நாளைய தமிழும் தமிழரும் பொங்கல் கவிதைப் போட்டி 2015

நாளைய தமிழும் தமிழரும் (பொங்கல் கவிதைப் போட்டி 2015)
பாவலர் கருமலைத்தமிழாழன்

மேல்உதடு கீழ்உதடு ஒட்டி டாமல்
மேல்நாட்டு மொழியினிலே பேசிக் கொள்வர்
மேல்சட்டை வேட்டியினை விட்டு விட்டு
மேல்நாட்டு முறையினிலே அணிந்து கொள்வர்
பால்மோரை இளநீரை ஒதுக்கி வைத்து
பருகுதற்கு அயல்பானம் நாடிச் செல்வர்
கால்கொண்ட மூத்தகுடி என்று மட்டும்
கழறிடுவர் இவர்கள்தாம் தமிழர் நாளை !

தாம்பெற்ற குழந்தைகட்கு மூச்சு முட்டும்
தமிழல்லா பெயர்களையே வைத்த ழைப்பர்
வேம்பென்றே தமிழ்க்கல்வி புறக்க ணித்து
வெளிமொழிதான் அறிவென்றே படிக்க வைப்பர்
தாம்கட்டி வைத்தகோயில் கடவு ளுக்கும்
தமிழ்மொழியே புரியாது எனப்ப கர்வர்
ஆம்இவரால் செம்மொழிதாம் மூலை தன்னில்
அமர்ந்துவிழி நீர்சொரிய ஏங்கும் நாளை !

ஆட்சிமொழி செய்யாமல் தமிழை யிங்கே
அவலமாக்கி ஆங்கிலக்கால் நக்க வைப்பர்
ஆட்சிதன்னில் பிறரையேற்றி அவரின் பின்னே
அடிமையென நாயைவிடக் கீழாய்ச் செல்வர்
சாட்சியென உள்ளபுறப் பாட்டின் வீரச்
சரித்திரத்தைப் பொய்யாக்கிக் குனிந்து நிற்பர்
நீட்டிநாவில் மட்டுமிங்கே முழக்கம் செய்வர்
நீளுலகில் தமிழர்தாம் முதன்மை என்றே !

(சொந்த கவிதையென உறுதியளிக்கிறேன்)தொலைப்பேசி-09443458550
பாவலர் கருமலைத்தமிழாழன், 2-.16. ஆர்.கே. இல்லம், புதிய வசந்த நகர்,முதல் தெரு,
ஒசூர் – 635 109 , கிருட்டினகிரி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.

எழுதியவர் : பாவலர் கருமலைத்தமிழாழன் (9-Jan-15, 10:48 am)
பார்வை : 113

மேலே