===+++எப்படி தமிழ் சாகும்+++===

வணக்கம் தோழமைகளே...!
இனி தமிழ் மெல்ல மெல்ல சாகுமென்று அந்த முண்டாசுக்காரன் சொல்லிவிட்டுப் போய்விட்டான். ஆனால், அது எப்படி எல்லாம் சாகும் என்பதை சுருக்கமாக ஆராய்ந்து பார்ப்பதே இந்த கட்டுரையின் முயற்சியாகும்.
பொதுவாக ஒரு மொழி எப்படி எல்லாம் சாகும் என்பதை ஆராய்ந்து பாருங்களேன்.
நம் மொழியை நாம் பேசாமல் பிற மொழியை பேசிக்கொண்டு இருந்தால் நம் மொழி சாகலாம். சாகலாம் இல்லை சாகும் என்றே கூறலாம்.
அது எப்படி பிறமொழி பேசுவதால் நம் மொழி சாகும் என்பதற்கு தெளிவான விளக்கத்தை பின்பு கூறுகிறேன். ஒரு மொழி பேசப்படாமல் இருந்தால் அந்த மொழி காலபோக்கில் மறைந்து போய்விடும், மறந்தும் போய்விடும். பேச்சு வழக்கில் உள்ள மொழி உயிருள்ளவையாகவும், பேச்சு வழக்கற்றமொழி உயிரற்றவையாக்கவுமே காணப்படும் என்பதே உண்மையாகும்.
நீங்க சொல்றது சரிதான், தமிழ்தான் எல்லோரும் பேசிகொண்டு இருக்காங்களே அது எப்படி சாகும் என்று உங்களுக்கு கேட்கத்தோன்றுகிறது இல்லையா? சரி அதற்கும் எனக்கு தெரிந்தவரை பதிலளிப்பதே எனது கடமையாகும்.
தமிழ் சாகாது. தமிழை யாராலும் சாகடிக்க முடியாது. நல்ல நல்ல இலக்கண இலக்கியங்களோடு புதிய புதிய படைப்புகள் இருக்கும்வரையும், பிறமொழி ஊடுருவலை தடுக்கும் போராளிகள் இருக்கும்வரையிலும், நல்ல கவிஞர்கள் இருக்கும்வரையிலும், நல்ல அரசு இருக்கும்வரையிலும் தமிழ் நிச்சயம் சாகாது, அப்படி செத்து போய்விடும் அளவிற்கு தமிழ் ஒன்றும் ஆட்டம் கண்டுவிடவில்லை, அடித்தளம் இன்னும் வலிமையாகவேதான் இருக்கிறது.
உலகில் உள்ள மற்றமொழிகள் எல்லாம் பிறமொழி சாயல்களிலும், பிறமொழிகளில் இருந்து உருவான கிளைமொழிகளாகவும் இருக்கின்றன. அவைகள் எல்லாம் இன்னொரு மொழியின் உதவி இல்லாமல் இயங்கமுடியாது. ஆனால், தமிழ்மொழி தனித்தன்மையோடு இந்த உலகத்தில் முதன் முதலில் உருவான மொழியாகும். இப்படிப்பட்ட மொழியை பேணிகாப்பது நமது தலையாய கடமையாக கொண்டால் எப்படி தமிழ் சாகும் சொல்லுங்கள்?
அப்புறம் எப்படிங்க அந்த முண்டாசுக்காரன் சொன்னான்...? அவன் சொன்னதும் முற்றிலும் உண்மைதான். இனி தமிழ் மெல்ல மெல்ல சாகும் என்பது மறுக்கமுடியாத துயரநிலையாகும். அட என்னாடா இவன் எதையாவது ஒன்றை சரியாக கூறாமல் குழப்புகின்றானே என்று யாரும் வருத்தப்பட வேண்டாம்.
