களவுபோன என் நொடிகள்

என்னையறியாமல் என்நொடிகளைத் திருடியது யார்?
நானறியாமல் என்னை இயக்குவது யார்?
துரோகங்கள் பழகிவிட்ட கணங்களில்
உதவி செய்பவர் காட்சிப் பொருளாவார்

வாவென்று வாய் நிறைய அழைத்து
மனம் ததும்ப அன்பு நிறைப்பது உறவு
உதடு பிரியாது சிரித்து ஒசைபடாது
உள்ளம் உடைத்து உறவு களவாடப்பட்டது

தவறுகளை தனதாக்கிக் கொண்டு
தண்டனையும் தானே ஏற்பது தலைமை
பலியிடவே தொண்டர் படை வளர்த்து
குழி பறிக்கவே கூட வைத்திருப்பது சிறுமை

கள்ளம் கபடமில்லா வெள்ளை மனது
புறம் பார்த்து பழகும் குழந்தை
தெளிவு தரும் விடைகள் தேர்வுகளில்
அறிவு களவு போக உடந்தை

உழைப்பைக் கொடுத்து ஊதியம் பெற்று
ஆற்றல் வளர்த்து உயர்வது திறமை
உழைப்பது போல அழகாய் நடித்து
அடுத்தவர் இடத்தை பறிப்பது கயமை

தரத்திற்கு தக்க விலை நிர்ணயம்
நாணயத்தின் பெயரில் பொருள்கள் விற்பனை
விளம்பர மோகம் தரமில்லாப் பொருள்
தகுதியில்லா விலையில் உரிமை கொள்ளை

என் நொடிகளை எனக்காக விற்று
பெரு வாழ்வு வாங்கப் பார்க்கிறேன்
களவு போன நொடிகளை கண்டு
பிடித்துக் கொடுக்க தனிப்படை அமைக்கிறேன்

எழுதியவர் : சிவகாமி அருணன் (25-Dec-14, 9:17 pm)
பார்வை : 121

மேலே