அஞ்சல் அட்டை
செவ்வக வடிவழகி
செம்மஞ்சள் நிறத்தழகி
திறந்த புத்தகமாய்
பறந்து போனவளே...!
ஒத்த ரூபாய் தந்தா
ஊரெல்லாம் சுத்தி சுத்தி நீ வருவ
உறவுக்கும் உயிருக்கும்
உறுதுணையாக நீ இருப்ப...!
பஞ்சம் வந்தாலும்
வெயிலில் நீ வெந்தாலும்
தாங்கி வந்த தகவலை
சுரம் குறையாதுரைப்பவளே !
பரிட்சைஎழுதும் பிள்ளைகளுக்கு
பரிட்சயமானவள் நீ தானே !
உனை காண இருவிழியால்
தவம் கிடப்பார் அன்று ...!
எத்தனையோ சுவராஸ்யமும்
சோகங்களையும் சுமந்தவள் நீ தானே !
மாறி வரும் உலகத்தின்
மாற்றமானாய் நீ !
அரசாங்க முத்திரையை
தினம் தினமும் தலையில் குத்தி
தலைவலியில் சுருண்டாயோ
தலைவிதியென்று மறைந்தாயோ !
தலைமுறைக்கு தெரியாது
தந்தியும் நீயும் தரிகெட்டோடி
தலைமுடி பற்றிய தலைவனின் நிலை!
கிராமத்தான் யாவருக்கும் குலசாமி நீயடி !
நோய்ப்பட்டு மரணத்தில் நீ !
அரவணைக்க அரசுமில்லை உன்னால்
ஆனந்தப்பட்ட மனமும் இன்றில்லை
ஆதரவற்ற அனாதையாய் நீ !
கல்லறை வந்து கால் பிடித்தழுவேன்
மரித்ததை நினைத்தல்ல
நீ பயணித்த தூரத்தை எண்ணி எண்ணி
உன் கால்வலி போக்கிடவே ...!