''உலகமே வியக்கின்ற தமிழின் தனித்தன்மையும். இலக்கண இலக்கியங்களோடு அதை வலுவாக கட்டி எழுப்பிய நமது முன்னோர்களின் அடித்தளமும்.'' ''பிறமொழி ஊடுருவளாலும், அதனால் ஏற்படுகின்ற பின்விளைவுகளை மக்களிடம் கூறி அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற என்னைப்போல் சிறுவர்களின் செயலும்.'' ''பிறமொழி ஊடுருவலை எதிர்த்து போராடும் போராளிகளின் தியாகமும்'' தமிழை சாகவிடாது என்று, முழுமையாக நம்பியதன் காரணமாகவே தமிழ் சாகாது, அதை யாராலும் சாகடிக்க முடியாது என்று நான் கூறுகிறேன்.
இங்கே நிறைய பேரோட கருத்து என்னவாக இருக்கிறது என்று பார்த்தால். தமிழ் படித்தால் சோறு கிடைக்காது. தமிழ் படித்தால் வேலை கிடைக்காது. தமிழ் படித்தால் வாழமுடியாது என்றெல்லாம் கூறப்படுகிறது. இதற்கு அவர்களின் தரப்பில் இருந்து பல நியாயங்கள் முன் வைக்கப்படுகின்றன. அது ஒரு வகையில் ஏற்றுகொள்ளும்படி இருந்தாலும், மறுவகையில் எதிர்க்கும்படியாகவும் இருக்கின்றது.
நமது பாட்டன் முப்பாட்டன் எல்லாம் பிறமொழி கற்றுக்கொண்டுதான் பிழைத்தானா? பிறமொழி தெரியாததால் செத்துப்போனவன் எவனாவது இந்த உலகத்தில் இருக்கிறானா? ஏன் இப்போ நம்ம ஊரு சோளகுட்டானும், தொப்பய்யாவும், நரியனும். தமிழ தவிர வேற மொழியே தெரியாமல் வாழவில்லையா? அட, உலகிலேயே இணையதளங்களில் ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக தமிழ்தான் அதிகபேர் பயன்படுதப்படுகிறதாக ஒரு ஆய்வு கூறுகிறது. ''தமிழை படித்துவிட்டு கணிப்பொறியில் எப்படி வேலை செய்வது என்று கேட்கிறீர்களே, கணிப்பொறியை கண்டுபிடித்தவன் வேறுமொழி கற்றுகொண்டா கண்டுபிடித்தான்?'' ''தமிழ் மட்டும் படித்தால் எப்படி கட்டுமான பொறியாளராக ஆவது என்று கேட்கிறீர்களே, தஞ்சை பெரியகோவிலை கட்டிய ராச ராச சோழன் ஆங்கிலம் படித்துவிட்டா அதை கட்டினான்?'' ஆங்கிலேயன் அவன் தாய்மொழியில் ஒரு பொருளை கண்டு பிடித்ததுபோல் உன் தாய் மொழியில் நீ ஒரு பொருளை கண்டுபிடிக்காமல் போனது யார் தவறு? உன்னுடைய தவறாக நீ நினைக்காதவரை உனக்கு உன் தாய்மொழி சோறு போடாது.
கடல்கடந்து பல நாடுகளை ஆண்ட கரிகால் சோழன் பிறமொழியை கற்றுகொண்டா ஆட்சி செய்தான்? பிறமொழி படித்துவிட்டா கல்லணை கட்டினான்?. பலமூட நம்பிக்கைகளும், அந்நிய ஊடுருவல்களும் நம்மை இயலாமையில் தள்ளிவிட்டுச் சென்றுவிட்டன. அதைப் பற்றி இங்கே எழுத முடியாது, வேறு ஒரு சந்தர்பத்தில் எழுதலாம்.
