சுஜா - ஒரு சின்ன அறிமுகம்
அவள் அப்படித்தான்
``````````````````````````````
"ஏய் , நீ திருந்தவே மாட்டியாடி..?"
"எல்லாம் நாளைக்குத் திருந்திக்கிறேன்...இப்போப் போயி சூடா காம்ப்ளான் போட்டு எடுத்துட்டு வாங்க மம்மி.."
"பல்லையாவது விளக்குடி.."
"அதெல்லாம் நேத்தே விளக்கியாச்சு...போம்மா போம்மா..."
"கழுதை வயசாகுது...இன்னும் எங்க போறோம் எந்தத் தெருவுல இருக்கோமுன்னு கூடத் தெரியாம காணாமப் போறே...ஒவ்வொரு முறையும் தேடித் தேடிக் கண்டு புடிக்க வேண்டியிருக்கு...எங்கயாவது தொலைஞ்சு போயிட்டு , போன் பண்ணி 'அம்மா எங்க இருக்கேன்னு எனக்கேத் தெரியலம்மா , வந்து கூட்டிட்டுப் போம்மா'ங்கறது...இதே வேலையாப் போய்டுச்சுடி உனக்கு..."
".............."
"ஆனா எனக்கு சலிச்சுப் போய்டுச்சு உன்னைத் தேடித் தேடி அலைஞ்சு.. இன்னொரு முறை தொலைஞ்சு போனீன்னா அப்படியே விட்டுருவேன், தேடிட்டு வர மாட்டேன்..சொல்லிட்டேன்..எந்தத் தெருவுல போயிட்டு இருக்கோமுன்னு கூட அடையாளம் வெச்சுக்க மாட்டியாடி...பச்சைக் குழந்தையாடி நீ...இப்படியாடி தொலைஞ்சு போவே..?"
"அதான் வந்துட்டேன் இல்ல..காணாமப் போயித் திரும்பி வந்த புள்ளையப் பாத்துப் பேசுற பேச்சா இது..."
"ம்கும் , இது முதல் தடவைன்னா , கட்டிப் புடிச்சுக் கொஞ்சலாம்...238 ஆவது முறையாக் காணாமப் போறதுக்கெல்லாம் தூக்கி வெச்சுத் தாலாட்டிட்டு இருக்க முடியாதுடி..."
"ஓ , எண்ணி வேற வெச்சு இருக்கியா.."
"காணாமப் போறே சரி , போற பக்கமெல்லாம் ஏதாவது வம்பு வளத்துட்டு வர்றியே , எத்தனை வழக்கைத் தாண்டி நானும் சமாளிக்கிறது...அன்னைக்கு அப்படித்தான் , தெருவுல எவனோ ஒருத்தன் ஏதோ ஒரு புள்ளையைக் கிண்டல் பண்ணினான்னு அவனைத் தெருத் தெருவா ஓட விட்டுத் துரத்தித் துரத்தி அடிச்சு இருக்கே...எதுக்குடி,,எதுக்குடி உனக்கிந்த ஊர் வம்பெல்லாம்..போனமா ஒழுங்கா வீடு வந்து சேர்ந்தமான்னு வரவே மாட்டியாடி நீ..?"
"ம்ம்ம்...அப்படி எல்லாம் லேசுல விட முடியாது..சமுதாயப் பிரச்சனை....ஏன் போன மாசம் ஒருத்தன் தெருவுல அடிபட்டுக் கிடந்தான்னு அவனை ஆஸ்பத்திரி வரைக்கும் கூட்டிட்டுப் போயிட்டு , அவன் வீடு வரைக்கும் கொண்டு போய் விட்டுட்டு , அவன் கிட்டயே நம்ம வீட்டுக்கு வர்றதுக்கு வழி கேட்டு ஒழுங்கா வீடு வந்து சேர்ந்தேன் இல்ல...அதை எல்லாம் பாராட்ட மாட்டியே நீ..."
"ஆமா போ...அவன் தெருவுல கவுந்தடிச்சு விழுந்ததே நீ எவனோ ஒருத்தனைத் துரத்திட்டுத் தப தபன்னு நடுத்தெருவுல ஓடினதுனால தானேடி..."
"சரி சரி விடுங்க...இப்போ காம்ப்ளான் குடுக்க முடியுமா முடியாதா...?"
