நான் ரொம்ப பிஸி

நான் பிஸியா இருக்கேன்' - இந்த வாக்கியத்தை ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு முறையேனும் நாம் அனைவருமே எதிர்க்கொண்டு இருப்போம்...


ஒரு நாளில் 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் பிஸியாக இருப்பவர்கள் கூட, ஒரு ஃபோன் பண்ணும்போது உடனே எடுத்துப் பேசி விட்டால் , "வெட்டியா இருப்பான் போலிருக்கே இவன்" என்று நினைத்து விடுகிறார்கள் பலர்...


இது போன்று பல முன் அனுபவங்களைச் சந்தித்தவர்களே, "நான் ரொம்ப பிஸி" என்ற வாக்கியத்தைக் கண்டுபிடித்து இருக்கக்கூடும்...


எத்தனை வேலைகளுக்கு நடுவிலும் , மற்றவர்களுக்குத் தேவைப்படும் உதவிகளைச் செய்பவர்களுக்கு "அவன் வேலை இல்லாதவன் பா...எப்போது என்ன வேலை சொன்னாலும் செய்வான்" என்ற பெயர் மிகச் சுலபமாகக் கிடைத்து விடுகிறது...


'உதவி' என்பது 'வேலை' என்றாகிப் போனது , எப்போது கேட்கப்பட்டாலும் மறுக்காமல் செய்யப்படும் உதவிகளால் தான்...


அடுத்த முறை ஒரு 'உதவி' தேவைப்படும்போது 'அட என்ன 'வேலை' சொன்னாலும் செய்றதுக்குத்தான் அங்க ஒருத்தன் சும்மா இருக்கானே..' என்று நினைவுக்கு வருவார்கள் , தங்கள் வேலைகளுக்கு நடுவில் மறுக்காமல் உதவி செய்பவர்கள்...


இவர்கள் ஒரு கட்டத்தில் "நான் பிசியாக இருக்கேன்" என்ற வார்த்தையை அரணாக உபயோகப்படுத்தி இருக்ககூடும்...


வேகமாய்ப் போகும் உலகில் , நிதானமாகச் செய்ய வேண்டிய வேலைகளைக் கூட வேக வேகமாகச் செய்து முடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுப் போகிறது...


உண்மையிலேயே வேலை எதுவும் இல்லாமல் சும்மா இருப்பவர்கள் இரண்டு வகைகளில் பிஸியாக இருக்கக் கூடும்...


உண்டும் உறங்கியுமே பொழுதைக் கழிப்பவர்கள் ஒரு வகை..
மற்றவர்கள் சொல்லும் எல்லா வேலைகளையும் செய்தே வாழ்பவர்கள் மற்றொரு வகை...


முன்னவர்கள் தங்கள் சும்மாவே இருப்பதை மறைப்பதற்காக பிஸி என்று கூறி கௌரவத்தைக் காப்பாற்றிக் கொண்டிருக்கக் கூடும்..


ஆனால் மற்றவர்களுடைய வேலைகளைச் செய்தே பிஸியாக இருப்பவர்கள் , வேலைகளோடு சேர்த்துப் பல நேரங்களில் அவமானங்களையும் வாங்கிக் கொள்ள நேரிடுகிறது...இப்படிப் பட்டவர்களிடம் இருந்து 'நான் பிஸி' என்ற வார்த்தையை நான் கேட்டதே இல்லை...


மற்றொரு வகை பிஸி உண்டு...இவர்கள் கொஞ்சம் வித்தியாசமானவர்கள்...பிரச்சனை கொடுக்கும் யாரோ ஒருவரிடம் இருந்து இவர்கள் தப்பித்துக் கொள்ளவும் , தங்களுக்குப் பிடிக்காத வேலையைச் செய்வதில் இருந்து தப்பித்துக் கொள்ளவும் , பிஸியாகவே இருப்பார்கள் , தேவையே இல்லாத ஏதோ ஒரு வேலையைச் செய்து கொண்டு...


இன்னும் ஒரு வகை பிசியை ஏதேனும் ஒரு முறையேனும் அனைவரும் தங்கள் அனுபவத்தில் சந்தித்து இருக்கக்கூடும்...பல விசேஷ வீடுகளில் எல்லா வேலைகளையும் பொறுப்பெடுத்துச் செய்பவர்கள் ஒரு சிலர் இருப்பார்கள்...ஆனால் ஒன்றுமே செய்யாமல் 40.கி.மீ வேகத்தில் அங்கும் இங்கும் நடந்தே பொழுதைக் கழித்து , பிஸியாகக் காட்டிக் கொள்வது ஒன்றே தங்கள் வேலையாய்ச் செய்து கொண்டிருப்பார்கள் சிலர்...இவர்களைப் பார்க்கும்போது தோன்றும் , 'எப்படியும் இந்த விசேஷம் முடிவதற்குள் இவர்கள் இரண்டு கிலோ எடை குறைந்து இருப்பார்கள்' என்று.. அந்த அளவுக்கு வாக்கிங் போவார்கள்...


நாம் நிதானமாக இருப்பதாலும் , 'வேலை'யாகிப்போன 'உதவி'களை மறுக்காமல் செய்வதாலும் மற்றவர்கள் நம்மை சும்மாவே இருப்பதாக நினைத்து விடுவார்களோ' என்ற எண்ணம் தேவையே இல்லை...


ஏனென்றால் அனைவராலும் விரும்பப்பட்டே ஆக வேண்டிய கட்டாயமும் அவசியமும் எந்த ஒரு தனி மனிதருக்கும் இல்லை...!!!



- கிருத்திகா தாஸ்...

எழுதியவர் : கிருத்திகா தாஸ் (23-Dec-14, 12:12 pm)
Tanglish : naan romba busy
பார்வை : 221

மேலே