தங்கத் தண்டு ----பாகம் 9 ----------- மர்மத் தொடர்
கலெக்டர் நரேனின் நடவடிக்கைக்கு கை மேல் பலன் கிடைத்தது! அவரை அதிரடியாக கன்யாகுமரி மாவட்டத்துக்கு மாறுதல் செய்திருந்தனர்! தமிழக அரசின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் அரசாணை வெளியாகி இருந்தது. அந்த பிரிண்ட் அவுட்டை வைத்துக் கொண்டே கன்யாகுமாரியில் சேரச் சொல்லி அடுக்கடுக்காய் வற்புறுத்தல்கள்!
நரேன் அசரவில்லை! பிரிண்ட் அவுட்டை வைத்து சம்பளம் வாங்க முடியுமா? எழுத்துப் பூர்வமாக அரசாணையை கையெழுத்துப் போட்டு வாங்காமல் தன்னால் திருவண்ணாமலையை விட்டு இம்மி நகர முடியாது என்று தெரிவித்து விட்டார்! ஆயினும் ஏழாம் முறையாக திருவண்ணாமலைக்கு அனுப்பப் பட்ட அரசாணை அப்படியே மாயமானது! இங்கிலாந்துத் தூதரகத்தில் மட்டும்தான் குப்பைக்கூடை இருக்குமா என்ன?
இதற்கிடையில் அந்தரீஸ் திருவண்ணாமலை எஸ்பியாக பொறுப்பேற்றார்!
ஹெல்த் ப்ளஸ் நிறுவனம் முழுக்கத் தடை செய்யப்பட்டது! விக்டர் மார்ஷல் தங்கியிருந்த வீட்டில் சோதனையிட சர்ச் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது!
திருவண்ணாமலையின் குள்ளர் குகை
ஒரு ஆள் ஊர்ந்து செல்லத் தக்க இருபதடி நீளப் பாதையில் ஊர்ந்து கொண்டிருந்தாள் லாவண்யா. பாதை முடிவில் முறம் போல் விரிந்தது ஓரிடம். இருபது பேர் வசதியாக உட்கார்ந்து கொள்ளலாம். கிழக்கு மூலையில் சலசலத்து வழிந்தது ஊற்று நீர். மூன்று பக்கமும் பாறைகளே சுவராக, அதனுள் கசிந்து வந்த காற்று அவ்வளவு தூய்மையானது!
“வாம்மா குழந்தே” முதுமையின் நடுக்கம் தோய்ந்த கம்பீரக் குரல் அவளை வரவேற்றது.
குரலுக்குரியவர் தொண்ணூறு வயது சந்நியாசி. ஒரு வகையில் லாவண்யாவுக்கு தாத்தா முறை.
“ இந்தாங்க தாத்தா” கையோடு எடுத்து வந்திருந்த கம்மங்கூழை பதமாக ஊற்றிக் கொடுத்தாள் லாவண்யா. “ஆசிர்வாதம் பண்ணுங்க”
“ ஓ, இன்னைக்கு உன் பிறந்த நாளா? நான் எங்க இருந்தாலும் இந்த நாள்ல என்னைத் தேடி கண்டுபிடிச்சி கால்ல விழறியேம்மா? இப்ப நீ எனக்கு ஆசிர்வாதம் பண்ணு, அடுத்த ஜென்மத்துல நான் உனக்கு மகனாப் பொறக்கணும்னு! ”
“தாத்தா” லாவண்யா குரலில் வெட்கத்தையும் தயக்கத்தையும் கொட்டி அளந்தாள்.
“ என்னம்மா ராஜாத்தி, எதுவானாலும் தயங்காம சொல்லு” பெரியவர் வாஞ்சையுடன் கேட்டார்.
“தாத்தா, எனக்கு ஒருத்தரை ரொம்ப பிடிச்சிருக்கு, தங்கு தடையில்லாம அவரோட பிரியத்தில மூழ்கி கிடக்கணும் போல இருக்கு! நினைச்ச நேரம் அவர் நெஞ்சில படுத்து தூங்கணும், தாத்தா”
தாத்தா அங்கிருந்து எழுந்து சோழி எடுத்து வந்து உருட்டினார். நாள், கிழமையை கேட்டுக் கொண்டார். விரல்களை மடக்கி கவனமாகக் கணக்குப் போட்டார்.
“ குழந்தே, உன் ஆசையை திரும்பச் சொல்லு! ”
முதலில் சொன்னதை வார்த்தை மாறாமல் திருப்பிச் சொன்னாள் லாவண்யா. தாத்தா திகைத்தார்.
“எனக்கு ஒருத்தரை ரொம்ப பிடிச்சிருக்கு, அவரையே கல்யாணம் பண்ணிக்கணும்; நல்லபடி குடும்பம் நடத்தணும்” என்று அவள் சொல்லவே இல்லையே? அப்பாவிப் பெண்ணுக்கு முக்காலும் உணர்ந்த ஞானிகளின் வாக்கு வன்மை எப்படித்தான் நாவில் வந்து அமர்கிறதோ?
