தழும்புகள் -ஈழ தமிழ் பெண்ணின் வாழ்க்கை

காமவெறிப் பிடித்த கயவர் கூட்டத்தில் கதியற்று மாட்டிய
தருணமதில் ....!!

கை கால் கட்டப்பட்டு
ஒட்டுத்துணியின்றி உடலில்
பட்டப்பகலில் வெட்டவெயிலில்
பகிரங்ககாம வேட்டை .

இச்சை தலைக்கேற
இரையாக மாறியது இளம் உடல்
கை கால்களால் மட்டுமல்ல
பற்களாலும் பதம் பார்க்கப்பட்டது
பாவையின் அங்கங்கள் ...

காட்சியின் கொடூரம் காண இயலாமல்
கதிரவனும் கண்மூடிக்கொண்டான்
காரிருலாக்கி .

கண்ணான கற்பு களங்கம் ஆகிற்று
இன்னுயிர் எதற்கு .?
இல்லை இருப்பினும் வாழ வேண்டும்
உள்ளம் உள்ளுக்குள் உறுதியானது

கடித்துக் குதறப்பட்ட காயத்தோடு
கட்டவிழ்த்து விடப்பட்டது ..

உயிர்ப் பிழைக்க வேண்டும் என்று
ஓடிய ஓட்டத்தில்
நிர்வாணம் என்பதையும்
மறந்தது மேனி ..

உயிர் பிழைத்து விட்டேன்
அத்தோடு
என் உணர்வுகளையும் புதைத்து விட்டேன் ..

ஆனால்

நான் உடைமாற்றும் ஒவ்வொரு
நொடியும்
உடம்பில் உள்ள தழும்புகள்
ஓசையின்றி உரைக்கின்றது .

ஒரு நாள் அல்ல ஒரு நாள் வரும்
அன்று
சிரம கொய்வேன் உன்னை சிதைத்தவனை என்று ...

இது தலைவிரி கோலமாய் நின்ற பாஞ்சாலி சபதம் அல்ல
பண்பாடு காத்து வந்த
தமிழ் ஈழப் பெண்ணின் சபதம்



இது இன்று வைத்தியசாலையில் ஒரு பெண் சொன்ன உண்மையான சில விஷயங்கள் ....அவரின் உடலில் தழும்புகளை கண்டேன்......கண்ணீரை இன்றி வேறு எதுவும் என்னால் முடியவில்லை...........மனநிலை பாதிக்கப்பட்டு தற்போது தேறியுள்ளார்..

இது கற்பனை அல்ல...

எழுதியவர் : கயல்விழி (19-Jan-15, 4:26 pm)
பார்வை : 327

மேலே