சுடுகாட்டுத் தெருவொன்றில்

சுடுகாட்டின் அந்தப் பக்கமாக
முகத்தையொத்த அரைச்சுவரும்
அதோடினைந்த பாசிநிற
முண்டம் போன்ற மீதமும்

அவ்வப்போது அசைவதாகவும்
அவரே கண்டதாகவும்
சொல்லிச் சொல்லி
பயந்த பார்த்தி இன்றில்லை

மொத்தமாக சுறு சுறுப்பாக
உருமாறிப்போயிருந்த
அச்சுடுகாடு, தெருவாகி

யார் யாரோ கடைதிறக்க
யார் யாரோ கடந்திருக்க
யார் யாரோ வாழ்ந்திருக்க

அத்தனை அடையாள
மாற்றங்களோடும்.
ஆனாலும் கனகுவிற்கு

அவ்விடத்தைக்
கடக்கும் போதினில்
இம்முதுமையிலும்

நண்பன் பார்த்தியின்
கண்களும் வார்த்தைகளும்
நினைவினில் வராமலிருப்பதில்லை.

அந்தப் பக்கம்
கனகு அறியாமலும்
திரும்பிப் பார்ப்பதில்லை.

இதைக் கேட்டே வளர்ந்த
முத்துவுக்கும் அவ்விடம் கடக்கும்
சில இராத்திரிகளில்
பார்த்தித் தாத்தாவின் ஞாபகம்
வராமலிருப்பதில்லை

கனகுவை அவ்விடம்
வரவிடாமல் செய்த
பார்த்திக்கு மட்டுமறிந்த

ஏதோ ஒன்று
அவருடனே மடிந்துவிட
பயமெனும் கொடும்பாவியை

பாழ்சுவர் தாங்கி நின்றது
பல தலைமுறைகளாய்...

சுவரிடித்தும் மாறவில்லை
சுற்றம் திரிந்தும் ஓயவில்லை
கனகுவின் உதறல்கள்
வழிவழியாய்...

எழுதியவர் : சர் நா (20-Jan-15, 5:36 pm)
பார்வை : 171

மேலே