நீ ஒளித்துவைத்த அந்தப்புன்னகை
![](https://eluthu.com/images/loading.gif)
என் வாழ்க்கையின்
ஏதோவொரு நாளில்
நீ
தென்படுகிறாய்
வாசித்துக்
கொண்டிருக்கும்
புத்தகத்தின்
ஏதோவொரு பக்கத்தில்
மயிலிறகு
தென்படுவது போல !
========================
எதிர்பாராத
தருணத்தில்
நம் கண்கள்
கலந்துவிட்ட
ஒரு நொடியில்
நீ
ஒளித்துவைத்த
அந்தப் புன்னகையை
ஒருநாள்
என் இதயத்தில்
கண்டெடுக்கிறேன் !
========================
பற்கள்
தந்தியடிக்க
ஆறுமணி
பஸ்ஸுக்குக்
காத்திருக்கும்
என்
மார்கழி மாதத்து
அதிகாலைகளுக்கு
கம்பளி போர்த்தியவள்
நீ !
========================
இனிப்பு கொடுத்து
கொண்டாடத் தோன்றுகிறது
எனக்கு
நீ வரும்
ஒவ்வொரு நாளையும் !
========================
இந்த
உலகத்திலேயே
உயர்ந்த
புகழ்ச்சியொன்று
உன் அழகை
அண்ணாந்து
பார்த்துக் கொண்டிருக்கிறது !
========================
நானும்
அழகாகிவிடுகிறேன் ....
நீ
புன்னகைக்கும் போது !
========================
நீயெடுத்த
செல்பி கண்டு
தலைகுனிகிறான்
சொர்க்கத்திலிருந்தபடி
லியனார்டோ டாவின்சி !
========================
உன்னைப் பற்றிக்
கவிதையெழுத
முயற்சித்து
வராமல்
கசக்கிப்போட்ட
அந்தத் தாளை
எறும்புகள்
மொய்க்கின்றன !
========================
உன்னைப்பார்த்தால்
என் கண்களுக்கு
வருகிறது
பார்த்துக்கொண்டேயிருக்கும்
வியாதி !
========================
ஓர் இனிப்பின் மீது
உட்கார்ந்து கொண்டிருக்கும்
ஓர் ஈ யைப்போல
எனது கவிதையின் மீது
உட்கார்ந்து கொண்டிருக்கும்
உனது
புன்னகை !