திரைப் பறவை 5

தடதடக்கும் காலங்கள் யாருக்காவும் காத்திருப்பதில்லை....ஆனால் காதல்களில் சில போது காலங்கள் தங்கி விடுகின்றன....காலமற்ற காதலாய்.... காதலற்ற காலமாய்.. கனவுகள் இல்லாத தோற்றம் .. வெறும் கருப்பு வெள்ளைப் பூக்களை மட்டுமே உண்டு உறங்கி துப்புவது போல... இங்கே எல்லாமாய் இருப்பது காலம் தாண்டிய காதலே....

காலம் கடந்தும் காதல் வாழும் என்பதைத் தாண்டி காலம் தாண்டியும் காதல் எழும் என்பதை அலிஜன்ரொ அக்ரெஸ்ட்டியின் " தி லேக் ஹவுஸ் "(2006) என்ற ஆங்கிலப் படம் மெல்லிய மழைச் சாரலில் தனிமையில் பருகும் மிதமான மதுவின் மயக்கத்தை மெல்ல மெல்ல நம் மீது தெளிக்கிறது....

2004இல் அவளும் 2006ல் அவனும் இருக்க, இடைப்பட்ட காலத்தை இல்லாமலாக்கப் பயணிக்கும் திரைக்கதையில், நாம் காலத்தை முன் பின்னாகப் பயணிக்க வைக்கும் ஓட்டுனராக மாறுகிறோம்.. 2004இல் அவள் தொலைத்த புத்தகத்தை 2006ல் அவன் தேடிப் பிடிப்பது, ஒரு சோறு பதம். கொஞ்சம் குழப்புவது போல தெரிந்தாலும்... குழம்பிய குட்டை தானே தெளியும்....

2004இல்.... அவளைப் பார்த்தும்.... பேசியும்...எதிர்காலத்தில் 2006இல் சந்திக்கப் போகும் பெண் இவள் என்று தெரியாமல் போகும் இடத்தில் நமக்கு பதறுகிறது......... காதல் எங்கு இருந்தால் என்ன... பதற்றம் ஒன்று தானே...! காதல் எந்த சூழ்நிலையிலும் காதலாக மட்டுமே இருக்கிறது. காதல் என்பது ஒரு உள்ளுணர்வு........ அதற்கு தோல்வி வெற்றி ஒன்றும் கிடையாது.. அது தேடுதல் தொடர்பானது... நமக்கும், நமக்கும் மட்டுமே தெரிந்த உண்மையாகி ஆழ் மனதில் கிடக்கிறது.... ஆன்மாவுக்கு அழிவில்லை என்பது போல.. நிஜமாக ஒரு காதலை சுமக்கும் காலத்தில்.. அது.. ஒரு போதும் அழிவதில்லை...இந்தப் படம் பார்த்த இரவில்....மெல்லிய இறகான உணர்வுக்குள் நான் பயணித்ததை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.. அது ஒரு வாழ்க்கை....... பிரமிளின் கவிதையாய் இரகாகிப் போன வெளி..... அது காலத்துக்குள் கவனம் அற்றுத் திரியும் ஒரு வகை பிதற்றல்.. பிதற்றல் இல்லாத இலக்கியமோ இலக்கணமோ இல்லை.... பிதற்றல் என்பது தெய்வீக சிந்தனை .. ஒரு நூல் அப்பக்கம் மறு நூல் இப்பக்கம்.. பக்கத்துக்கு பக்கம்.. உயிர் உரிதல்......... அது காதாலாகவே இருக்கிறது பெரும்பாலும்....

காதல் கனக்க செய்யும் மனதுக்குள் அன்பு மட்டுமே பெருக்கெடுத்து ஓடும்.... கனத்த பார்வையில் கசியும் கனத்த மழைத்துளிகளை உருட்டிக் கன்னத்தில் பின்னோக்கி அனுப்பி உருண்டு திரள உட்செலுத்த முயற்சிக்கும் அருகாமை,தனிமையில் வெடித்தழும் சுனாமியைப் போல அன்பு, அன்பு, அன்பு.... எத்தனை வறுமையிலும் அது தன்னை நீட்டித்துக் கொள்கிறது.. தொலைதல் ஒன்று, தேடலோ பல....என்பது போல....

