சாதி ஒழிப்பு என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி
ஆயிரம் கவனவுகளுடன் பள்ளியில் சேர குதித்துக் கொண்டு செல்கிறான் ஒரு சிறுவன். அவன் பெயர் கண்ணன். பள்ளியில் சேர முதலில் தேவைப்பட்டது சாதிச் சான்றிதழ். அதைக் கொடுத்து பள்ளியில் சேர்ந்து விட்டான். பள்ளியில் ஆசிரியரோ "சாதிகள் இல்லையடி பாப்பா" என கற்பிக்கிறார். வீட்டில் அன்னையும் தந்தையும் "ஏனடா அந்த தாழ்ந்த சாதிப் பையனுடன் பழகுகிறாய்? " என சதா திட்டிக்கொண்டிருக்கிறார்கள் அவனுக்கு மிகவும் பிடித்த நண்பனைப் பற்றி. நண்பனின் பெயர் ராமன். கண்ணனுக்கோ சாதி என்றால் என்ன என்றே இன்னும் புரியவில்லை. மிகவும் குழம்பித் தவிக்கிறான். அந்த நேரத்தில் தான் பள்ளியில் பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு ஒரு பேச்சுப் போட்டி அறிவித்தார்கள். போட்டியின் தலைப்பு "சாதி ஒழிப்பு". தந்தையிடம் வந்து கூறினான் கண்ணன். கல்வியையும் வாழ்க்கையையும் பிரித்து பார்த்தே பழகிய தந்தை மிகுந்த ஆர்வத்துடன் தன் ஆருயிர் மகனுக்கு பக்கம் பக்கமாய் எழுதி தருகிறார். கண்ணனும் விடா முயற்சியுடன் அதைப் படித்து தன் மழலை மொழியில் பேசினான். பலத்த கைதட்டல் கிடைத்தது. ராமனும் போட்டியில் கலந்து கொண்டான். அவனும் அருமையாக தன் கருத்துக்களை பேசினான். இரண்டு குழந்தைகளையும் அனைவரும் பாராட்டினார்கள். பரிசு அறிவிக்கும் நேரமும் வந்தது. முதல் பரிசு ராமனுக்கு. இரண்டாம் பரிசு கண்ணனுக்கு. இருவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி. நண்பர்கள் இருவரும் கட்டித் தழுவி தங்கள் அன்பை வெளிப்படுத்திக் கொண்டனர். வீட்டிற்கு வந்த கண்ணனுக்கு அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. இரண்டாம் பரிசை வாங்கி வந்த கண்ணனை அவன் தந்தை தன் வார்த்தைகளால் சுட்டுக் கொண்டிருந்தார். "கீழ் சாதிக் காரனிடம் தோற்று விட்டு வந்திருக்கிறாயே? அந்த ஐயங்கார் வீட்டு பிள்ளையிடம் தோற்றிருந்தால் கூட பரவாயில்லை" என சராமரியாக அவனை தாக்கி கொண்டிருந்தார் தந்தை. அந்த பிள்ளை எந்த சலனமும் இல்லாமல் தன தந்தை எழுதித் தந்த அந்த காகிதத்தை அவரிடம் கொடுத்து அதில் அவனுக்கு கைதட்டல் கிடைத்த அந்த பாரதியின் வரிகளை பாடினான்.
"வெள்ளை நிறத்தொரு பூனை;- எங்கள்
வீட்டில் வளருது கண்டீர்;
பிள்ளைகள் பெற்றது பூனை
அவை பேருக்கொரு நிறமாகும்
சாம்பல் நிறமொரு குட்டி – கருஞ்
சாந்து நிறமொரு குட்டி
பாம்பு நிறமொரு குட்டி – வெள்ளை
பாலின் நிறமொரு குட்டி
எந்த நிறமிரு ந்தாலும் – அவை
யாவும் ஒரே தர மன்றோ?
இந்த நிறம்சிறி தென்றும் – இது
ஏற்ற மேன்றும் சொல்லலாமோ?
வண்ணங்கள் வேற்றுமை பட்டால் – அதில்
மானுடர் வேற்றுமை இல்லை;
எண்ணகள் செய்கைக ளெல்லாம் – இங்கு
யாவர்க்கும் ஒன்றெனல் காணீர்;"
இந்த சிறு வயதில் அந்த மழலைக்கு புரிந்த கருத்து அந்த தந்தைக்கு இன்னும் புரியவில்லை. "ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது" என்று கூறி அவனை தொடர்ந்து கம்பால் அடித்தார். கல்வி வேறு, வாழ்க்கை வேறு என தன் மகனுக்கு பாடம் புகட்ட தொடங்கினார். இது தான் இன்றைய நிலை. இப்படித் தான் உயிருடன் அழிக்கப் படுகிறார்கள் நம் இருபத்து ஒன்றாம் நூற்றாண்டின் பாரதியும் பெரியாரும்.