பொங்கட்டும் பொங்கல்
ஊரணி ஊராக
வயல்வெளி வீடாக
வாழ்விழந்து தவிக்கும்
ஊரணி வயலுக்கு மணநாளாம்
பேரணியாய் திரண்டு
வாழ்த்திட வாருங்களே !
வேலையற்ற விவசாயிக்கு
வேலைதந்த முதலாளி
வேலையிழந்து தவிக்கும்
வேதனையான தருணமிது!
வறண்டு இருண்டிருக்கும்
வயல்வெளியை காண கூடும்
வாலிபர்க்கு தேரோட்டம் !
பட்டிகாட்டை சுற்றிகாட்ட
பட்டணத்து கூட்டாளியுடன்
வந்து போகும் இளைஞனை
பார்த்து பார்த்து ரசிக்கும்
பகட்டான நேரமிது !
மிஞ்ச கொஞ்சம் பச்சை பார்த்து
பட்டணத்தான் மனம் கூத்தாட
நெஞ்சுக்குள்ள நஞ்சை திண்ண
நினைவோடு விவசாயி !
எஞ்சி கிடக்கும் தரிசெல்லாம் முன்பு
நஞ்சை புஞ்சை விளைந்த இடம்
எழுந்து நிற்கும் மாளிகையில் முன்பு
நீந்தி பழகிய ஊரணியாம் !
இருப்பாரெல்லாம் பிழைப்பாய் எண்ணி
ஏலம் விட்டார் மனை தரகருக்கு
ஏப்பம் விட்டார் நிலத்தையும் பணத்தையும்
வயிற்று பசிக்கு விற்றும் பசியாரது
வறுமையில் தவிகின்றார் இன்றும் !
வளர்த்த காளையை அறுத்துபோட்டு
உழுத கலப்பையை விறகாக்கி
உளுத்த அரிசியில் பொங்கல்வைத்து
வயிற்று பசிக்கான பொங்கலடா !