"இதுக்கெல்லாம் குறைச்சல் இல்ல...உங்க கராத்தே மாஸ்டர் இப்போத்தான் போன் பண்ணினார்...ஏதோ முக்கியமான வேலையா வெளியூர் போறாராமா...ரெண்டு நாளைக்கு வர வேண்டாமுன்னு சொல்லச் சொன்னார்..."
"அந்தாளுக்கு வேற வேலை இல்ல...மாச மாசம் காசை மட்டும் கணக்கா வாங்கிட்டு எப்போப் பாரு லீவு விட்டுருவான்..."
"ஏய் , நீ யாரையுமே மதிக்க மாட்டியாடி..?"
"எல்லாம் மதிக்கலாம் மதிக்கலாம்....சௌமியாவோட அம்மாவுக்கு உடம்பு சரி இல்லையாமா..போய் ஒரு எட்டுப் பாத்துட்டு வந்துடுறேன்..."
"போச்சுடா...கடவுளே...எனக்கு இப்போவே லேசா நெஞ்சு வலிக்கிற மாதிரி இருக்குதே..."
"ஹார்ட் அட்டாக் வர்றதுக்குள்ள வந்துடுறேன் மா...சௌமியா வீட்டுக்கு எத்தனை முறை போய் இருக்கேன்..? அவ வீட்டுக்குப் போற வழி எனக்கு நினைவு இருக்குது மா...ஒழுங்காப் போயிட்டு , பத்திரமா வந்துடுறேன்..."
"சரி சரி ஒரு மணி நேரத்துல வந்துரு...புரிஞ்சுதா..."
"ம்ம்..பாக்கலாம் பாக்கலாம்..."
அவளது வகுப்புத் தோழியான சௌம்யா வீட்டுக்குச் செல்வதற்காகத் தயாராகி , அம்மாவிடம் சொல்லிக் கொண்டு , தெருவில் இறங்கி நடந்தாள் அவள்...
யோசனைகள் எல்லாம் ரொம்ப பலமாக இருந்தது..
'ஏன் நம்மளை அம்மா இந்தத் திட்டு திட்டுது'
'அப்படி என்ன தப்புப் பண்ணிட்டோம்'
'நிஜமாவே ஏதாவது பண்ணி இருப்போமோ'
'ம்ம்..அப்படி ஒண்ணும் பெரிசா செஞ்ச மாதிரி தெரியலையே..'
'அப்புறம் எதுக்கு அம்மா தினமும் தவறாமத் திட்டுது'
'எதுவுமே புரியலையே..'
'ம்ம்...அதைக் கண்டுபுடிச்சே தீருவேன்..'
யோசித்துக் கொண்டே 20 நிமிடம் நடந்து இருப்பாள்...இன்னும் 10 நிமிஷம் நடக்கணும் சௌம்யா வீட்டுக்கு...
ஆனால் , விதி தான் அவ்வளவு எளிதில் இவளை விடாதே...
எப்பவுமே சதி செய்து விளையாடும் விதி , இன்றோ அவள் அந்த இடத்திற்கு வரும் முன்னமே அங்கு வந்து அவளுக்காகக் காத்திருந்தது..
ஆம்...அதேதான்...
நீங்கள் நினைத்தது சரிதான்...
நடக்கப் போகிறது..
நடக்கவே போகிறது அந்தச் சம்பவம்...
இவளுக்காகவென்றே காத்திருந்த அந்தச் சம்பவம்...
சௌம்யா வீட்டை அடைய இன்னும் 4 தெருக்களே இருந்த நிலையில் , எங்கிருந்தோ எவனோ ஒருத்தன் இவள் பின்னாலிருந்து தட தடவென்று ஓடி வந்து இவள் மேல் மோதித் தள்ளி விட்டு , இவளைக் கடந்து இவளுக்கு முன்னால் ஓடினான்..
"அடிங்க...எவண்டா அவன்.." , அவன் முட்டித் தள்ளி ஓடியதில் நிலை தடுமாறிக் கோபமுற்றாள் இவள்...
இவள் உணரும் முன்னமே , இவளுக்குக் கொஞ்சம் தள்ளிக் கைக்குழந்தையோடு நடந்து சென்று கொண்டிருந்த ஒரு அக்காவின் குழந்தையோட கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடினான் அவன்...
அந்த அக்கா அலறத் தொடங்கியது , "ஐயோ திருடன் திருடன் செயினை அத்துக்கிட்டு ஓடுறான் ,யாராவது வாங்களேன் , ஐயோ யாராவது அவனைப் புடிங்களேன்..அடப்பாவி ஓடுறானே...ஐயோ கடவுளே.." , தலையில் அடித்துக் கொண்டு அலறியது...
