கொடிமதில் பாய்ந்திற்ற கோடும் அரசர் - முத்தொள்ளாயிரம் 51
நேரிசை வெண்பா
கொடிமதில் பாய்ந்திற்ற கோடும் அரசர்
முடியிடறித் தேய்ந்த நகமும் – பிடிமுன்பு
பொல்லாமை நாணிப் புறங்கடை நின்றதே
கல்லார்தோட் கிள்ளி களிறு! 51
முத்தொள்ளாயிரம், சோழன்
பொருளுரை:
கல்மலை போன்ற தோள் கொண்டவன் கிள்ளி; அவனது ஊர்தி ஆண்யானை; அது அவனது பகைவரின் கோட்டை மதில்களைப் பாய்ந்து இடித்தது! அதனால் அதன் தந்தங்களின் நுனி முறிந்து போயிற்று!
போரில் விழுந்த மன்னர்களின் தலைமுடியை (கிரீடத்தை) இடறி அதன் கால்நகங்கள் தேய்ந்து போயின. இவற்றைத் தன் பெண்யானைக்குக் காட்டுவதற்கு நாணிக் கட்டுத்தறியின் புறக்கடையிலேயை அந்த ஆண்யானை தயங்கிக்கொண்டு நின்றது.

