தோழர் கந்தசாமியும் தற்காலிக பணி நீக்கமும் - சிறுகதை

அப்பொழுதுதான் ஆர்ப்பாட்டம் முடிந்திருந்தது. உற்சாகமாக " ஜிந்தாபாத், ஜிந்தாபாத் ,இன்குலாப் ஜிந்தாபாத்" என்று ஆரம்பித்த முழக்கம் அடங்க 15 நிமிடங்கள் ஆனது. தொழிற்சங்கம்,தொழிற்சங்கக் கோரிக்கைகள், கோரிக்கைகளுக்கான ஆர்ப்பாட்டம், தர்ணா, ஊர்வலம் போன்றவை மாறனுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை அளித்தன. வேலைக்கு வந்து 7, 8 ஆண்டுகள் ஆகிவிட்டது என்றாலும் இன்றைக்குத்தான் வேலைக்கு வந்தது போல் இருக்கிறது . அலுவலகத்திற்குள் வந்து அலுவலக வேலையைக் கற்றுக்கொண்ட அளவிற்கு மாறன் தொழிற்சங்கங்களைப்பற்றியும் அறிந்துகொண்டான். தொழிற்சங்கத்திற்குள் வந்து வேலை செய்ய ஆரம்பித்து இன்று அவன் வேலை பார்க்கும் அலுவலகத்தின் கிளைச்செயலாளராகவும் ஆகியிருந்தான்.மற்றவர்களுக்காக நேரத்தைச் செலவழிப்பது, பணத்தை செலவழிப்பது, பன்முகம் கொண்ட மனிதர்களைப் பற்றி அறிந்து கொள்வது எனத் தொழிற்சங்கம் இவனுக்கு ஒரு புதிய அனுபவத்தைக் கொடுத்துக்கொண்டிருந்தது. தொழிற்சங்கத்தில் ஈடுபடுவதற்கே இந்த 'ஜிந்தாபாத், ஜிந்தாபாத், இன்குலாப் ஜிந்தாபாத்' முழக்கங்கள்தான் காரணம். " அநீதி கண்டு வெகுண்டெழுந்து ஆர்ப்பரித்து போராடாமல் அநீதி களைய முடியாது; பாடுபடும் தொழிலாளிக்கு சாதி இல்லை, மதம் இல்லை ; கொடி உண்டு ,கொள்கை உண்டு ;கோரிக்கைகள் பலவும் உண்டு; கோரிக்கையை வென்றெடுக்கத் தெம்பு உண்டு, திராணி உண்டு ; வீரவணக்கம், வீரவணக்கம்; குண்டடி பட்டுச் சாய்ந்தபோதும் ; குருதி மண்ணில் கொட்டியபோதும் ; கொள்கை முழக்கம் செய்திட்ட ; எங்கள் அருமைத் தோழர்களே; எங்கள் அருமைத்தோழியர்களே ; வீரவணக்கம், வீரவணக்கம் ; உங்களுக்கு எங்கள் வீரவணக்கம் " என்று முழக்கங்களைக் கேட்கிறபோது தன்னையறியாமலேயே ஒரு வேக உணர்வு உள்ளுக்குள் ஊடுருவதை மாறன் உணர்ந்திருக்கிறான்.


