என் அண்ணன்

காலை விழிப்பில் நான்
கேட்கும் முதல் வாழ்த்து-என்றும்
உன்னுடையதே!

சின்ன சண்டையோ
செல்லச் சண்டையோ முதலில்
மன்னிப்புக்கோரி
மனதை மகிழ்விப்பது நீதான்!

திட்டுவாங்குவதற்காகவே
திறமையாய் நடிப்பவன் நீ!-என்னிடம்
அடிவாங்குவதில்
ஆனந்தம் உனக்கு!
வீட்டில் என்னைப் போட்டுத் தருவதில்
வில்லன் நீ!

அறிவுரை சொல்லி சிலநேரங்களில்
அழவைத்தாலும் - என்னை
ஆழமாய் யோசிக்கவைப்பவன் நீ!

என் குறும்புகளை
நேசிக்கும் அப்பா நீ!
என் தவறுகளைக்
கண்டிக்கும் அம்மா நீ!
என்னை
இளவரசியாக்கி
இன்பம் காணும் என்
அண்ணன் நீ!

கவலைகளின் போது - என்
கரம்பிடித்து தூக்கிவிடுபவன் நீ!
வாழ்க்கைப் பாதையில் எனது
நடைவண்டியாய் - என்னை
நடைபயில வைத்தவன் நீ!

சற்று பயமாகத் தானிருக்கிறது
மணம் கண்டு
மறுவீட்டிற்குச் சென்றுவிட்டால்
மனமுடைந்து போவாயோ என்று!

அண்ணா!
உன்னிடம் ஒரு வேண்டுகோள்
வீட்டோடு மாப்பிள்ளை பார்த்துவிடு!
நீ
விரும்பியபடி
உன்னுடனே இருந்துவிடுகிறேன்!

எழுதியவர் : பபியோலா (30-Jan-15, 7:52 pm)
பார்வை : 763

மேலே