“ குழந்தே, உன் ஆசை கண்டிப்பா நிறைவேறும்; ஆனா அதுக்கு நீ காத்திருக்கணும்”
எது வரைக்கும் என்று அவள் கேட்கவில்லை!
சற்று நேரம் பேசியவள் அந்த படிவத்தை வாசித்தாள். மௌனமாக கேட்டுக் கொண்டிருந்த பெரியவர், பிறகு லாவண்யாவிடம் விசாரித்தார்.
“ குழந்தே, உன் முதலாளி நல்லவரா? ”
“ ஆமாம் தாத்தா, ஆதிவாசிகளுக்கு நல்லது செய்ய நினைக்கிறார்! ”
“ அது சரி! அந்தப் பட்டியல்ல எல்லாம் சரி, ரசவாதம் எதுக்கு? ”
லாவண்யா குழம்பினாள், ஆமா, ரசவாதம் எதுக்கு?
“ குழந்தே, நீ புலி வாலை பிடிச்சிருக்கே; அந்த ஆள்கிட்ட போயிட்டு நான் எல்லாத்தையும் விசாரிச்சேன், ஆனா ரசவாதம் பத்தி மாத்திரம் கேக்கல, அது தேவையில்லன்னு நினைச்சேன்னு சொல்லு. ஆந்த ஆள் சாதாரணமா எடுத்துகிட்டா அவன் நல்லவன், தாம்தூம்னு குதிச்சா அவன் நோக்கமே வேற. புரிஞ்சி நடந்துக்கோ! ”
“ சரி, தாத்தா ”
தாத்தா லாவண்யாவை அருகழைத்தார். “உனக்கு ஒரு ரகசியம் சொல்றேன்- இது ரசவாதம் சம்பந்தப்பட்டது....”
“ஸ்தனகிரின்னு ஒரு மலை; ஸ்தனம்னா என்ன தெரியுமா, குழந்தே? ”
“தெரியும் தாத்தா, தாய்மார்களோட நெஞ்சுப் பகுதி! ”
“அதே தான். ஸ்தனகிரி மருவி இன்னிக்கு தனகிரியா மாறிடுச்சி. உண்மைல அது ஒரு மலையில்ல; ஒரே மாதிரி இருக்கற இரண்டு மலைங்க. அதனாலதான் அந்தப் பேரு! ”
அவர்கள் உரையாடல் தொடர்ந்தது.
அந்த உரையாடலில் "ஸ்தனகிரி" என்ற வார்த்தை காதில் விழுந்தது. யார் காதில்? லாவண்யாவைப் பின்பற்றி வந்து அந்த இருபதடி நீளப் பாதையில் பத்தடி தள்ளி மலைப் பாம்பாய் படுத்துக் கிடந்த லாரலுக்கு- விக்டர் மார்ஷலின் சகாவுக்கு! ஆனால் காற்றோட்டமில்லாத இடமாதலால் அதிக நேரம் அவனால் அங்கு தாக்குப் பிடிக்க முடியவில்லை.
“ காட்டுவாசிகளைத் தாண்டி அந்த சுனையை நெருங்கணும்னா இதை அந்த தலைவன் கிட்ட காட்டு; வேண்டிய உதவி செய்வான்” சொன்ன தாத்தா விரற்கடை உயரத்திலிருந்த மரப்பாச்சி பொம்மையை லாவண்யாவின் கையில் திணித்தார்.
லாவண்யா தன் கையை மூடி ஏதோ பொருளை எடுத்து வருவதை கவனித்தான் லாரல். அவள் போன பிறகு அவன் உள்ளே சென்றான்; அவன் வெளியே வந்த நேரம் கழுத்து நெரிபட்டு இறந்திருந்தார் தாத்தா!
ஹெல்த் ப்ளஸ் நிறுவனத்தின் அலுவலகம்
“ யு இண்டியன் இடியட்! ” காட்டுக் கத்தலாய் கத்தி ஃபைலை லாவண்யா முகத்தில் தூக்கி எறிந்தான் விக்டர் மார்ஷல். “அடிமை நாயா இருந்தவங்களுக்கு சுயபுத்தி கேக்குதா? ” இன்னும் சொல்லத்தகாத வார்த்தைகளால் அர்ச்சித்தான்.
லாவண்யா தன் ராஜினாமா லெட்டரை அவன் முகத்தில் கடாசி விட்டு விருட்டென்று கிளம்பினாள்.
பாண்டிச்சேரி
அந்தரீஸும், நரேனும் பாண்டிச்சேரியில் ஒரு ஹோட்டல் ரூமில் தனித்திருந்தனர். விக்டர் மார்ஷலின் உள்நோக்கம் புரியாமல் தவித்துக் கொண்டிருந்தார் நரேன். அவன் வீட்டிலிருந்து பெரிதாக ஒன்றும் தேரவில்லை. எதையோ அவசர அவசரமாக அகற்றிய அறிகுறி தெரிந்தது; வயர்லெஸ் டிவைஸாக இருக்கலாம்...மற்றபடி போதையோ, ஆயுதக் கடத்தலோ, தீவிரவாதிகளின் கூட்டோ என்னவென்று புரியவில்லை!
