நம்கவி பாரதி - வினோதன்

தமிழை சுவாசித்து
தமிழ்த்தாயை நேசித்து
வசித்த - நானும் நீங்களும்
வாசித்த - ஒரு
கவிதைக்காரனின்
பிறந்த நாள் !

தன் தாயைப் போல
தமிழை பார்த்தான்.!
தமிழோ இவனை
தாய் போல் பார்க்கும் !

உம் எழுத்தும் வரியும்
எட்டி உதைக்கும்
அடிக்கடி அடிக்கும்
இடங்களுக்க்கெதிரே
சாதி சம்மணம் போட்டபடி !

பீரங்கி முனையை,
பேனா முனையால்
எதிர்த்த வீரன் !
வெள்ளையனை
புறமுதுகிட செய்த
எட்டயபுரம் !

உடல் உடுத்தவும்
உண்ணவும் தான்
பெண்னென கருதப்பட்ட
காலங்களில் - பெண்ணுரிமை
பேசித்திரிந்தவன் நீ !

முத்தமிழ் தாண்டி
நான்காவதாய்
ஓர் தமிழுக்கு - அவன்
சொந்தக்காரன் ..!
ஆம்! அது கோபத்தமிழ்..!

பார்த்தசராதி
பார்த்துகொண்டா இருந்தார் ?
யானையின் தாளால்
நீ தாக்குண்டபோது !

இக்கால கவிகளின்
'சுட்ட' கவிதைகள் - அவன்
சுடச்சுட பெத்துப்போட்ட
'சுடும்' கவிதைகளிடம்
அருகில் நிற்க
அருகதையற்றவை !

தேன் தடவிய
உம் கவிதை கண்ட
காலதேவன் - ரசித்தபடி
முகவாய் தடவி - உம்
அகவை குறைத்தான் !
அவைக்கவி ஆக்க !

ஒரு மணி
பதினோராம் நாள்
கடந்த நூற்றாண்டின்
இருபத்தியோராம் ஆண்டு,
தமிழ்த்தாயின் கண்ணீரை
முதன் முறையாக
இவ்வுலகம் பார்த்திருக்கும் !
ஆம், இதுவரை பாட மட்டுமே
மேடையேறிய பாரதி,
முதன்முறை பாடைஏறினான் !

காலன் கவ்வியது
அவன் பூதவுடல் மட்டுமே..!
கவிதையென விளித்த மறுநொடி
தமிழனின்
மூளை சுருக்கங்களிலிருந்து
முண்டாசோடு எழுவான்
என்கவி, நம்கவி பாரதி !

எழுதியவர் : வினோதன் (11-Dec-14, 9:33 am)
பார்வை : 72

மேலே