கூட்டத்தின் சிறப்பு உரையை மாவட்டச்செயலாளர் கந்தசாமி பேசுவார் என அறிவிக்கப்பட்டது. மெல்ல தென்றல் போல பேச்சை ஆரம்பித்தார் கந்தசாமி. இன்னும் கொஞ்ச நேரத்தில் தென்றல் புயலாக மாறும். கந்தசாமி, மாறனுக்கு மிகப்பெரிய உந்து சக்தியாகவும் , ஆலோசகராகவும் அந்த அலுவலகத்தில் இருந்தார். கந்தசாமியைப் பார்த்தவுடன் யாருக்கும் மரியாதை கொடுக்கவேண்டும் என்ற உணர்வு வரும். நல்ல பருத்த உடல், நெடிய உருவம்,லேசாக முன் தலையில் வழுக்கை விழுந்த உருண்டை முகம், யாரையும் எளிதாக அளந்துவிடக்கூடிய கூரிய கண்கள், எவருக்கும் பயப்படாத நெஞ்சம்,உடன் வேலை பார்க்கும் தோழர்களுக்கு எந்தப் பிரச்சனை என்றாலும் உதவ நீளும் கரங்கள் என்று கந்தசாமி அந்த அலுவலகத்தில் வலம் வந்தார். அந்த அலுவலகத்தில் பெரிய பொறுப்புகளில் இருக்கும் அதிகாரிகளுக்கு அவரைப் பார்த்தால் பயம்தான், யார் என்றாலும் நேருக்கு நேர் பேசிவிடுவார். நம் மடியில் கனம் இல்லை, எவனுக்கும் எதற்கும் பயப்படவேண்டும் என்பார் மாறனிடம். ஒரு தொழிற்சங்கவாதிக்கு முதல் தகுதி சுய நலம் இல்லாமையும் , பயப்படாமையும் என்பார். இரண்டுமே அவரிடம் இருந்ததால் தொழிலாளர்களின் ஈர்ப்புசக்தியாக அவர் இருந்தார்.அவரது பேச்சு எப்போதுமே துப்பாக்கியில் இருந்துவரும் குண்டு போலத்தான் இருக்கும். வெற்றுப்பேச்சே இருக்காது. சரியான இலக்கை நோக்கிப் பாயும் சக்தி வாய்ந்த ஆயுதமாக அவரின் பேச்சு அமைவது , போராட்டக்காலங்களில் எல்லாம் மிகப்பெரிய வாய்ப்பாக தொழிற்சங்கத்திற்கு அமையும். கூட்டம் முடிந்ததும் அன்றைக்கு கோட்டப்பொறியாளருடன் பேட்டி இருந்தது. கிளைச்செயலாளர் என்ற முறையில் சில பிரச்சனைகளைப் பற்றிப்பேசித்தீர்ப்பதற்காக கோட்டப்பொறியாளர் பேட்டிக்கு மாறன் மனு கொடுத்திருந்தான். மாவட்டச்செயலாளர் கந்தசாமியும் மாறன் வேலைபார்க்கும் கிளையிலேயே இருந்தது வாய்ப்பாக இருந்தது மாற்னுக்கு. எந்தப்பேட்டி என்றாலும் மாவட்டச்செயலாளரோடு போவது, பேசித்தீர்ப்பது ,பிரச்சனை தீரவில்லையென்றால் மாவட்டச்சங்கத்திற்கு அந்தப்பிரச்சனையை கொண்டு செல்வது என்ற வகையில் தொழிற்சங்க வேலையைப்பார்த்துக்கொண்டிருந்தான் மாறன்.கந்தசாமி சிறப்புரை முடிந்தவுடன் மீண்டும் கோரிக்கைகளுக்கான ஒலி முழக்கம் எழுப்பப்பட்டது.

