வேற்றுமைக்கு இவன்

வேற்றுமை இவனோ?
______________________
காக்காய் கூட்டம் கூவி அழைத்து
கலங்கியே வீழ்ந்திட்ட தன் இனத்துக்காய்
முற்றத்து மர நிழலில் கூடி
மந்திர ஆலோசனை செய்து
நாமறியா தீர்வினைப் பெற்று
கண்ணீர் அஞ்சலியோடு
மாநாடு கலைந்து செல்கின்றன.
இங்கு எதிரணி சேரவில்லை
மாற்றுக்கருத்துக்காய் முரண்படவில்லை
காட்டிக் கொடுப்புகளும்
கதிரைப் பற்றுக்காய் நட்புக்களை
கலங்கச் செய்து
தன்னிருப்பை ஆழப்பதிக்கவில்லை
பின் கதவால் காதல் கொள்ளவுமில்லை
கா..கா என ஒரு காகம் அழைக்க
குறிப்பறிந்த காக்காக் கூட்டம்
கிடைத்த உணவை பகிர்ந்துண்டு
மரக்கிளையிலே அமர்ந்திருந்து
அன்பாய் காதல் மொழி பேசி
பிறந்த பயன் அனுபவிக்கின்றன.
இங்கு தான் மட்டும் உண்டு
தனியாய் வயிர் வளர்க்க நினைக்கவில்லை
சகோதரனுக்காய் விட்டுவைக்காமல்
பதுக்கி வாழ நினைக்கவில்லை
பதுங்கியே இருந்து இவன் போல்
பலி வாங்கவும் இல்லை
தன்னினம் சிறக்க வேறினம் வெருக்கவில்லை
தனியாய் தரம் பிரித்து தாழ்த்தவுமில்லை
இவன் போல் பல பிரிவாய் பிரித்து வைத்து
பேதங்கள் காட்டவில்லை - எனின்
ஒற்றுமைக்கு காகமென்றால்
வேற்றுமைக்கு இவனாமோ
பேசிக் கொள்ளும் பறவையினம்.