நாளைய தமிழும் தமிழரும் - பொங்கல் கவிதைப் போட்டி - 2015

தமிழுக்கு அமுதென்று பெயர்சொல்லி வந்தோம்
தரணிக்கு அழகென்று பெருமிதம் கொண்டோம்
நாளைய தமிழும் தமிழரும் நலமுறவே - நாம்
நற்றமிழ் பயிற்றும் முறைமைகள் செய்வோம்.
தமிழ்தன்னைக் கற்க அரிதென்று தள்ளி
இளம்தளிர்களைத் தடுக்கும் முயற்சிகள் செய்யோம்.

நன்னூலை எல்லாம் மின்னூலாய் சமைத்து
நாளைய தமிழர்க்குப் பொக்கிசமாக்கி
விலைமதிக்க முடியாத பொருளாக எண்ணி
வீட்டிற்குள் பூட்டும் விந்தைகள் செய்வோம்.
நாட்டிற்கு உதவாத வெற்றுக் கருத்தினை
ஏட்டில் எழுதும் முயற்சிகள் செய்யோம்.

தமிழரின் பெருமை உழைப்பினுள் உண்டு
உழவரின் பெருமை உணவினுள் உண்டு
இளைஞரின் பெருமையைக் கல்வியில் கண்டு
எதிர்காலம் சிறக்கப் புதியவை கண்டு
ஏற்றம்பெற மாற்றங்கள் செய்வோம்
ஏமாற்றும் செயல் யாருக்கும் செய்யோம்.

தமிழே தமிழரென பண்பட்ட மனத்தினராய்
பாரதியின் புதுமொழியைச் சாரதியாய் கொண்டினிநாம்
வள்ளுவனைப் பின்பற்றி வாய்மைக்கு வித்தூன்றி
அவ்வை சொன்னமொழி அன்புக்கு வழிஎனவே
வழித்தோன்றல்களை வாழ்விக்க - என்றும்
வாழும் வழிவகை நாம்காண்போம்.

எழுதியவர் : Thaimagal (14-Jan-15, 12:52 am)
பார்வை : 72

மேலே