என்னடா இவன் இப்படி சொல்றான், அப்போ நாம் வேறுமொழி கற்றுகொள்ளக்கூடாதா என்று கேட்கத்தோன்றுகிறது அல்லவா?. வேறு மொழிகளும் கற்றுக்கொள்ள வேண்டும், ஆனால் வேறுமொழி மட்டும்தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்றநிலை வந்துவிடக்கூடாது என்பதே எனது வாதம். அறிவும் துணிவும் இருந்தால் எதையும் சாதிக்கலாம். ஏன் இந்த உலகத்தையே கூட தமிழ் பேசவைக்க முடியும்.
விவசாயம் செய்வதற்கும், வீரப்போர் செய்வதற்கும், மனிதபண்பு வளர்பதற்கும் வேறுமொழி பாடங்களில் இருந்தா கற்றுகொண்டான் நமது முப்பாட்டன்? முதல் தூங்கெயில் (விமானம்) கண்டுபிடித்தவன் தமிழன், முதல் கட்டுமர கப்பலையும் உருவாக்கியவன் தமிழன் இவற்றையெல்லாம் அவன் வேற்றுமொழி கற்றா செய்தான்...? இன்றைய காலகட்டம் வேறு என்றாலும் கூட, நமது முன்னோர்கள் நமக்கு காட்டிய பலவித்தைகளை நூதனப்படுத்தி அதை பரிணாம வளர்ச்சி பாதைக்கு கொண்டு வருவதில் நாம் மிகப்பெரிய தோல்வியை தழுவிவிட்டோம், அதன் விளைவு இன்று அந்நியமொழி இல்லாமல் வாழமுடியாது என்ற நிலைக்கு வந்து நிற்கிறது.
தனியார் பள்ளிகளில் தமிழிற்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. தமிழிற்கு மரியாதையில்லை, தமிழ்கற்று பயனில்லை என்றெல்லாம் சொல்லி தமிழ் படிக்க நினைக்கும் மாணவர்களின் எண்ணம் சிதைக்கப்படுகிறது. எனக்கு தெரிந்து தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தமிழ்த் தேர்வில் பெரும்பாலும் தோல்வியை தழுவி இருக்கிறார்கள். வெற்றியடைந்த சிலரும் மிக மிக குறைவான மதிப்பெண்ணையே பெற்று இருக்கிறார்கள். இப்படியே போனால் தமிழ் எப்படி வளரும் சொல்லுங்கள்? மேல்நிலை அல்லது உயர்நிலைவரைக்குமாவது தமிழ் கட்டாயப் பயிர்ச்சிமொழியாக இருக்குமேயானால் மாணவர்களின் தமிழ்த்திறமை வளரும். ''மேலும் மேல்நிலைவரையிலும் வரலாற்றுப் பாடங்களில் தமிழர் வரலாற்றினை அதிகப்படியாக சேர்க்கப்படுவதன் மூலம் அழிந்துகொண்டு இருக்கும் தமிழரின் வரலாறு பிற்கால சந்ததி அறியும் என்பதில் சந்தேகமில்லை.''
விபச்சாரமாகவும், வியாபாரமாகவும், பணத்துக்கு மாரடிக்கும் தனியார் கல்வி நிறுவனங்கள் அகற்றப்பட்டு, நவீன அரச கல்வி நிறுவனங்கள் அதிக அளவில் உருவாக்கப்படுமேயானால், படித்தவர்களுக்கு வேலையும் கிடைக்கும் தமிழும் வளரும்.
ஒரு மொழி என்றைக்குமே அழியாமல் இருக்குமேயானால், அதைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. என்றைக்குமே அழியாமல் நிலைத்து இருக்கும் மொழி எது என்றால், அந்த மொழிக்கு சொந்தமாக ஒரு நிலம் இருக்க வேண்டும், அதாவது அந்த மொழிக்கு ஒரு நாடு இருக்கவேண்டும், அந்த நாட்டிற்கு அந்த மொழியே தாய்மொழியாக இருக்க வேண்டும், அப்பொழுதுதான் எந்த ஒரு சூழ்நிலையிலும் அந்த மொழி வளம் குன்றாமல், அழிவிற்கு செல்லாமல் நிலைத்து நிற்கும்.