கோட்டப்பொறியாளரின் அறைக்கு முன்னால் மாறனும் கந்தசாமியும் நின்றனர். இருவரும் வந்திருப்பதை துண்டுச்சீட்டில் எழுதி வெளியே இருந்த உதவியாளரிடம் மாறன் கொடுத்திருந்தான். அழைப்பு வரும்வரை வெளியில் நின்று கொண்டிருந்தனர்.கிளைச்செயலாளராக மாறன் பதவியேற்றவுடனேயே கந்தசாமி மாறனுக்கு வாழ்த்துக்களைச்சொல்லிவிட்டு, பாக்கெட் நோட் வைத்திருக்கிறீர்களா என்றார். மாறன் "இல்லை" என்றான். " முதலில் ஒரு பாக்கெட் நோட் வாங்கிக்கொள்ளுங்கள். நமது கிளையில் மட்டும் 120 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு உறுப்பினரும் ஒவ்வொரு வகை. ஒவ்வொருவரும் ஒவ்வொருவகையான வேலையை, கோரிக்கையை கிளைச்செயலாளரிடம் சொல்லுவார்கள். அனைத்தையும் தினந்தோறும் முதலில் நோட்டில் குறித்துவையுங்கள். சொல்லும் தோழருக்கோ, தோழியருக்கோ தாங்கள் சொல்வது கேட்கப்படுகிறது, குறிக்கப்படுகிறது , பிரச்சனை தீர வழி ஏற்படும் என்னும் நம்பிக்கை முதலில் ஏற்படவேண்டும். அதற்கேற்ப நடந்து கொள்ளுங்கள். உறுப்பினர்களின் வீடுகளில் நடைபெறும் நல்லது,கெட்டதுகளில் முதலில் நில்லுங்கள். கிளை மட்டத்தில் இருக்கும் பிரச்சனைகள் தீரவில்லையென்றால், மாவட்டத்திற்கு பிரச்சனையைக் கொடுங்கள். மாவட்ட அளவிலும் பிரச்சனை தீரவில்லையென்றால் மாநில அளவில் அல்லது அகில இந்திய அளவில் என்று பிரச்சனையின் தன்மையால் மேலே, மேலே கொண்டு சென்று பிரச்சனையை தீர்க்க நாம் தூண்டிக்கொண்டே இருக்கவேண்டும். பொது வாழ்க்கை என்று வந்துவிட்டால் பல பிரச்சனைகள் வரும்.மனதையும் கையையும் சுத்தமாக வைத்துக்கொண்டால் போதும், எப்படிப்பட்ட பிரச்சனைகள் வந்தாலும் சந்திக்கலாம்.உங்களைப் போன்ற இளைஞர்கள் எல்லாம் வருவது எங்களைப்போன்றோர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது தம்பி " என்றார்.

கோட்டப்பொறியாளரின் அறைக்குள் செல்லுமாறு அவரின் உதவியாள்ர் கூறினார். மாறனையும், கந்தசாமியையும் பார்த்த கோட்டப்பொறியாளர் ஆழ்வார் 'வாருங்கள் , வாருங்கள் ,உட்காருங்கள்' என்றார். " வணக்கம் , எங்கள் முன்னால் கிளைசெயலாளரே "என்று சொல்லிக்கொண்டே கந்தசாமி உட்கார்ந்தார். 'உட்காருங்கள் ,மாறன் ' என்றார். மாறனும் உட்கார்ந்தான். அந்த நிறுவனத்தில் சில ஆண்டுகளுக்கு முன்வரை பதவிஉயர்வு வாய்ப்புக்கள் நிறைய இருந்தன. சாதாரண குழிதோண்டுபவராக உள்ளே நுழைந்து, துணைப்பொது மேலாளர் என உயர்பதவிவரை பதவி வகித்து ஓய்வு பெற்றவர்கள், பணியாற்றுபவர்கள் இருந்தனர். அப்படி சாதாரண நிலையில் இருந்து இன்று கோட்டப்பொறியாளராக இருப்பவர்தான் ஆழ்வார். அவரைப்பற்றிக் கந்தசாமி ஏற்கனவே மாறனிடம் கூறியிருந்தார். என்னதான் நம்ம ஆட்களாக இருந்தாலும், அதிகாரப் பதவி என்று போய்விட்டால் அதற்கேற்றாற்போல் குணம் மாறும். நாம்தான் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பார். என்னோடு சேர்ந்து கோஷம் போட்டவர்தான் , கொடி பிடித்தவர்தான் , சில நேரங்களில் தொழிற்சங்கத்தைப்பற்றி ஒன்றுமே தெரியாத அதிகாரிகளிடம் பிரச்சனையைப் பேசித் தீர்த்துவிடலாம் ,நம்மகிட்ட இருந்து போறவங்ககிட்ட பிரச்சனையைத் தீர்ப்பதுதான் கடினமாக இருக்கும் என்பார்.

