மீண்டுவா பாரதி
![](https://eluthu.com/images/loading.gif)
உன்னைப் போற்றிட எம்மால் இயலுமா?
உண்மை சொல்லிட எம்துயர் தீருமா?
அக்னிக் குஞ்சின் ஆற்றல் குறைந்ததோ?
தூண்டில் புழுவென சூரியன் தவிக்குதோ?
நல்லதோர் வீணை நலம்கெடப் புழுதியில்
நின்னைச் சரணடைய பாரதம் நினைக்கையில்
நாவு துணியவில்லை நல்லபதில் உரைக்கவே!
போதும் பிறவியென இருந்து விடாதே!
பெண்மை போற்றிய தமிழ்ப் பெருந்தகையே!
ரௌத்திரம் பழகிவிட்டோம் நியாயங்களை மறந்துவிட்டோம்
சுதந்திரம் எதுவென சொல்லவும் சொல்லிழந்தோம்
கற்பெனும் நீதியைக் களவு கொடுத்திட்டோம்
காணி நிலத்திற்கும் கத்துங்குயிலோசைக்கும்
உம்கவிதை வடிவிலேயே கனவுகள் காணுகிறோம்
கங்கை நதிப்புறத்தில் காவிரிக் கரையில்
காய்ந்த பூமியில் கடன் விதைத்திட்டோம்
மனிதவளமும் இயற்கைக் கொடையும் செழிக்கும்
நம் மண்ணை அந்நியச் செலவாணிக்காய்
அடகு வைத்திடும் எம்அடிமைப் புத்தியை
சாடிடவே உம்தமிழால் கவி கொண்டுவா!
நீ செழுமை செய்த வன்தமிழ்
வாள் பிடித்திடவே எம்மனம் ஏங்குது
அரசனிலையென அரியணை தவிக்குது
கவிராஜனே! உயிர் கொண்டு வா!