காதல் கடிதம்

ஒன்றரைத் திங்கள் முன்
அலுமாரியின் கீழ்
உருண்டு சென்ற
வன்பந்தை எடுக்கும்
பகீரதப் பிரயர்த்தனமது

ஆட்டம் தாங்காமல்
சரிந்து விழுந்தன
அலுமாரியின் மேல்
அடுக்கி வைத்திருந்த
காகிதக் கற்றைகள்

என்றோ படித்து
மேதையாகிய செருக்கில்
தள்ளி வைக்கப்பட்டிருந்த
வரலாற்றுச் சான்றுகளுள்
மீண்டுமொரு தொல்லாய்வு

தேடலின் முடிவில்
மூலைகள் மழுங்கி
மூன்றாய் மடித்து
புழுதி படிந்திருந்த
கோட்டுத் தாள்கள்

அவைதனை எடுத்து
விரலின் நுனியால்
புழுதியைச் சுண்ட
மனதிலும் புதிராய்
நகக் கீறல்கள்

பள்ளிப் பருவ
பதின்ம வயதினர்
சாதனையாய் எண்ணும்
ஒன்றிற்கான
எழுத்தியல் பட்டயமது

இன்றும் அன்றுபோல்
ஆவலுடன் பிரித்து
ஒவ்வொன்றாய்ப் படிக்க
காகிதம் முழுதும்
உரியவள் குரலாய்..

எழுதியவர் : ரா. அருண் தர்ஷன் (4-Jan-15, 9:41 pm)
Tanglish : kaadhal kaditham
பார்வை : 1551

மேலே