“ சார், இந்த விஷயத்துல நமக்கு உதவி செய்ய இந்த லேடியால முடியும்னு நினைக்கிறேன் ” அந்தரீஸ் அறிமுகப்படுத்திய பெண்ணை நரேனும் அறிவார்- சுதர்சனா!
சுதர்சனா தனது அனுமானத்தை விளக்கினாள். ரத்தமும் சதையுமான ஆதாரங்கள் தங்கள் ரகசியத்தை அவிழ்த்தன. விடுபட்ட நான்காவது கண்ணி விக்டர் மார்ஷல் என்பது புரிந்தது. ரசவாத ரகசியம் ரத்த வெறியோடு அவனை அலைக்கழிப்பதும் புரிந்தது!
“ரசவாதம் சாத்தியமா? ” என்றார் நரேன்.
“சாத்தியம்தான்” என்றாள் சுதர்சனா. “இயற்கையில தங்கம் கிடைக்கிறதே அணுக்கரு பிளவைக்குப் பின் நடக்கிற அணுக்கரு சேர்க்கையிலதான். ரசவாதத்தில வர்ற ரசம்ங்கிற வார்த்தை ரசாயணத்தை அர்த்தப்படுத்தினாலும், குறிப்பா அது உணர்த்துறது பாதரசத்தைதான். பாதரசத்தோட அணுக்கருவை லேசாப் பிளந்து அது கூட ஏதாவது உலோகத்தை சேர்த்தா, பிளந்த பாதரசம் உலோகத்தோட அணுக்கருவை கணக்கா சேர்த்து தானும் உள்ள ஊடுருவிடும். இந்த வினைகளை கட்டுப்படுத்தி சரியா கொண்டு செல்ல கிரியா ஊக்கிகளா பாஷானக்கல், சில மூலிகைகள் தேவைப்படுது. அதுக்குன்னு செய்முறையும் இருக்கு! ”
“ஆனா பாதரசம் எதுக்கு? ” – இது அந்தரீஸ்.
“ஈசி ஆபரேஷனுக்கு! தனிம அட்டவணை ஞாபகமிருக்கா? பாதரசத்தோட அணுஎண் எண்பது. தங்கத்தோட அணுஎண் எழுபத்தொன்பது. பாதரசமும் உலோகம்தான். தங்கத்தோட அடுத்த நிலை தனிமம்ங்கிறதால அதைக் கொஞ்சம் பிளந்தா போதும். ஆனா அதுவே உயிரை வாங்கிடும்! ”
“இன்னொரு முறை ஏதும் இருக்கா? ”- இது நரேன்
“எரிமலைக் குழம்போட கிரியா ஊக்கிகளை சேர்த்து அணுக்கரு சேர்க்கை பண்றது! இதுல எந்தப் பொருளும் தங்கமாகும். ஆனா ரசவாதம் பத்து நிமிஷம் கூட நிக்காது! நான் சொன்னது வெறும் அனுமானம்தான். அந்த தங்கத் துகள்களையும் குழியில சேகரிச்ச மண்ணையும் ரேடியேட் பண்ணி யூகிச்சது! உண்மையிலேயே என்ன நடந்தது, செய்முறை, கிரியா ஊக்கிகள் எதையும் கண்டு பிடிக்க முடியல”
லாவண்யாவின் வீடு
பெரிய பூங்கொத்தோடு லாவண்யாவின் எதிரில் மண்டியிட்டு அமர்ந்திருந்தான் விக்டர் மார்ஷல். “ஸாரி, ஸாரி மை ஹனி, நீ போனப்புறம்தான் உன் அருமை எனக்குத் தெரிஞ்சது. ஐ நீட் யு! ஐ லவ் யு! நீ சரின்னு சொல்லு, நாளைக்கே நாம மேரேஜ் பண்ணிக்கலாம்! ”
விக்டரின் இந்த மன மாற்றத்துக்குக் காரணம் லாரல் செய்த ஃபோன்- ரசவாதம் பற்றி லாவண்யாவுக்கு ஏதோ தெரிந்திருக்கிறது!
லாவண்யா விக்டரின் நிலையில் நரேனை கற்பனை செய்து பார்த்தாள். கண்ணீர் கரகரவென்று வழிந்தது!
இதை அறியாத விக்டர் லாவண்யா தன்னிடம் வீழ்ந்து விட்டதாக நம்பினான்! “பலவீனமான இந்தியப் பெண்!”
அந்தப் பலவீனமான இந்தியப் பெண் தனது மூன்று சகாக்களின் கதையை முடிக்கப் போகிறாள் என்பதும் இந்தியப் பெண்ணை ஏளனம் செய்யும் அவனுக்கு வாழ்நாள் முழுக்க மறக்க முடியாத பாடத்தைப் புகட்டப் போகிறாள் என்பதும் அவனுக்கு எங்கே தெரியப் போகிறது?
தொடரும்