பணம் தின்னிகள்

பிணம் தின்னிக்
கழுகுகளிலும்
கேவலமான
இந்தப்
பணம் தின்னிப்
பிசாசுகள்
பணத்தைச் சேர்த்து
பணத்துடன் வாழ்ந்து
பணம் நிறைப்
பிணங்களென
பாவங்களின்
பாடையிலேறி
பணச் சிதையிலெரிந்து
இறுதிவரை
தீராத ஆசையோடு
உதிர்ந்து தான்
போகின்றன
வாழ்ந்ததின் அடையாளமின்றி !

வறுமையின் கொடுமையிலும்
எத்தனை கோடி
இன்பம் வைத்தாய்
என்று வாழும்
பாரதிகள் மட்டுமே
செல்வந்தர்களாய்
சுக உறக்கம் கொள்ள -
தூக்கத்தைத் தொலைத்து
பணத்தைத் தேடி
பட்டுமெத்தை
வாங்கியவர்கள்
நித்திரையை
விலை பேசமுடியாது
இரவுகளின் வீதிகளில்
வெறிபிடித்து திரிகிறார்கள் !

எவ்வளவு
பணமிருந்தாலும்
செத்த பிறகு
நெற்றியில்
ஒற்றை நாணயப்
பொட்டோடு மட்டுமே
போகும்
மனித இனம்
தினம் தினம்
செத்து செத்துப்
பிழைத்து தேடும்
பணத்தின்
ஒவ்வொரு
அடுத்தடுத்த
நகர்தலின்
காலடியிலும்
நசுங்கிக் கொண்டிருக்கிறது
எத்தனையோ இதயங்கள் .

எழுதியவர் : பாலா (24-Dec-14, 8:47 pm)
சேர்த்தது : lambaadi
பார்வை : 221

மேலே