யாருமே இல்லாத அந்தத் தெருவில் யார் வருவார் அந்தக்காவைக் காப்பாற்ற , நம்மவளைத் தவிர...
எப்போதும் விழிப்பு நிலையிலேயே அவளுக்குள் இருக்கும் மிருகம் , இப்போது பயங்கரமாய் சீறிக் கொண்டு விட்டது...
"அக்கா , இருங்க இருங்க அலறாதிங்க..."
சொல்லியவாறே , அந்தத் திருடனைப் பிடிக்கத் தயாராகி , அவனைத் துரத்திக் கொண்டு மின்னலாய் ஓட்டமெடுத்தாள் அவள்...ஆனால் அவனோ நீண்ட தூரம் ஓடியிருந்தான்...
இவள் விடுவதாய் இல்லை...சளைக்காமல் மூச்சைப் பிடித்துக் கொண்டு ஓடினாள்... இவளது மொத்த கவனமும் கண் இமைக்காமல் அவனது மீதே இருந்தது...சாலையைக் கடந்த அவன் இடது புறமாய் இருந்த ஒரு தெருவுக்குள் புகுந்து ஓடினான்...
இவள் துரத்திக் கொண்டு வருவதை திரும்பிப் பார்த்த அந்தத் திருடன் , "ஏய் வாடி வா..முடிஞ்சா புடிடி புடி.." , என்று ஏளனமாய்க் கத்திக் கொண்டே ஓடினான்...
அதைக் கேட்ட இவளுக்குக் கோவம் தலைகேறிக் கண்கள் சிவந்தது...கால்கள் அவளையும் மீறி இன்னும் அதிக வேகமெடுத்தன...
அவனைக் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கினாள் இவள்...
இவள் இவ்வளவு வேகமாக வெறித்தனமாய் ஓடி வருவதைப் பார்த்த அவன் மிரண்டு தான் விட்டான்...ஒரு கட்டத்தில் அவனது ஓட்டம் சற்று தடுமாறத் தொடங்கியது...
'இது என்ன புள்ளையா இல்ல பேயா , இப்படி ஓடுது' என்று நினைத்துக் கொண்டு இவளைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே ஓடியதில் , ஒரு தந்திக் கம்பத்தில் சளேரென்று மோதிக் கீழே விழுந்தான்...
இந்த வாய்ப்பைப் பயன்படுத்திய அவள் , அப்படியே பாய்ந்து சென்று , மல்லாக்க விழுந்து கிடந்த அவனது நெஞ்சில் முழங்காலை வைத்து ஊன்றி , ஓங்கி அவனது மூஞ்சியில் ஒரு குத்து விட்டாள்...
"எடுடா செயினை.."
ஆத்திரம் தாங்காத அவன் ஒளித்து வைத்திருந்த பிளேடை டக்கென்று எடுத்து இவளது இடது கையில் கூட்டல் குறி ஒன்று போட்டு விட்டான்...
" ஒ சட் ..."
வலியால் அவள் துடித்த நேரத்தில் எழுந்து தப்பித்து ஓடினான் அவன்...
ஆனால் , இவள் சளைக்கவில்லை...கண்ணிமைக்கும் நேரத்தில் சுதாரித்துக் கொண்டு மீண்டும் எழுந்து ஓடினாள்...
கண்ணுக்கெட்டும் தூரத்தில் தான் அவன் ஓடிக்கொண்டு இருந்தான்..நொடியில் சுற்றும் முற்றும் அவளது கண்கள் ஆராய்ந்தன...அங்கே தெருவோரத்தில் கொட்டி வைக்கப்பட்டிருந்த செங்கற்களில் ஒன்றை எடுத்து நேராகக் குறி பார்த்து வீசினாள்..அது பட்டென்று அவனது கணுக்கால்களில் பட்டு அவன் நிலைதடுமாறிக் கீழே விழுந்தான்...
கீழே விழுந்து கிடந்தவனுக்கு அருகில் போய் நின்று அவனை முறைத்துப் பார்த்தவள் , இருந்த கோவத்தை எல்லாம் சேர்த்து வைத்து , அவனது முழங்காலில் ஓங்கி ஒரு மிதி மிதித்தாள்...உள்ளே ஏதோ நொறுங்கும் சத்தம் கேட்டது...
