நாளைய தமிழும் தமிழரும் - பொங்கல் கவிதைப்போட்டி 2015

தேவதைகளின் யுகமொன்றில்
முடியணிந்து கொண்ட
தேவதையொருத்தி , பூமிக்கு ,
வெண்மை போர்த்தி வந்தாள்..
என் விரல் பிடித்துக்
கவிதை தந்த அவள் , அவள்
பாதம் பட்ட இடங்களில்
பச்சை தூவிச் சென்றாள்..
பூக்களைத் திறந்து
மென்மை செய்த அவள்
குழல் வழி வழிந்த குரலைக்
காற்றோடு சேர்த்தாள்..
மலைகளிலும் வனங்களிலும்
மொழியிலும் மனங்களிலும்
பனித்தூவிச் சென்ற அவள்
பூமி புதிதாய்த் தோன்றும்
நாளொன்றில்
மீண்டும் வருவதாய்
சொல்லிச் சென்றாள்
பச்சைக் கண் கொண்ட
வெண்ணிற தேவதை
அவளுக்குத்
தமிழென்று பெயர்...
- கிருத்திகா தாஸ்...