வீழ்க சாதி சமயம் வெல்க மனித நேயம் தைப்பொங்கல் கவிதைப் போட்டி 2015”
இறையே இலக்காய்க் கொண்டு
அன்பும் அருளும் ஈகையும்
இணக்கமும் இயல்பாய்க் கண்டு
இனிது வாழவே மதங்களாம் !
உயரிய நோக்கம் மடிந்து
உண்மை முற்றிலும் மறந்து
உள்ளம் குறுகிய மாந்தருள்
உட்பகை மூண்டதுதான் என்னே ?
மனுநீதியாம் ஒருகுலத்திற்கு ஒருநீதி
மண்ணில் வேற்றுமைகள் மண்டியதென்னே ?
‘மதம்’கொண்ட மதவாதிகள் இன்று
மனிதரைப் பிரித்தாள்வது என்னே ?
எத்தனை பிறவிகள் எடுத்தோமோ
எத்தனை மதங்கள் கொண்டோமோ
அத்தனை மதங்களும் நமதன்றோ
அதனைப் பகைப்பது அறிவாமோ ?
மத மாச்சரியங்கள் மாளுவதெப்போ
சாதி சச்சரவுகள் சாவதெப்போ
சகலரும் சமமென்பது சாத்தியமே
சாதித்துக் காட்டுவோம் இளையோரே
சாதிமதம் துறந்த கலப்புமணங்களே
சகலருக்கும் பொதுவான நாட்டுவளங்களே
சமத்துவச் சமுதாயம் சமைத்திடுமாம்
சாதி துறப்போம் ! மதம் மறப்போம் !
இக்கவிதை இப்போட்டிக்காக என்னால் எழுதப்பட்டது ; வேறெங்கும் பதிவிடப்படவில்லை
சபா வடிவேலு , 7 ராஜூ அடுக்ககம் , 66 சாஸ்திரி சாலை , தென்னுர் , திருச்சி – 620017