ஒரு பெண்ணின் கதை

எப்பொழுதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் ஐ.டி நிறுவனம். ஆனந்தி ஒரு கிராமத்துப் பெண். தன் பொறியியல் படிப்பை முடித்து விட்டு ஆயிரம் ஆயிரம் கனவுகளுடன் இந்நிறுவனத்தில் புதிதாக பணியில் சேர்ந்தாள். அவள் பேச்சு, நடை, உடை, பாவணை அனைத்தும் அங்கு உள்ளவர்களுக்கு ஆரம்பத்தில் விசித்திரமாக இருந்தது. ஆனால் தன்னுடைய திறமையால் அனைவரின் மனத்திலும் எளிதில் இடம் பிடித்தாள். இந்தப் பெண் இல்லையென்றால் இந்த வேலை செய்வது கடினம் என்று அனைவரும் எண்ணும் வகையில் இருந்தது அவளின் பணி. தனக்கென்று உள்ள வேலையை முடித்து தனது சகாக்களுக்கும் உதவுவதில் அவளுக்கு ஆர்வம் அதிகம். அந்த நேரத்தில் தான் அவளுடன் வேலை செய்யும் கார்த்திக், ஆனந்தி மேல் தனக்கு இருக்கும் காதலை அவளிடம் கூறினான். அந்த நேரத்தில் அவளுக்கு அது சரியாக தோன்றவில்லை. தன குடும்ப சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு அவள் கார்த்திக்கின் காதலை நிராகரித்தாள். தொடர்ந்து இருவரும் நல்ல நண்பர்களாய் பழகினர். நாட்கள் செல்ல செல்ல ஆனந்திக்கும் கார்த்திக் மீது அபிமானம் ஏற்பட்டது. ஆனந்தி கார்த்திக்கை தன்னுடைய முன்மாதிரியாக நினைத்து வந்தாள். அவளுக்கு கார்த்திக்கிடம் இருந்தது காதல் மட்டுமல்ல. அதையும் தாண்டிய ஒரு உணர்வு. அவள் அவனை தன் தந்தையாக, தமையனாக, நண்பனாக, ஆசானாக இப்படி அனைத்துமாக பார்க்க ஆரம்பித்தாள். ஆனால் அவளிடம் ஒரு குணம் உண்டு , அது நல்ல குணமா, கெட்ட குணமா என்று இன்று வரை அவளுக்கு தெரியாது. அது என்னவென்றால் தனக்கு பிடித்தவர்களிடம் தன் அன்பை வெளிப்படையாக காண்பிக்க தெரியாது. அதே நேரம் தனக்கு முக்கியமற்றவர்களிடம் அவர்கள் குறை கூறாதபடி நடந்து கொள்ள மிகுந்த சிரத்தை எடுத்து கொள்வாள். இது கார்த்திக்கு பிடிக்காது. அவள் அவளை முக்கியமாக நினைப்பவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பதைப் பற்றி அவர்களுக்குள் எப்போதும் விவாதம் இருந்து கொண்டே இருக்கும். ஆனந்தி இதை மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொண்டாள். அவள் தன்னை பிடித்தவர்களிடம் தான் நடிக்க தேவை இல்லை என முழுமையாக நம்பினாள். ஆனால், கார்த்திக்கின் மனதில் இக்காரணத்தால் ஆனந்தி மேல் வெறுப்பு வரத் தொடங்கியது. இருப்பினும் அவன் காதல் உண்மையானது. அவளை விட மனமில்லாமல் அவளிடம் தொடர்ந்து பழகினான். கார்த்திக்கின் வீட்டில் இவர்கள் காதலுக்கு பெரிய எதிர்ப்பு இல்லை. ஆனந்தி தன் வீட்டில் இதைப் பற்றி கூறவே நிறைய நாட்கள் எடுத்துக் கொண்டாள். எதிர்பார்த்தது போலவே அவள் வீட்டில் இதை ஏற்று கொள்ளவில்லை. அவள் இன்னும் சில காலம் போராடினால் தன் வீட்டாரின் சம்மதம் கிடைக்கும் என்று கூறினாள். ஆனந்தி சரியான காலத்திலேயே அவள் வீட்டில் சொல்லாததும், முன்னாள் அவள் மேல் இருந்த வெறுப்பும் சேர்த்து கார்த்திக்கை வேறு முடிவு எடுக்க காலம் தூண்டியது. அவன் தன் வீட்டாரை தமக்கு வேறு பெண் பார்க்க சொன்னான். ஆனந்தியால் இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தன்னவர் இன்னொருத்தியுடன் கை கோர்த்துச் செல்வதை அவள் மனம் ஏற்க மறுத்தது. ஆனால் அவளால் என்ன செய்ய முடியும். திருமணத்தை நிறுத்தி கார்த்திக் மற்றவர்களின் முன்னால் தலைகுனிவதைப் பார்க்க அவளுக்கு சக்தி இல்லை. அனைத்தையும் விட அவரை மணக்க போகும் அந்த பெண்ணின் நிலையை தன்னுடன் ஒப்பிட்டு பார்த்தாள். ஆனந்தியின் இன்னொரு பலவீனம் , அவள் கார்த்திக்கை மட்டுமில்லாமல் அவனை சேர்ந்தவர்களையும் நேசிக்க ஆரம்பித்து விடுவாள். இப்பொழுது அந்த வரிசையில் கார்த்திக்கின் மனைவியாகப் போகும் அந்த பெண்ணும் சேர்ந்தாள். அவளை வெறுக்க முடியவில்லை. யாரோ ஒரு பெண் தான், என்றாலும் அவளை தன் காதலனுக்கு இன்று பிடித்துள்ளது. அதை தடை செயாமல் இருப்பதை விட பெரிய பரிசு என்ன தர முடியும் என சிந்தித்தாள். தன் கனவுகளை தன் மனதிற்குள்ளேயே பூட்டினாள். கார்த்திக் ஆனந்தியிடம் பேசுவதைக் கூட நிறுத்தினான். அவளை வெறுத்து ஒதுக்கினான். அவனையும் அவன் மனைவியையும் நேசிப்பதே தன்னுடைய வாழ்வின் முதல் கடமையாய் வைத்துக் கொண்டு, என்றாவது ஒரு நாள் கார்த்திக் தன் காதலனாக அல்ல, நண்பனாக திரும்ப கிடைப்பான் என்ற ஏக்கத்தில் ஆனந்தி தன் வாழ்க்கை பயணத்தை தொடர்கிறாள்.

எழுதியவர் : தங்கமீன் (4-Jan-15, 11:24 am)
சேர்த்தது : தங்கமீன்
Tanglish : oru pennin kathai
பார்வை : 873

மேலே