அயிற்கதவம் பாய்ந்துழக்கி ஆற்றல்சால் மன்னர் - முத்தொள்ளாயிரம் 56
இன்னிசை வெண்பா
அயிற்கதவம் பாய்ந்துழக்கி ஆற்றல்சால் மன்னர்
எயிற்கதவம் கோத்தெடுத்த கோட்டால் – பனிக்கடலுள்
பாய்ந்தோய்ந்த நாவாய்போல் தோன்றுமே எங்கோமான்
காய்சினவேல் கிள்ளி களிறு! 56
பொருளுரை:
கிள்ளியின் யானை கடலில் செல்லும் நாவாய்க் கப்பல் போலத் தோன்றுகிறது. எப்படி? நாவாய் கடலில் பாயும். களிறு வேல் தாங்கிய கோட்டைக் கதவுகளின் மீது பாய்ந்து அழிக்கிறது.
நாவாய் பாய்மரம் கொண்டிருக்கும். களிறு கோட்டைக் கதவைப் பெயர்த்துத் தூக்கிக் கொம்பில் வைத்துக்கொண்டு வருகிறது. அதனால் களிறு கப்பல் போல் தோன்றுகிறது!
(குறிப்பு:
இதே பாடல் சேரனைப் பற்றிய பாடல்களுள் 20ஆம்எண் பாடலாகவும் அமைந்துள்ளது. அதில் ஈற்றடி “காய்சினத்தேர்க் கோதை களிறு” எனவும் இதில் “காய்சினவேற் கிள்ளி களிறு” எனவும் உள்ளன.
இஃது ஆயவுக்குரியது.
இப்பாடலின் அடி 3 இன் முதற்சீர் “பாய்தோய்ந்த” என்றிருத்தல் சிறப்பு;
இப்பாடலைப் பதிவு செய்து உரையெழுதியவர் “பாய்ந்தோய்ந்து” என்று பாடங்கொண்டுள்ளார்!

