31 பேர் ராசி, எண் ராசி, கல் ராசி, மனை ராசி - எல்லாம் சரியா நீ யோசி
ஆற்றல் இல்லாமல்
*** அதிக எதிர்பார்ப்பில்
மாற்றும் 'வாசல்திசை'
*** வளம்தருமா வாலிபனே?
எண்ணிச் செய்யாமல்
*** ஏமாந்து கோட்டைவிட்டு
'எண்ணை'மட்டும் மாற்றினால்
*** எல்லாம் நடந்திடுமா?
தொடர்ந்து போராடும்
*** துணிச்சல் இல்லாமல்
அடைந்த 'பேர்மாற்றம்'
*** ஆசைநிறை வேற்றுமா?
சாதிக்க வேண்டுமெனில்
*** தைரியந்தான் வேண்டுமடா!
'மோதிரக்கல்' மாற்றுகின்ற
*** முட்டாளே, ஒன்றுகேள்!
தாயத்து, மாந்தரீகத்
*** தகடுகள், அருள்வாக்கு
மாயத்தில் ஒன்றும்
*** மாங்காய் பழுக்காது!
வெளிமாற்றம் எதனாலும்
*** வெற்றிவந்து சேராது!
எளிதாகும் எல்லாமே
*** உள்ளே உனைமாற்று!