"ஏண்டா டேய் , உடைஞ்சு போன விளக்கமாத்துக் குச்சி மாதிரி இருந்துக்கிட்டுத் தங்கச் சங்கிலி கேக்குதாடா உனக்கு..எடுடா அதை..."
ஒரு கட்டத்தில் வெறுத்தே போன அவன் , அந்தத் தங்கச் சங்கிலியை அவளது முகத்தில் விசிறி அடித்து விட்டு , எழுந்து சிரமப்பட்டு நொண்டிக் கொண்டே ஓடினான்..
போனவன் சற்று தூரம் சென்று திரும்பிப் பார்த்துச் சொன்னான் , "ஏய் பத்ரகாளி , நீயெல்லாம் விளங்கவே மாட்டேடி.."
"டேய் போடா , எனக்கே தெரியுண்டா அது.."
அதற்குள் அந்தத் தங்கச் சங்கிலிக்குச் சொந்தக்கார அக்கா அங்கு வந்து விட்டிருந்தது...ஓடும்போது தெறித்து விழுந்த இவளது கைப்பையையும் பத்திரமாகக் கொண்டு வந்து இருந்தது அந்த அக்கா....
"அச்சச்சோ என்னம்மா கையெல்லாம் ரத்தம்...?"
"பரவா இல்ல விடுங்கக்கா...இந்தாங்கக்கா செயின்.."
"அப்பாடா ..ரொம்ப நன்றிம்மா..என் குழந்தைக்குன்னு முதல் முதலா செஞ்ச நகைம்மா இது...பறி போயிடுச்சேன்னு மனசு ஒரு நிமிஷம் பதறிப் போய்டுச்சு மா...எங்கிருந்தோ தெய்வமாட்ட வந்து காப்பாத்திக் குடுத்தே மா..நீ நல்லா இருப்பே...ரொம்ப நன்றிம்மா...நான் வர்றேன் மா." , என்று சொல்லி விட்டு சந்தோசமாகக் கிளம்பியது அந்த அக்கா...
அந்த அக்கா சென்ற திசையையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள் அவள்...
'நம்ம அம்மாவைத் தவிர மத்த எல்லாரும் நம்மளைப் பாராட்டுறாங்களே...ம்ம்..'
யோசித்துக் கொண்டே நின்றிருந்தாள்..
தூரத்தில் சென்ற அந்த அக்கா , திரும்பி நின்று , "அம்மாடி , பாத்துப் போம்மா ..பத்திரம்..." , என்று சொல்லிவிட்டுச் சாலை வளைவில் மறைந்து விட்டது...
என்னது 'பாத்துப் போம்மா'வா
'பாத்துப் போம்மா'
'பாத்துப் போம்மா'
'பாத்துப் போம்மா'
ஒரு 34 முறை எதிரொலித்து அடங்கியது இந்த வார்த்தைகள் அவளது காதுகளில்...அப்போத்தான் அவளுக்கு உறைத்தது...
'அடக் கடவுளே ..ரொம்ப தூரம் ஓடி வந்துட்டேனா...எந்த ஊரு இது ..நாம எங்க நிக்கிறோம்...ஒண்ணுமே புரியலையே...இப்போ என்ன பண்றது..வழி கேக்கக் கூட ஒருத்தனையும் காணோமே இந்தத் தெருவில்..என்னடா ஏரியா இது..' என்று தனக்குத் தானே நொந்து கொண்டவள் , கைப்பையைத் திறந்து பணத்தை எடுத்துக் கொண்டு அருகில் பிசிஒ எங்க இருக்கு என்று தேடினாள் அவளது அம்மாவுக்குப் போன் பண்ண...
சுஜா...
அவள் திருந்த மாட்டாள்...அவளால் திருந்தவும் முடியாது...எதுக்காகத் திருந்த வேண்டும்...திருந்தியே ஆகணுங்கற அளவுக்கு அவள் எந்தத் தப்பும் செய்து விடவில்லையே...
யார் கண்டா ,,, வருங்காலத்துல , ஊரையே கூடக் காப்பாத்தலாம் இவள் ஒரு நாள்...ஆனா அப்பவும் , இப்படித்தான் வீட்டுக்குப் போக வழி தெரியாமத் திணறிக்கிட்டு அவங்க அம்மாவுக்குப் போன் பண்ணுவா...
இப்ப மட்டும் இல்லைங்க , சுஜா எப்பவுமே இப்படித்தான்....!!!!!
- கிருத்திகா தாஸ் ...