இன்னும் விளக்கமாக சொல்லவேண்டுமென்றால், இந்தியாவையே எடுத்துக்கொள்வோம், ''22 மொழிக்கும் மேலான மொழி இந்தியாவில் பேசப்படுகிறது, அதில் ஒருமொழி தமிழ்.'' ஆனால் இங்கே எல்லோருக்கும் தாய்மொழி இந்தி என்று சொல்லப்படுகிறது. 22 மொழிகளில் இந்தி ஒரு மொழி. பெரும்பான்மையோர் அதை பேசுவதால் மற்ற சிறுபான்மையருக்கும் அதுதான் தாய்மொழி ஆகிவிடாது. மற்ற சிறுபான்மையினரை இணைக்க அந்த மொழி ஒரு பாலமாக இருக்கிறது என்றுதான் சொல்ல முடியும். ஆனால் அதுமட்டும்தான் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் தாய்மொழி என்று சொல்வது எந்தவகையில் பொருந்துமென்று எனக்குத் தெரியவில்லை. இப்படி தாய்மொழியும், ஆட்சி மொழியும் வேறுமொழியாக இருக்கும் நமது நாட்டில் நாம் நமது மொழியை அழிவில் இருந்து நிச்சயம் காப்பாற்றித்தான் ஆகவேண்டும். இல்லையேல் அந்நியமொழி எளிதில் நம்மை தாக்கிவிடும். தமிழனுக்கு என்று ஒரு நாடு இருந்து அங்கு தமிழ் ஆட்சி மொழியாக இருக்குமேயானால் அங்கே தமிழ் அழிந்துவிடும் என்ற அச்சம் நமக்கு வரவே வராது. வேற்றுமொழி ஆளுகின்ற நாட்டில் நாம் வாழ்வதன் ஒரே காரணத்தில்னால்தான் நமக்கு நமது மொழி அழிந்துவிடுமோ என்ற அச்சம் எழுகிறது. இந்த அச்சம் நியாயமானது என்றே நான் கூறுகிறேன்.
இலக்கண இலக்கியங்கள் தவறாகவோ, அல்லது படைப்புகள் தரமற்றதாகவோ இருந்தால் மட்டும்தான் ஒருமொழி அழியும் என்ற நிலையில் இருந்து கொஞ்சம் மேலே வந்து, பன்முகத்தன்மையோடு ஆராய்ந்து ஒரு முடிவிற்கு வருவதே சாலச் சிறந்ததென்பது எனது கருத்தாகும்.
மேலும் மொழியழிவின் பன்முகத்தன்மையில், நான் பிறகு கூறுகிறேன் என்று சொன்ன விடயத்திற்கு வருவோம்.
ஜன்னல் என்ற போர்சுகீசிய மொழிமட்டுமே தெரிந்த நமக்கு, ஜன்னல் கு தமிழில் என்னவென்று தெரியுமா? சரி தெரியும் என்று வைத்துக்கொள்வோம், ஆனால் ''காலதர்'' என்று யாராவது தமிழில் சொல்லி நீங்கள் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? அல்லது நீங்கள்தான் சொல்லி இருக்கிறீர்களா? ''காலதர்'' என்ற தமிழ்ச்சொல் என்ன ஆனது? செத்து போய்விட்டது. ஆமாம், பேச்சு வழக்கில் இல்லாதசொல் செத்துப்போன சொல்தான். இப்படி ஒரு சொல் தமிழில் இருப்பதையும் இருந்ததையும் நமது பிற்காலம் நிச்சயம் அறியாது. அப்படி அறியாத சொல் இவர்களுக்கு அவசியமில்லாத சொல்லாதகத்தானே இருக்கும். ஒரு சொல்லை எவ்வளவு கடினப்பட்டு கண்டுபிடித்து அதற்கு பொருள் உண்டாக்கி இருப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு சொல்லை சாதாரணமாக நாம் இழந்து விடுவது, நமது அழிவிற்கே அடிகோலும் என்பதில் சந்தேகமில்லை.