வறுமையின் கோரப் பிடியில் பூத்திருக்கும் பூக்களை உதிர விடாமல் கூட்டிச் செல்லும் வாழ்க்கையை கொண்டு, செதுக்கியிருக்கும் ஈரான் இயக்குனர் மஜீத் மஜிதியின் "சில்ரன் ஆப் ஹெவன்" (1997)....

செருப்பு சொன்ன பாடத்தில் பாதங்களை வணங்க ஆரம்பித்தேன்.. உணர்வுகளில் பூத்துக் கிடந்த கொப்புளங்கள், உலக வறுமைக்காக எனக்கு நானே போட்டுக் கொண்ட சூடாகவே சிந்திக்கிறேன்....ஒரே ஜோடி ஷூவை வைத்துக் கொண்டு 10 வயது அண்ணனும் 7 வயது தங்கையும் காலையில் அவளும் மதியம் அவனும் மாற்றி மாற்றி போட்டுக் கொண்டு பள்ளி போகும் போது... ஒவ்வொரு உடைக்கும் மேட்சாக நான் வைத்திருக்கும் ஷூக்கள்.. என்னை அடிப்பது போலவே உணந்தேன்.....ஒரு வழியாக ஷூவைத் திருடிய சக வயது சிறுமியைக் கண்டு பிடித்து அவளின் வீட்டுக்கு சென்று கேட்கலாம் என்று போகும் போது அந்த சிறுமியின் கண்ணில்லாத தந்தையின் செயல்பாடுகளும்.. வீடும்... அந்த சிறுமியின் பார்வையும்.... அண்ணனையும் தங்கையையும் அப்படியே அர்த்தத்தோடு பார்த்துக் கொண்டு மௌனமாக வீடு திரும்ப வைக்கும் காட்சியில்.... அத்தனை அணுகுண்டுகளும் செயல் இழந்த மாதிரி யோசித்தேன்....தங்கையின் ஷூவை வாங்கிக் கொண்டு ஒவ்வொரு நாளும் பள்ளிக்கு தாமதமாக சென்று ஆசிரியரிடம் திட்டு வாங்கிக் கொண்டு எதுவும் சொல்ல முடியாமல் கண்கள் கலங்கும் காட்சியில்.... கலங்காத நெஞ்சம் பிசாசுக்கும் இருக்க முடியாது.....

அர்த்தங்கள் மாறிக் கொண்டே இருக்கும் உலகம் இது... மாற மாறவே பரிணாமம்.... மானுடம் விதைத்தும் அழித்தும் வந்திருக்கிறது...... அர்த்தங்களில் நான் புதிதாக உணர்ந்த அர்த்தங்ளை எனக்கு நம் பாலச்சந்தரின் "புது புது அர்த்தங்கள்" கொடுத்தது.....

புரட்சிக்கு ஒவ்வொரு முறையும் தோட்டாக்கள்... காவல் காக்க வேண்டாம் என்பதை இயக்குனர்... மாற்றி சொல்லிய படம்... ஊர் அறிந்த பாடகன்... வீட்டுக்குள் சந்தேக பேயிடம் மாட்டிக் கொண்டு அல்லல் படும் சோகம்.... ஆடப் பிடிக்காத அழகி... கணவனின் காசு கீறலுக்கு பயந்து வீட்டை விட்டு வெளியேறுகிறாள்... பாடகனும்.. நிம்மதி வேண்டி வெளியேறும் காலம் ஒரு மழை நேரம்.. இரவு.. பேருந்து.... பயத்தோடு அவனை நோக்கினாலும் ஒரு புள்ளியில் ஒரு குழிக்குள் கிடக்க நேரிடும் தருணத்தில் மெல்ல மெல்ல நட்பு பற்ற.. ஒன்றாகவே வெளியேறுகிறார்கள்...