பிரச்சனைகளைப் பற்றி கோட்டப்பொறியாளரிடம் பேச ஆரம்பித்தனர். ஏற்கனவே பட்டியலை மாறன் கொடுத்திருந்ததால் ஒவ்வொன்றாக பேச வாய்ப்பாக இருந்தது. சில பிரச்சனைகள் எளிதாக தீர்க்கப்பட்டன. சில என்னால் முடியாது, பொது மேலாளரிடம் பேசித்தான் தீர்க்கவேண்டும் என்றார் கோட்டப்பொறியாளர். ஒரு 30 நிமிடங்களில் பேட்டி முடிந்தது. பேட்டி முடிந்தது என்று நினைத்துக்கொண்டிருந்த வேளையில் , கந்தசாமி ' ஒரு முக்கியமான் விசயம் பற்றி உங்களிடம் பேசவேண்டும், பேட்டியில் நாங்கள் அதனை எழுதிக்கொடுக்கவில்லை ' என்றார். கோட்டப்பொறியாளர் ' பரவாயில்லை , சொல்லுங்கள் ' என்றார். " தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கும் அழகர்சாமியின் பணி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் " என்று கந்தசாமி சொல்ல ஆரம்பிப்பதற்கு முன்னாலேயே " அவனுக்குஎல்லாம் வக்காலத்து வாங்கி பேச வருகிறீர்களே , உங்களுக்கு எல்லாம் வெட்கமாக இல்லையா ? " என்றார் கோட்டப்பொறியாளர் ஆழ்வார். உடன் இருந்த மாறனுக்கு தூக்கி வாரிப்போட்டது. கந்தசாமியின் இயல்பு தெரியும் மாறனுக்கு. ஏதோவில்லங்கம் ஆகப்போகிறது , கோபமாக கநதசாமி வார்த்தைகளைக் கொட்டப்போகிறார் என்று நினைத்தான். ஆனால் இயல்புக்கு மாறாக , ' தொழிற்சங்கப்பணிக்கு, பொது வாழ்க்கைக்கு என்று வந்து விட்டால் வெட்கத்தை எல்லாம் பார்க்க முடியுமா மிஸ்டர் ஆழ்வார் ? எங்களுக்கு வெட்கம் இல்லைதான் , அழகர்சாமிக்கு ஏதாவது வழி ஏற்படவேண்டும் அல்லவா, அவன் தற்காலிக நீக்கம் ஆகி 6 மாதங்கள் ஆகிவிட்டது" என்றார் கந்தசாமி.

ஆறு மாதத்திற்கு முன்பு நடந்த நிகழ்வு அப்படியே மனக்கண் முன்னால் ஓடியது மாறனுக்கு. மாறனும் அன்றைக்கு வேலையில்தான் இருந்தான். அழகர்சாமி அன்றைக்கு வேலைக்கு அரைமணி நேரம் தாமதமாக வந்தான். தாமதமாகும் என்று ஏற்கனவே செக்சன் மேலாளரிடம் சொல்லவும் இல்லை. எங்கோ திருமணம் என்று போய்விட்டு, திருமண பார்ட்டி என்று சொல்லி மதுவையும் அருந்திவிட்டு அரைமணி நேரம் தாமதமாக வந்த அழகர்சாமியை , செக்சன் மேலாளர் சுப்பையா ஏன் தாமதம், ஏன் போனில் சொல்லவும் இல்லை என்று கேட்க, சாரி சார் என்றுதான் அழகர்சாமி ஆரம்பித்தான். ஏதோ சுப்பையா சொல்ல, தள்ளி இருந்த மாறன் அந்த நிகழ்வு இடத்திற்கு வருவதற்கு முன்னால் கைகலப்பு ஆகிவிட்டது. சுப்பையாவும், அழகர்சாமியும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டார்கள். பின்பு