சாதி ஒழி மதம் அழிபொங்கல் கவிதைப் போட்டி 2015
சாதி ஒழி மதம் அழி (பொங்கல் கவிதைப் போட்டி 2015)
பாவலர் கருமலைத்தமிழாழன்
சாதிக்கப் பிறந்திட்ட தமிழா உன்றன்
சாதனைகள் சாதிகளா எண்ணிப் பார்ப்பாய்
நீதிகளை உலகிற்கே எடுத்து ரைத்து
நிற்கின்ற திருக்குறளில் சாதி உண்டா
வீதியெலாம் உயர்வெனநீ முழங்கும் சங்கம்
விளைவித்த இலக்கியத்தில் சாதி உண்டா
போதித்த யாவருமே கேளிர் சொல்லைப்
பொய்யாக்கிப் புரையாகிப் போனாய் இன்று !
மதமென்னும் மதம்பிடித்தே அலையு கின்றாய்
மனுதர்ம சாத்திரங்கள் உண்மை யென்று
விதவிதமாய்ப் பொய்சொல்லிக் கணவாய் வந்தோர்
விதைத்திட்ட மூடத்தின் உரமாய் ஆனாய்
நிதம்சூதில் உன்னறிவை மழுங்கச் செய்தார்
நீயதிலே மதிமயங்கி பகைவ ளர்த்தாய்
உதவாத மதங்களினைப் பிடித்துக் கொண்டே
உறவறுத்தாய் மனிதத்தை துறந்து விட்டாய் !
சாதிமதம் இரண்டையுமே ஒழிக்கா விட்டால்
சரித்திரத்தில் தமிழினமே அழிந்து போகும்
ஆதிக்கம் செய்வோரை விரட்டா விட்டால்
அருந்தமிழா உன்னினத்தின் பெயரே மாறும்
வீதிவந்தே பொதுமையினை நாட்டி டாமல்
விதியென்று நீயிருந்தால் வீழ்வ துண்மை
ஆதியிலே இல்லாத சாதி மதத்தை
அழித்தொழித்தே தமிழனென்று வாழ்வோம் வாரீர் !
(சொந்த கவிதையென உறுதியளிக்கிறேன்)தொலைப்பேசி-09443458550
பாவலர் கருமலைத்தமிழாழன், 2-.16. ஆர்.கே. இல்லம், புதிய வசந்த நகர்,முதல் தெரு,
ஒசூர் – 635 109 , கிருட்டினகிரி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.