என் சிறு வயதில் நான் பார்த்த படம் இது.. அன்று, அதில் உள்ள நிறைய காட்சிகள் புரியவேயில்லை....... இன்று எத்தனையோ முறை பார்த்து விட்டேன்.. ஒவ்வொரு முறையும் இந்தப் படம் முன் வைக்கும் ஒரு சொல்.. நம்பிக்கை... நம்பிக்கையே வாழ்வின் ஆதாரம்..அது இல்லாத மனைவியிடம் இருக்கும் நிஜக் காதல் கூட கூர் கத்தி தான்.... நம்பி வந்தவளை காயப் படுத்தும் கணவனிடம் வாழ்வதை விட.. பிடித்த மாதிரி வாழ்வை அமைத்துக் கொள்வது மேல் என்ற சித்தாந்தத்தை முன் வைக்கும் இந்த படம்.. நிறைய பேரால் உள் வாங்கப் பட்ட படம்... நாம் நிறைய, நிஜங்களை பேசுவதில்லை.. என்பதை சொன்ன படம்.. பேபி டார்லிங்கை மறக்க முடியுமா...! பூர்ணம் விசுவநாதன் அவர்களையும் அமலா அவர்களையும் மறக்க வேண்டுமா.......?

காதலால் கட்டமைக்கப் பட வாழ்வு முறை நமது.... அது ஒரு போதும் தவறுகளால் நீட்டிக்கப் படுவதில்லை.... இங்கே காமம் குறித்து பேச ஒன்றுமே இல்லை.. அது கடந்து போகும் நதி நீர் போல... நீர் இல்லாத தடத்தில்.. மணலாகிக் கிடக்கும் பெருங்கூட்டு விசை... அது இருந்து விட்டு போகட்டும்....... என்று நான் புரிந்த படம் வேறு கோணத்தில்..... இருந்தும், பண்பாட்டு சூழலை மாற்ற மனமில்லா இயக்குனர்.. மீண்டும் அவரவர் வாழ்வோடு போக சம்மதித்ததில்.... ஆண்டாண்டு காலம் காத்து வந்த ஒரு சுமையை மீண்டும் சுமக்கவே வைத்து விட்டார்.. இருந்தும், அவரின் தேடலின் ஊடே அந்த முடிவில் அவர் மனம் லயித்திருக்க முடியாது... என்பதற்கு சான்று பணம் தேடும் கணவனுக்கு கால் இல்லாமல் செய்ததும்.... சந்தேக பேய் மனைவிக்கு மனநலம் இல்லாமல் செய்ததும்......

எத்தனையோ உறவுச் சிக்கலை பேசிய இயக்குனர்... நிறைய புதுமைகளை திரையில் செய்தார் என்பதே உண்மை... நிறைய விமர்சனத்துக்கு ஆளான போதும்.. சிகரமாய் அமைந்த அவரின் திரைக் கதைக்குள் யாரும் பயணிக்காமல் இருக்கவே முடியாது.... நாகேஷ் என்றொரு மகா நடிகனை ஊரெல்லாம் கொண்டு போய் சேர்த்த பெருமை இவருக்கு உண்டு.. என்பது எத்தகைய பெருமை...ஆத்மார்த்தமான தேடலை அவரின் படங்கள் மூலம் பெற்றிருக்கிறேன்...திரைக்கதை நுணுக்கங்களை அவரின் படங்கள் மூலம் கற்றிருக்கிறேன்....

இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.... அவர் உடலால் இறந்து விட்டார்...இறவாத படங்கள் இருக்கும் நாள் வரை அவர் மண்ணில் வாழ்வார் என்பதே...இருக்கும் வரை நமது பார்வையாக இருக்கும்.....

கேளடி கண்மணி...... பாடகன் சங்கதி....... நீ இதைக் கேட்பதால் நெஞ்சில் ஓர் நிம்மதி....

திரை விரியும்....

கவிஜி

எழுதியவர் : கவிஜி (24-Dec-14, 2:26 pm)
பார்வை : 211

மேலே