உண்ணார் பெரியரா வார்பிறர் கைத்து - சிறுபஞ்ச மூலம் 51
நேரிசை வெண்பா
உண்ணாமை நன்றவா நீக்கி விருந்துகண்மா(று)
எண்ணாமை நன்றிகழல் தீதெளியார் - எண்ணின்
அரியரா வார்பிறரிற் செல்லாரே யுண்ணார்
பெரியரா வார்பிறர் கைத்து! 51
– சிறுபஞ்ச மூலம்
பொருளுரை:
(துறந்து) அவாவினை யொழித்து உண்ணாது நோற்றல் நன்மையாகும்.
விருந்தினரை கண்மாறு முகம் மாறுபட்டு நினைத்து நடத்தாமலிருப்பது நன்மையாகும்.
தம்மின் எளியாரை இகழ்ந்துரைத்தல் தீமையாகும்.
ஆராயுமிடத்தில், பெறுதற்கரியராவார் யாரெனின் பிறரில்லாளை விரும்பி அவரிடத்திற் செல்லாதவரே.
பெரியராவார் யாரெனின் பிறர் கையில் உள்ள பொருளை அபகரிக்க எண்ணாதவரே.
கருத்துரை:
அவாவை யொழித்துத் துறந்து உண்ணாது நோற்றல் நன்மை, விருந்தினரைக் கண்ணோட்டஞ் செய்தல் நன்மை, எளியாரை யிகழ்தல் தீமை, பிறர் மனை நோக்காதவர் அரியர், பிறர் பொருளுண்ணாதவர் பெரியர் என்பதாம்.
உண்ணாமை நோற்றற்கேயாதலால், உணாமை என்பதற்கு, உண்ணாது நோற்றல் என்றுரை கூறப்பட்டது.
கண்மாறெண்ணாமை – கண் மாறுபாடு கொண்டு கண்ணோட்டஞ் செய்யாதிருத்தல்.
கைத்து - கையிலுள்ளது;
பொருள். விருந்துனர் மீது வெறுப்புறாமையும் பிறர் மனை விரும்பாதிருத்தலும் சிறந்த அறங்களாம்.

