பசுமை நினைவலைகள்

“பசுமை நினைவலைகள்”

முழுசேலை முழங்காலளவு
முண்டாசு தலைப்பாவென
மகராசிக் கூட்டமொன்று
மனம்குளிர உழைக்குதடி..!

பதியமாய் நட்டுவைத்த
பயிர்களோ டிடையிடையே
பதியமிடா களையொன்று
பறித்துவிட குனியுதடி..!

சீருடையை யணிந்தவொரு
சிரிப்பழகில் பசுமையவள்
தாலாட்டும் தென்றலென
தாயாக நிற்கின்றாள்...!

சேலையும் ரவிக்கையும்
சேராத பொருத்தமென
செலவுக(ளை) சீரழித்து
சிக்கனத்தை பார்க்குமொரு

புத்தியிலா கூட்டமெலாம்
பிழைக்காதினி பூமியிலே
பேரழகை வாழ்க்கையென
பெருமைபீத்தி சாகுமிடையில்..!

பசுமையவள் மேனியிலே
பட்டுவண்ண சேலையின்றி
பத்துவண்ண ஆடையிலே
பதிந்துவிட்ட உறவுகளை ..!

பக்கத்திலே வாழையவள்
பசிதீர்க்க அழைக்கின்றாள்
பந்தியிலே முந்திவிரிக்க
பகுத்துண்டு வாழ்வதற்கு..!

படியேறும் பிள்ளைகளோ
பட்டணத்தில் குடியேற
பக்கத்துணை யாமென்று
பிள்ளையாக தென்னையவள்..!

வரப்போரம் வைத்தாலும்
வயக்காட்டில் விதைத்தாலும்
வளமான வாழ்க்கைக்கு
வழிகாட்டி இயற்கையவள் ...!

மாசுநிறைந்த வூருக்குள்ளே
மலரும்மொரு நினைவுகளாய்
மனதைநெருடி பார்க்குமொரு
மருத்துவமா யொருதுளிகள் ..

பசுமை காப்போம் ! பகைமை அறுப்போம்
மரம் காப்போம் ! மனிதம் காண்போம்..!

எழுதியவர் : ஜாக் .ஜி .ஜெ (9-Jan-15, 8:43 pm)
சேர்த்தது : ஜெபீ ஜாக்
பார்வை : 121

மேலே