மாறனும், மற்றவர்களும் அவர்களை விலக்கிவிட, அரசாங்க சட்டத்தின்படி சண்டையிட்ட இருவரும் உடனே தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர். சூபர்வைசர் சுப்பையா ,ஒரு வாரத்தில் மீண்டும்பணியில் சேர அனுமதிக்கப்பட்டார். இப்பொழுது வேலைபார்த்துக்கொண்டிருக்கின்றார்.அழகர்சாமி சஸ்பண்டு ஆகி 6 மாதம் ஆகின்றது.அவனது நடவடிக்கைகளால் வெறுப்புற்ற எவரும் மேலதிகாரிகளிடம் பேசவில்லை. மாறனும்கூட இரண்டுபேரும் அவனது கிளைத்தொழிற்சங்கத்தில் உறுப்பினர் என்றாலும் அழகர்சாமி குறித்துயோசிக்கவில்லை. நிர்வாகமாகப் பார்த்து அவனை வேலைக்கு எடுத்தால் எடுக்கட்டும், இல்லையேல் கிடக்கட்டுமென்று நினைத்துக்கொண்டிருந்தான். இப்பொழுது கந்தசாமி அவனைப்பற்றித்தான் கோட்டப்பொறியாளரிடம் பேசிக்கொண்டிருந்தார்.

கந்தசாமி பேசிக்கொண்டிருந்தார் " சார், நான் அழகர்சாமி செய்தது சரியென்று சொல்லவில்லை. அவனது தவறுக்கு வக்காலத்து வாங்கவும் இல்லை. ஏதோ தப்பு நடந்து விட்டது. திருந்திவிட்டேன் என்று சொல்கின்றான். அவன் ஒருவன் தான் அவர்கள் வீட்டில் வேலை பார்ப்பவன். அம்மாவும், அப்பாவும் வயதானவர்கள். அப்பாவுக்கு ஆஸ்தமா பிரச்சனை. மாதம் மாதம் இவன்தான் மருந்து வாங்கிக்கொடுக்கவேண்டும். இரண்டு தங்கைகள் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கின்றார்கள். இவன்தான் கல்லூரிக்குப் பணம் கட்டவேண்டும். அவனுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்றாலும் அவனை நம்பி 4 பேர் இருக்கின்றார்கள். அவனது சம்பளம்தான் அவர்களுக்குச்சோறும் மருந்தும் கொடுக்கிறது. அவனை மட்டும் பார்க்காதீர்கள் சார். அவனது குடும்பத்தைப்பாருங்கள். அவனது பரம்பரையிலேயே முதல் முதல் அரசாங்க வேலைக்கு வந்தவன். பக்குவம் இல்லை சார்.அவன் கெட்டவன் இல்லை, சமூக விரோதி இல்லை. சரிப்படுத்துவோம் . சரிப்படுத்துவதற்கு நான் பொறுப்பு எடுத்துக்கிறேன். கொஞ்சம் கருணை காட்டுங்கள் சார் " தன் நிலையிலிருந்து மிகவும் இறங்கி வந்து கோட்டப்பொறியாளரிடம் கெஞ்சுவது போலக் கேட்டுக்கொண்டிருந்தார் கந்தசாமி. மாறனுக்குமிகவும் வருத்தமாக இருந்தது. இந்த அழகர்சாமிப்பயல் செய்த வேலை, அவனுக்காக சிங்கம் போய் மன்னிப்புக்கேட்பதுபோல கந்தசாமி இந்தக் கோட்டப்பொறியாளரிடம் கேட்டுக்கொண்டிருக்கிறாரே என்று எண்ணிக் கொண்டிருந்தான்.

