இப்படி நாம் காதலிப்போம் பொங்கல் கவிதை போட்டி 2015

இப்படி நாம் காதலிப்போம்
("பொங்கல் கவிதை போட்டி 2015")
காதலிப்போம்! - இப்படி நாம்
காதலிப்போம்!!
மண்ணின் மரபை மாறாமல் மக்களின் மாண்பு மீறாமல்
வலியோர் செயலுக்கு அஞ்சாமல் மெலியோர் வாழ்வை துஞ்சாமல்
பார்ப்பவர் கண்கள் கூசாமல் கேட்பவர் நாவும் ஏசாமல்
பயந்து எங்கும் ஒதுங்காமல் முகத்தை மூடி மறைக்காமல்
மதத்தில் நல்லவை எடுத்து சாதியில் அல்லவை விடுத்து
சமூகத்தின் ஒற்றுமை தொடுத்து சகலருக்கும் நன்மை கொடுத்து
கலவரத்தால் சமூகம் வெடிக்காமல் மோதலால் 144 தடை பிறக்காமல்
பண்பாட்டின் தாக்குதல் தவிர்த்து பாகுபாட்டின் போக்குதல் குறைத்து
காதலிப்போம்! - இப்படி நாம்
காதலிப்போம்!!
பொது இடத்தில் கூடாமல் போக்கிரித் தனம் பண்ணாமல்
வஞ்சம் எதுவும் தீர்க்காமல் லஞ்சம் ஏதும் கொடுக்காமல்
தஞ்சம் எங்கும் அடையாமல் நெஞ்சம் அன்பு குறையாமல்
நல்ல பெயர் கெடுக்காமல் மக்கள் வரிப்பணம் வீணாகாமல்
கொடுத்த பணியை துறக்காமல் எடுத்த படிப்பை நிறுத்தாமல்
சுயநலம் எங்கும் தழைக்காமல் பொதுநலம் ஏதும் தவிர்க்காமல்
இயற்கை ஊறு விளைக்காமல் செயற்கை கூறு நிறைக்காமல்
வளத்தின் நலம் குறைக்காமல் நலத்தின் வளம் குறையாமல்

சுற்றம் கண்டு நடுங்காமல் சூழல் கண்டு கலங்காமல்
குடும்ப மானம் குலையாமல் சுற்றி எங்கும் திரியாமல்
அல்லோர் சிறுமை உயர்த்தாமல் நல்லோர் புகழ் தளர்த்தாமல்
ஏற்றத்தாழ்வின் இழிவை மறைத்து ஏகாந்த வாழ்வை நிறைத்து
லைலா மஜ்னு கரமாய் ரோமியோ ஜுலியட் வரமாய்
மார்க்ஸ் ஜென்னி உரமாய் அம்பிகாபதி அமராவதி தரமாய்
வள்ளுவன் சொல் வழுவாமல் பாரதி சொல் நழுவாமல்
தமிழர் மரபைக் குலைக்காமல் தமிழின் வளமை குன்றாமல்
காதலிப்போம்! - இப்படி நாம்
காதலிப்போம்!!
இந்த கவிதை என்னால் எழுதப்பட்டது என உறுதி கூறுகிறேன்
ச. பொன்முத்து (வயது 48)
சுவாமி என்கிளேவ்,
எண்.15-டி, பாரதி சாலை,
பெரம்பூர், சென்னை-600 011
தமிழ்நாடு, இந்தியா.
கைபேசி எண் - 9444710223

எழுதியவர் : பொன்முத்து (15-Jan-15, 4:19 pm)
பார்வை : 52

மேலே