காணிநிலம் வேண்டும் -ரகு

தத்தித்தத்தி நடந்துவந்து
செம்பூத்துகள் -தன்
மென்கால்கள் பதிக்கும்

விரசமில்லாக் காதலில்
திளைக்கவே அணில்களுக்காக
இருவேறு செடிகள்
இலைகள் துளிர்க்கும்

சிறகுதிர்க்கும் வெண்நாரைகளின்
நீள்காத்திருப்பு புரியாமல்
மேய்வதில் மும்மூறம்காட்டும்
எருமையொன்று

வங்குபரிக்கும் மூஞ்சூருகளின்
இளங்கால்கள் வலிக்காமல்
வளைந்துகொடுக்கும் மண்திட்டு

நேற்றையமழையில் உயிர்த்து
புல்வெளியில் புரண்டுபடுக்கும்
பச்சைப்புழுக்கள்

நெடுநேரமாய்
நிமிர்ந்துநிற்கும்
சிறுஞ்செடிகள்கிடத்தி
சிறுத்துநகரும் சாரை

அமர்ந்தும்
சிறகடிக்கும்
தும்பியில் மயங்கி
தேனிழக்கும் தும்பை

எருமையிலமர்ந்து
எச்சமிடுங்காக்கை
கூட்டிலிருக்கும்
குயிலிட்ட முட்டைக்குஞ்சுகளுக்கு
இரைதேடிக் கரையும்

ஜோடியாகவே வந்தமரும்
மைனாக்களுக்கு பயந்து
உட்புகும் மண்புழுக்கள்

சிறிய காற்றுக்குள்
மண்துகள் தெளித்து
சிலாகிக்கும் சிட்டுகள்

உயிர் உயிர்
எங்கும் எல்லாம் உயிர்
முன்னொருகாலத்தில்

இன்று......

உயிரற்று உணர்வற்றுத்
தேமே என்று நிற்கிறது
ஒரு பெருங்கட்டிடம்
என் காணிநிலத்தில்!

எழுதியவர் : அ.ரகு (12-Dec-14, 6:41 pm)
பார்வை : 91

மேலே