சென்றநங் காதலர் சேணிகந்தா ரென்றெண்ணி - கார் நாற்பது 35
இன்னிசை வெண்பா
1சென்றநங் காதலர் சேணிகந்தா ரென்றெண்ணி
ஒன்றிய நோயோ டிடும்பை பலகூர
வென்றி முரசி னிரங்கி யெழில்வானம்
நின்றும் இரங்கும் இவட்கு! 35
கார் நாற்பது
பொருளுரை:
வினைவயிற் பிரிந்து சென்ற நம் தலைவர் நெடுந்தூரத்தைக் கடந்து சென்றாரென்று நினைத்து பொருந்திய பசப்பு நோயுடனே பல துன்பங்களும் மிகப் பெறுதலால் இவள் பொருட்டு எழுச்சியையுடைய முகில் வெற்றியை யறிவிக்கும் முரசின் ஒலியைப் போல இடித்து வானின்கண் இருந்தும் பரிவுறாநிற்கும்!
நின்றும் என்பதற்குச் சலியாது நின்று என்று பொருள் கூறுவாருமுளர்; வானின்கண் உள்ள மேகமும் இரங்கு மியல்பினாள் திறத்துத் தலைவர் இரங்கி வாராதது என்னை யென்றபடி!.1. சென்று என்றும் பாடம்.