ஒரு அரைமணி நேரம் நடந்த உரையாடலுக்குப்பின் கோட்டப்பொறியாளரை சம்மதிக்க வைத்தார் கந்தசாமி. மிகவும் வித்தியாசமான அனுபவமாக மாறனுக்கு இந்த நேர்முகம் அமைந்தது. வெளியில் வந்த கந்தசாமி, "மாறன், அழகர்சாமியை போனில் பேசி தொழிற்சங்க அலுவலகத்திற்கு வரச்சொல்லுங்கள் " என்றார். தொலைபேசியில் அழைத்து அழகர்சாமியிடம் சொன்னான். அரைமணி நேரத்தில் அரக்க , பறக்க வந்து சேர்ந்தான் அழகர்சாமி. அழகர்சாமி ஆள் பாதியாக இளைத்துப்போயிருந்தான். அழகர்சாமியைப் பார்த்ததும் " உட்காருங்கள் தோழர் " என்றார் கந்தசாமி. அழகர்சாமி உட்கார, அவருக்கு அடுத்து மாறனும் உட்கார்ந்தான்.
கடுமையாக ஆரம்பித்தார் கந்தசாமி " அரசாங்க வேலைன்னா என்னான்னு நினைச்சுகிட்டேங்க, உங்க இஷ்டத்திற்கு தாமதமாக வருவீங்க, கேட்ட சூபர்வைசரோடு வாக்குவாதம் பண்ணி , சண்டை போடுவீங்க, உங்களைக் காப்பாத்த நாங்க, தொழிற்சங்கம் போயி பேசணுமா,நீங்க செஞ்ச தப்புக்கு உங்களை வேலையை விட்டே நிரந்தரமாக தூக்கலாம், எங்களாளையும் ஒன்றும் பண்ண முடியாது , நீங்க பண்ணின தப்பு அந்த அளவுக்கு கடுமையானது, தெரியுமா ? " என்று நிப்பாட்டினார்.
மெளனமாக நின்று கொண்டிருந்த அழகர்சாமி தெரியும் என்று தலையாட்டினான். " என்ன படிச்சிருக்கே, பி.எஸ்.ஸி .முடிச்சிட்டு ,பரீட்சை எழுதி பாஸ் பண்ணி , இங்கே வேலைக்கு வந்திருக்க, எததனை பேரு பி.இ.., எம்.இ.ந்னு முடிச்சிட்டு 5000 ரூபாய்க்கும், பத்தாயிரம் ரூபாய் சம்பளத்திற்கும் அவதிப்பட்டுக்கிட்டு இருக்காங்கன்னு , தெரியுமா ? " என்றார்.
"கிடைத்த வேலையை ஒழுங்காகக் காப்பாத்த தெரியலே, திருமணத்திற்கு போனேன்னு குடிச்சிட்டு வந்திருக்க, அப்படியே ஒன்னை போலீசில் அதிகாரி கிட்ட ஒப்படைச்சு, ஒரு மெடிக்கல் ரிப்போர்ட் குடிச்சிருக்கே என்பதை உறுதிப்படுத்தி கொடுத்திருந்தா, உன் வேலையே போயிருக்கும், குடிச்சிட்டு வந்து தகராறு பண்ணினேன்னு உன்னையை ஜெயிலுக்குள்ளேயும் போட்டிருக்க இயலும் , முதலில் மனுசனா இருக்க பழகு , மத்தது எல்லாம் தானா வரும் " என்றார்.

