மனசு துடிக்குது- பொள்ளாச்சி அபி

டீக்கடையில் தனி டம்ளரு.
ஓட்டலிலும் வெளியேதான் சோறு.

பொறந்ததிலேருந்து வேலை
பண்ணாடியோட தோப்புலே
ஆனாஇதுவரை நொழைஞ்சதில்லே
அவரோட வீட்டுலே

கொத்தடிமையா பட்டுவர்ற
கொடுமையெல்லாம் சொல்லிப்புட
கோவிலுக்கும் போனேன்.
கோபுரத்தைத்தவிர ஒண்ணும்
பாக்கமுடியல்லே..!

எப்படியாவது மரியாதை
வேணும்னுங்கிறதுக்காக
சபரிமலை அய்யப்பசாமிக்கு
மாலை போட்டேன்.

மலைக்குபோய்ட்டு வந்தும்
மாற்றம் ஒண்ணும் நடக்கலே..
மரியாதைக்காக வருஷம்பூரா
மாலைபோட செலவு நமக்கு
கட்டுப்படியாகலே..!

மாதாக் கோயிலுக்குப்
போனவங்களுக்கு
மாற்றம் நடக்குதுன்னு
சொன்னாங்க..!

மாதம்பூரா ஜெபத்துக்கு
வரச்சொன்னா பொழப்பு
நடக்குமா..? புரியலே..!

யாரோ சொன்னாங்கன்னு
அப்துல்காதர் ஆகிப்புட்டேன்.
ஆடுதிருடிட்டான்னு கேசு
கொடுத்தது யாருன்னு
தெரியல்லே..

இப்ப அமாவாசையின் மகன்
அப்துல்காதர் ஜெயிலில்
இருக்குறேன்..!

இங்கே எல்லாருக்கும்
ஒரே துணிதான்
பேரே இல்ல-வெறும்
நம்பருதான்..!

வெளிய பாக்காத சமத்துவம்
இங்கேயிருக்குது..
உள்ளேயே இருந்துவிட
மனசு துடிக்குது..!

எழுதியவர் : பொள்ளாச்சி அபி B +ve (16-Dec-14, 10:17 pm)
பார்வை : 352

மேலே