சைக்கிள் '' என்ற சொல்லை மிதிவண்டி என்று யாரும் சொல்வதில்லை, அப்போ ''மிதிவண்டி'' என்ற சொல் செத்துபோய்விட்டது..
டீ என்ற சொல்லை தேநீர் என்று யாரும் சொல்வதில்லை, அப்போ ''தேநீர்'' என்ற தமிழ்ச்சொல் செத்து போய்விட்டது.
ஜீஸ் என்று எல்லோரும் சொல்கிறார்கள், ஆனால் ''சாறு'' என்று சொல்வதில் சாறு என்று சொல்லப்படாத சொல் செத்துத்தானே போகும்.
''இப்படித்தான் பல சொற்க்கள் காணாமலே போய்விட்டன தமிழில்.'' இன்னொரு மொழி ஊடுருவலால்.'' அது எப்படி நம்மமொழி சாகும் னு கேட்டவர்கள் இப்பொழுது புரிந்துகொண்டு இருப்பார்கள் என்று நினைக்கிறேன். இன்னும் விபரமாக கூற வேண்டுமானால், இப்போ மிதிவண்டி என்ற சொல்லிற்கு பதிலாக நாம் வேறு எந்த சொல்லையுமே பயன்படுத்தாமல் இருந்தோமானால், அல்லது அதற்கு பதிலாக வேறு ஒரு புதிய தமிழ்ச் சொல்லை பயன்படுதினோமானால், பிறமொழி ஊடுருவலால்தான் நம்மொழி செத்து போனது என்று கூற இயலாது. ''ஆனால், மிதிவண்டி என்ற வார்த்தைக்கு பதிலாக நாம் சைக்கிள் என்று வேறு மொழியை பேசுகிறோம், அப்போ மிதிவண்டி என்ற சொல் சாவதற்குக் காரணம் இந்த சைக்கிள் என்ற அந்நிய சொல்லே ஆகும்''. அதனால் அந்நிய மொழியின் ஊடுருவலால்தான் ஒருமொழி அழிவை நோக்கிச்செல்லும் என்பதை மறுக்க இயலாது. ஏனென்றால், வேறு காரணங்களால் அத்தனை எளிதாக ஒரு மொழி அழிந்துபோய்விட வாய்ப்புகள் மிக குறைவே.
இப்படி ஒரு ஒரு சொல்லாக செத்துக்கொண்டே இருந்தால் காலப்போக்கில் மொத்த சொல்லும் செத்துபோய், பெயருக்கு மட்டுமே தமிழென்ற தாய்மொழி இருக்கும், முழுக்க முழுக்க நம்மை அந்நியமொழி ஆக்கிரமித்துவிடும். இப்படி எல்லாம் சொல்வதால் பிறமொழி கற்றுகொள்ளகூடாது என்று நான் கூறுவதாக அர்த்தமில்லை. அனைத்து மொழிகளையும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் சிறு வயதில் இருந்தே தாய்ப்பால் ஊட்டுவதுபோல் பிறமொழிகளை ஊட்டாமல் தமிழை மட்டுமே ஊட்டவேண்டும். சோற்றுக்காக பிறமொழி கற்கும் அவலநிலை விடுத்து, தமிழின் தொன்மையை பிறமொழியாலர்களிடம் பகிர்ந்துகொள்வதற்கு பிறமொழி கற்கும் நிலைவரவேண்டும். மேல்நிலை அல்லது உயர்நிலை வரையிலாவது தமிழ் கட்டாய பாடமாக இருக்கவேண்டும். தனியார் பள்ளிகளும் இதை கடைபிடிக்கவேண்டும், இதற்கு தமிழக அரசு சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்ற தத்துவத்தின் மேல் கருவாகியே இந்த கட்டுரை உருவாகியது.
-----------------நன்றிகளுடன். நிலாசூரியன்.