" நாங்க அதிகாரிகிட்டே பேசி மறுபடியும் உன்னையை வேலைக்கு சேர்ப்பதற்கு பேசி வந்திருக்கின்றோம். பழையபடி ஏதாவது இப்படி தப்பு பண்ணினா நாங்க வந்து நிப்போம், யூனியன் வந்து காப்பாத்துமுன்னு நினைக்காதே, நாங்க மதத்தோடு குருமார்கள் இல்லை. எத்தனை தடவை தப்பு பண்ணுக்கிட்ட வந்தாலும் காசை உண்டியல்ல போடு, பாவ மன்னிப்பு உனக்கு கிடைக்கும்ன்னு சொல்றதுக்கு. உனக்காக இல்லை, உங்க வயசான அப்பா, அம்மா, படிக்கிற உன் தங்கச்சிங்க இவங்களை மனசுலே வச்சு பேசி உன்னைக் காப்பாத்தி விட்டிருக்கிறோம் நானும் மாறனும். இதேபோல் இனி ஒருமுறை நடந்தா, நிர்வாகம் உன்னையை டிஸ்மிஸ் பண்ணும், அப்படி டிஸ்மிஸ் பண்ணினால் நாங்க யாரும் ஏன்னு கூடக் கேட்க மாட்டோம் " என்று சொல்லச்சொல்ல , சிலையாக நின்ற அழகர்சாமி" இல்லை, தோழரே , இனி நான் தப்பு செய்ய மாட்டேன், ஆறு மாதத்தில் பட்டு அழுந்திட்டேன். என்னை மன்னுச்சிடுங்க " என்று காலில் விழ வந்தபோது சட்டென்று அழகர்சாமியை பிடித்து நிறுத்திய கந்தசாமி, "இதெல்லாம் வேண்டாம், ஒழுங்காக வேலையைப் பார். நாமெல்லாம் இந்த மாதிரி அலுவலகத்திற்குள்ளேயே நுழைய முடியாத நிலைமை இருந்தது.கூடப்போனா செக்யூரிட்டி வேலைக்கு நம்மளை எடுத்தான் . இன்றைக்கு எவ்வளவோ மாறியிருக்கு. நமக்கு கிடைக்கிற இந்த வாய்ப்பைப்பார்த்து, நமது பிள்ளைகள், நம்து ஒடுக்கப்பட்ட வகுப்பைச்சார்ந்த பிள்ளைகள் மேலும் ,மேலும் உள்ளே வருவதற்கு என்ன வழி என்று பார்க்கவேண்டும். வந்த ஒருத்தன் , இரண்டுபேரும் வெளியே தள்ளப்படுவதற்கான சூழலை நாம் ஏற்படுத்தக்கூடாது " என்று கந்தசாமி சொல்லச்சொல்ல அவரை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்தான் மாறன்.

தப்பு பண்ணிய குழந்தையை நன்றாக அடித்து கண்டித்துவிட்டு , பின்பு உணவைக் கொடுத்து சாப்பிடச்சொல்வது போல , "சரி வாங்க அழகர்சாமி, மாறன் , உள்ளேயிருக்கும் சுப்பயாவையும் கூப்பிடுங்க, அவர்கிட்டே அழகர்சாமி மன்னிப்பு கேட்கட்டும், பின்பு மொத்தமாக டீக்குடிக்கப்போகலாம்" என்று சுப்பையாவை வெளியே வரவழைத்தார். சுப்பையாவிடம் " தோழரே, இனி அழகர்சாமி ,மரியாதையாக உங்களிடம் நடந்து கொள்வார். அதற்கு நான் பொறுப்பு, உங்களிடம் மன்னிப்பு கேட்பார் அழகர்சாமி " என்று சொல்ல , சுப்பையாவின் காலிலும் விழப்போன அழகர்சாமியைத் தடுத்து நிறுத்தினார் சுப்பையா. " என் மகன் வய்சு தம்பி நீங்க, டக்கென்னு உணர்ச்சி வசப்பட்டு வார்த்தைகளை விடாதீங்க, சிந்தின வார்த்தைகளை மறுபடி அள்ள முடியாது. போங்க , போங்க , போய் ஒழுங்கா வேலையைப் பார்த்து வாழ்க்கையில் உருப்படற வேலையைப் பாருங்க " என்றார். கொஞ்ச நேரத்தில் இடமே கல, கலப்பாக மாறியது. அனைவரையும் அழைத்துக்கொண்டு கந்தசாமி முன் செல்ல மாறனும் மற்றவர்களும் டீக்கடைக்குச்சென்று கொண்டிருந்னர். .

எழுதியவர் : வா.நேரு (4-Jan-15, 12:33 pm)
பார்வை : 170

மேலே