ஒதுக்கி விட்டுவிட்டு குடும்பத்திற்கு ஒளிகொடுக்கும் தீபங்களாக வாழ்கிறார்கள். தனக்குத்தானே ஒரு புனிதமான கட்டுப்பாட்டை கடைப்பிடித்து, தியாகச்சுடர்களாக ஒவ்வொரு குடும்பத்திலும் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்காக ஆண் வர்க்கங்கள் மிகுந்த கடமைப்பட்டு இருக்க வேண்டும். இதை நம் முன்னோர்கள் தெளிவாக அறிந்து இருக்கிறார்கள், ஆகையினால்தான் பெண்களை தெய்வம் என்கிறார்கள், மாரியாத்தா, காளியாத்தா, அங்காளம்மன், முத்தாலம்மன், பார்வதி இப்படி எல்லாம் சொல்லி சிலைவைத்து வணங்குகிறார்கள், பூமியை பூமாதேவி என்றும், கடலை கடல்தாய் என்றும், மலையை மலையரசி என்றும், இயற்கையை எழிலரசி என்றும், நதிகளை காவேரி என்றும், கங்கை என்றும், பொன்னி என்றும் வைகை என்றும் அழைக்கிறார்கள். இதை எல்லாம் இன்றைய பெண்கள் உணர வேண்டும்.
பொறுமையாக இருப்பது பெண்ணிற்கு பெருமையை சேர்க்கும், அடக்க ஒடுக்கத்தோடு பணிவாக இருப்பது அவளுக்கு மதிப்பையும் மரியாதையையும் தேடி தரும். அதற்காக உங்களுக்கு ஆபத்து வரும்பொழுதுகூட அடங்கி ஒடுங்கி இருக்க வேண்டுமென்ற அர்த்தமல்ல. ஆபத்து நேரங்களில் எனது சகோதரிகள் கரும்புலிகளை போல் சீறிப்பாய வேண்டும் என்பதே எனது வேண்டுகோளும்,
பெண்களில் பல ராகங்கள் உண்டு என்றாலும், அந்த ரகங்களை எல்லாம் நான் அறிந்தவன் அல்ல. பொன்னியின் செல்வனியில் இளைய பிராட்டி, அறிவிலும் ஆற்றலிலும், வீரத்திலும், அழகிலும் சிறந்தவள், அடக்க ஒடுக்கங்கலில் தமிழ் பெண்களுக்கே எடுத்துக்காட்டானவள். ஆனால் நந்தினி மிக அழகானவள், செருக்கு மிகுந்தவள், ஆண்களை வசியம் செய்வதில் வல்லவள். தந்திரம் நிறைந்தவள்.கொலை செய்யகூட தயங்காதவள் இப்படி இரு பெண்களுக்கும் உள்ள வேறுபாடு தெரிந்தது.
வேங்கையின் மைந்தனில் மகிந்தனின் மகள் ரோகனத்து இளவரசி ரோகினி, மிக அழகானவள், அன்பானவள், ஆனால் அந்த அன்பையே ஆயுதமாக்கி வீசுவதை அவளை அறியாமலேயே அவள் செய்யக்கூடியவள். ஆழ்ந்த யோசனை இல்லாத அவசர புத்தி கொண்டவள். அளவிற்கு மிஞ்சிய அன்பை காட்டியே தன் காதலனை இம்சை செய்தவள். அழுமூஞ்சி.இப்படியெல்லாம் சொல்லலாம். ஆனால் ராஜேந்திர சோழனின் மகள் அருள்மொழி அறிவு மிகுந்தவள், பெரியோர்களை மதிக்கும் பண்பு கொண்டவள். அழகில் சிறந்தவள், பழக இனிப்பானவள், அடக்க ஒடுக்கங்கலில் அவளை மிஞ்ச யாருமில்லை. தன் காதலனை காயம்படுத்த தெரியாதவள், காயம்பட்டு வந்தவனுக்கு தாயைப்போல் மருந்திட்டவள். ''ஆண்கள் மரங்கள், பெண்கள் கொடிகள் கொடிகள்தான் மரங்களை வளைத்துக் கொள்ளுமேதவிர, மரங்கள் கொடிகளை வளைத்துக்கொள்வதில்லை.'' என்றும் ''இந்த நாட்டில் கடவுள்கூட கணவனுக்குப் பிறகுதான்'' என்றும் அருள்மொழி ரோகிணியிடம் கூறும்போது எந்த ஒரு ஆணும் இப்படி ஒரு மனைவிதான் தனக்கு வேண்டுமென்று பேராசையில் ஏங்கி தவிக்கத் தொடங்கிவிடுவான். எத்தனை ஆழமாக தமிழின் பண்பாட்டை அவள் அறிந்து வைத்து இருக்கிறாள், எத்தனை துக்கம் வந்தபோதும் மனம் தளராத அந்த துணிச்சல்காரி.
இப்போது இவர்கள் இருவரும் வேறு சில ராகம் என்பதை புரிந்து இருப்பீர்கள், இப்படித்தான் இன்னும் இன்னும் பலரகங்கள் இருக்கின்றன. பெண்கள் நமது பழங்கால வரலாறுகளை வாசிக்க வேண்டும், நமது நாகரீகத்தையும் பண்பாட்டையும் தெரிந்துகொள்ள வேண்டும். இன்றைய கலிகால பெண்கள் நமது பண்பாடு மறந்தவர்களாக மாறிவிட்டார்கள். இவர்களை நாகரீகபேய் பிடித்து ஆட்டுகிறது, அதனால தாங்களே ஆபத்தை தேடிகொள்கிரார்கள்.
பெண்கள் விழிப்போடும் துடிப்போடும் இருக்க வேண்டிய காலம் இது. அவர்களின் பாதுகாப்பு என்பது அவர்களின் கைகளில்தான் இருக்கிறது. அவர்களின் விவேகத்தில்தான் இருக்கிறது. இதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். உடலைத்தின்னும் காமப்பிசாசுகளின் அட்டுழியம் நாளுக்கு நாள் மிகுந்துகொண்டு இருக்கிறது, பொதுவாகவே பெண்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும், முகநூளிலும் இணைய தளங்களிலும் உள்ள பெண்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றே நான் கருதுகிறேன், அதற்காகவே இந்த படைப்பு.
------------------தொடரும்.
----------------நிலாசூரியன்.